ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

சென்னை ..உற்பத்தி இலக்கைத் தாண்டிய ரயில் பெட்டி தொழிற்சாலை .. ஐசிஎஃப்!

உற்பத்தி இலக்கைத் தாண்டிய ஐசிஎஃப்!
மின்னம்பலம்: ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனமான ஐசிஎஃப் (Integral Coach Factory), 2017-18 நிதியாண்டுக்கான தனது உற்பத்தி அளவைத் தாண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சென்னையில், மத்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வரும் ஐசிஎஃப் தொழிற்சாலை உள்நாட்டுத் தேவைக்கான ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதோடு, வெளிநாடுகளுக்கும் ரயில் பெட்டிகளை இங்கிருந்து ஏற்றுமதி செய்கிறது. இந்த நிலையில் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 2017-18 நிதியாண்டில் இதன் உற்பத்தி இலக்கைத் தாண்டி மொத்தம் 2,503 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் மொத்தம் 2,464 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதற்கு முந்தைய 2016-17 நிதியாண்டில் ஐசிஎஃப் மொத்தம் 2,277 ரயில் பெட்டிகளைத் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஐசிஎஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரயில் பெட்டிகள் உற்பத்தியில் ஐசிஎஃப் இலக்கைத் தாண்டி சாதனைப் படைத்துள்ளது. ரயில்வே வாரியம் மொத்தம் 2,464 பெட்டிகளைத் தயாரிக்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், ஐசிஎஃப் மொத்தம் 2,503 பெட்டிகளைத் தயாரித்து சாதனைப் புரிந்துள்ளது. மொத்த உற்பத்தியில் 73 சதவிகிதப் பெட்டிகள் எஃகால் ஆன பெட்டிகளாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஎஃப் தயாரித்த 2500ஆவது ரயில் பெட்டி மார்ச் 31ஆம் தேதி ஐசிஎஃப் மூத்த ஊழியர்களால் பொது மேலாளர் முன்னிலையில் அனுப்பிவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: