ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

BBC : பிரான்ஸ் குடியரசு தேர்தல் .. முதல் சுற்று இன்று .. தீவிர வலதுசாரி லு பென் அம்மையார் வெல்வாரா ?

ஐந்து முக்கிய வேட்பாளர்கள் ஃபிரான்ஸ்வா ஃபியோங், பென்வா அம்மூங், மரைன் லி பென், இமானுவேல் மக்ரோங் மற்றும் சாங்லுக் மெலாங்ஷாங் >இன்று , ஞாயிற்றுக்கிழமை (23 ஏப்ரல்) நடைபெறவிருக்கும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 11 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர் அதில் 4 பேர் போட்டியில் முன்னணி வேட்பாளர்கள், ஆனால் அதில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதை கணிக்க முடியாத நிலையில், முன்னிலை பெரும் இரண்டு பேருக்கான போட்டி மே 7 ஆம் தேதியன்று நடைபெறும்.
மரைன் லி பென்னை வேட்பாளராக களமிறக்கி, கடந்த 15 வருடங்களில் முதல்முறையாக தீவிர வலதுசாரி கட்சி வெற்றி பெரும் வாய்ப்பை அதிகமாக பெற்றுள்ளது; இருப்பினும் மத்தியவாதக் கட்சியைச் சேர்ந்த இமானுவேல் மக்ரூங், கருத்துக் கணிப்புகளில் மரைன் லி பென்னிற்கு நிகராக இருக்கிறார்.

புகழ்பெற்ற முன்னாள் மத்திய வலதுசாரி குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஃபிரான்ஸ்வா ஃபியோங், பொது நிதியில் கையாடல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு விசாரணையை எதிர்கொண்டுள்ள போதும் வேட்பாளர் போட்டியில் அவரும் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், தீவிர இடது சாரி கட்சியின் வேட்பாளராக களமிறங்கும் சாங்லுக் மெலாங்ஷாங்கிற்கு திடீரென ஆதரவு பெருகியுள்ளது.
மோசமான தரவீடுகளை பெற்றதால், நவீன ஃபிரான்ஸ் வரலாற்றில் முதல்முறையாக தற்போது ஆட்சியில் இருக்கும் பிரதமர், ஃபிரான்ஸ்வா ஒல்லாந்த் இரண்டாம் முறையாக தேர்தலில் போட்டியிடவில்லை.
மரைன் லி பென் - தேசிய முன்னணி கட்சி
ஜனவரி மாதம் 2011 ஆம் ஆண்டில் தனது தந்தையிடமிருந்து கட்சி தலைமையை பெற்றார் மரைன் லி பென். அதற்கு அடுத்த வருடம் அதிபர் தேர்தலில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.



இமான்வேல் மக்ரோங்குடன் இவர் சரிசமான நிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன இருப்பினும் இரண்டாம் சுற்றில் அவரை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரில் 13,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டதற்கு ஃபிரான்ஸ் பொறுப்பல்ல என தவறாகக் கூறி பெரும் பரப்பை ஏற்படுத்தினார்.
48 வயதாகும் மரைன் லீ பென் ஒரு வழக்கறிஞர் ஆவார்; கட்சியின் சட்ட துறைக்கு தலைமை வகித்தவர். இரண்டு முறை விவாகரத்து பெற்றுள்ளார் ;மேலும் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.
2010ல் கட்சித் தலைமைக்கு வரும் முன்னர், மரைன் லீ பென், பிரான்சில் முஸ்லீம்கள் வீதிகளில் தொழுகை நடத்துவதை, பிரான்ஸை இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர்கள் ஆக்ரமித்த சம்பவத்துடன் ஒப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
ஆனால், 2011லிருந்து அவரது தனது தொனியை சற்று மென்மைப்படுத்தியுள்ளார். அவரது கட்சியும் யூதர்களுடன் இணக்கத்தைக்காண முயன்று வந்திருக்கிறது.
லெ பென்னின் வாக்குறுதிகள்
சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள் ;மேலும் ஆண்டிற்கு 10,000 குடியேறிகள்தான் சட்டரீதியாக அனுமதிக்கப்படுவார்கள்.
பிரான்சில் மசூதிகள் இடிக்கப்பட்டு ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ,குறிப்பாக சமூக நலத்திட்டங்களின் கீழ், வீடுகள் பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற வாக்குறுதிகளை அவர் கொடுத்துள்ளார்.
இமானுவேல் மக்ரோங்
39 வயதாகும் இவர் வெற்றி பெற்றால் ஃபிரான்ஸின் மிக இளம் வயது அதிபர் என்ற சிறப்பை பெறுவார்.
முதலீட்டு வங்கிசார் படிப்பை பயின்றுள்ள இவர், 2014 ஆம் ஆண்டு பொருளாதார அமைச்சர் என்ற பதவிக்கு முன்னர் அதிபர் ஒல்லாந்தின் பொருளாதார ஆலோசகராக இருந்தார்.



ஞாயிறன்றும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கும் மற்றும் தொழிற்துறைகளில் சிலவற்றை ஒழுங்குப்படுத்தும் "மக்ரோங் சட்டம்" என்ற சர்ச்சைக்குரிய சீர்த்திருத்த மசோதாவை கொண்டு வந்தார்.
மிதவாத கட்சியை சேர்ந்த முதுபெரும் அரசியல்வாதி, ஃபிராங்ஸ்வா பைரூ மற்றும் சோஷியலிச கட்சியின் முன்னாள் பிரதமர் மானுயெல் வால்ஸ்ஸின் பெரும் ஆதரவை இவர் பெற்றுள்ளார்.
வாக்குறுதிகள்
ஃபிரான்ஸில் வேலையில்லாதவர்களின் சதவீதத்தை 9.7 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைப்பது, மற்றும் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்ற வாக்குறுதிகளை தந்துள்ளார்.
ஃபிரான்ஸ்வா ஃபியோங்
62 வயதாகும் இவர் குடியரசு கட்சியை சேர்ந்தவர். மத்திய வலது சாரி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை தோற்கடித்து பெரும் ஆதரவை பெற்றார்.



தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு முறைகேடாக அரசு பணத்திலிருந்து சம்பளம் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது; மேலும் அதுகுறித்து சட்டப்பூர்வ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் வேட்பாளாராக களமிருங்க மாட்டேன் என தெரிவித்திருந்த இவர் பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டார். மேலும் தன்மீது சுமத்துப்பட்ட குற்றச்சாட்டு ஒரு அரசியல் சதி எனவும் தெரிவித்திருந்தார்.
சொத்து வரியை ரத்து செய்வதாகவும், ரஷியா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை தகர்த்து, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பை வீழ்த்த சிரியாவிற்கு உதவப் போவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஷான் லூக் மெலாங்ஷாங்
தீவிர இடது சாரி கட்சியை சேர்ந்த இவருக்கு 65 வயதாகிறது; இவர் தனது கூரிய நகைச்சுவை உணர்வால் தொலைக்காட்சி விவாதங்களில் மக்களை கவர்ந்துள்ளார்; மேலும் ஆறு நகரங்களில் ஒரே சமயத்தில் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தின் மூலம் தனது உருவத்தை கொண்டு வந்து மக்களை அசத்தியுள்ளார். கருத்து கணிப்புப்படி முன்னிலையில் உள்ள நான்கு பேரில் இவரும் ஒருவர்.



2008 ஆம் ஆண்டு சோசலிசக் கட்சியை விட்டு விலகி இடதுசாரி கட்சியை தொடங்கினார். அனைவருக்கும் வீடு மற்றும் சுகாதார சேவைகளுக்கு நிதி வழங்குதல் ஆகிய வாக்குறுதிகளை இவர் அளித்துள்ளார்.
பென்வா அம்மூங்
சோஷலிச கட்சியைச் சேர்ந்த இவர், முன்னாள் பிரதமர் மானுவேல் வேல்ஸை தோற்கடித்து கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாளில் கல்வி அமைச்சராக இருந்தவர்.



இவரது தேர்தல் அறிக்கையில் கவர்ந்திழுக்கும் பல திட்டங்கள் உள்ளன. மனிதர்களை வேலையிழக்கச் செய்யும் ரோபோக்களை வைத்து இயங்கும் தொழில்களுக்கு வரி, போதைப் பொருளான, கானபிஸ் பயன்பாட்டை சட்டரீதியாக்குவது போன்றவை அவை.




பிரான்ஸ் அதிபர் தேர்தல்: வாக்காளர் மனோ நிலை என்ன?
2025 ஆம் ஆண்டுவாக்கில், மின்சாரத்தில் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து பெறப்படும் மற்றும் 2050 ஆம் ஆண்டு வாக்கில், அணு சக்தி சார்பிலிருந்து பிரான்ஸ் முற்றிலுமாக விலகும் என வாக்குறுதியளித்துள்ளார். இரண்டாயிரம் யூரோக்களுக்கும் குறைவாக ஊதியம் பெறுபவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தும் வகையில் அடிப்படை வருவாய் திட்டம் ஆகிய வாக்குறுதிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்..
பிற ஆறு வேட்பாளர்கள்
46 வயதாகும் ஃளோராங் சாட்டோ, 59 வயதாகும் ஃபிராங்ஸ்வா அஸ்லினோ, 75 வயதாகும் சாக் ஷெமினாட், 55 வயதாகும் நிகோலா குபோங் என்யாங், 61 வயதாகும் சாங் லசல், 50 வயதாகும் ஃபிலிப் புட்டு, ஆகியோரும் 2017 ஆம் ஆண்டிற்கான ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை: