ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

ஏர் இந்தியா பங்குகளை விற்பது மற்றொரு ஊழலுக்கு இட்டுச் செல்லும்: சு.சுவாமி

tamilthehindu :பாஜக மூத்த தலைவர் சு. சுவாமி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது மற்றொரு மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக அரசின் செயல்பாடுகளை, கட்சிக்குள்ளே இருந்து கொண்டு சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்து, கடும் நெருக்கடிகளை அளித்து வருகிறார்.
பெரும் நஷ்டத்தில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய கடந்த 28-ம் தேதி மத்திய அரசு முறைப்படி அறிவிப்பு வெளியிட்டது. மேலும் விமானத்தை இயக்கும் பொறுப்பை தனியாருக்கு தாரைவார்க்கவும் முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''நம்முடைய நாட்டின் சொத்தாக இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தையும் அதன் பங்குகளையும் தனியாருக்கு விற்கும் அரசின் செயல் வேதனை அளிக்கிறது.
அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கிறோம், இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'' என்றார்.
இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி ஏர் இந்தியா விமான நிறுவன பங்குகளை அரசு விற்பது தொடர்பாக தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
அவரின் பதிவில் கூறியிருப்பதாவது:
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது என்பதே மிகப்பெரிய ஊழலுக்கு இட்டுச் செல்லும். குடும்ப சொத்தை விற்பனை செய்வதற்கு பெயர், பங்குகளை விற்பனை செய்வது என அர்த்தம் அல்ல. நான் ஏர் இந்தியா நிறுவன பங்குகள் விற்பனையை விவகாரத்தை தொடர்ந்து கண்காணிப்பேன், ஏதேனும் தவறுக்கு வழிவகுத்தால், நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனுத் தாக்கல் செய்வேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: