புதன், 26 ஏப்ரல், 2017

தமிழக வறட்சி : பிணந்தின்னி பா.ஜ.க. ! பணந்தின்னி அ.தி.மு.க. !!

தமிழக வறட்சிக்குப் பிச்சை போடுவதைப் போல நிவாரண நிதி அளிக்கிறது, பா.ஜ.க. குடிமராமத்து என்ற பெயரில் கொள்ளையை நடத்துகிறது, அ.தி.மு.க.
டந்த நூறாண்டுகளில் காணப்படாத வறட்சியில் சிக்கி, தமிழகமே பாலைவனம் போலாகிவிட்டது.  மாநிலம் முழுவதும் தை பட்ட விவசாய சாகுபடி பொய்த்துப் போய், ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்துகொண்டும் இறந்து போனார்கள். வறட்சியால் விவசாயத்தின் துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பும் பாழ்பட்டு, ஆடு – மாடுகளை வந்த விலைக்கு விவசாயிகள் தள்ளிவிடுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. விவசாயம் பொய்த்துப் போனதால் வேலையில்லா திண்டாட்டம், குடிநீர்கூட இல்லாத அவல நிலைமை என்ற இரண்டு தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், கிராமப்புற மக்கள் ஊரைக் காலிசெய்துவிட்டு நகரங்களை நோக்கி அகதிகளாக ஓடிவரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனினும், இந்த வறட்சி தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் போராட்டக் குணத்தை வற்றச் செய்துவிடவில்லை.

கோவை மாவட்டம், சூலூர் ரோடு, ராவுத்தர் பிரிவு பகுதியில் தண்ணீரின்றிப் பட்டுப்போய் நிற்கும் தென்னை மரங்கள்
தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் போராட்டம் ஒரு மாதத்தை நெருங்கவுள்ளது. “வறட்சி நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்” என்ற அவர்களின் கோரிக்கைகள், தமிழக விவசாயிகளின் நலனை மட்டுமின்றி, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நலனையும் பிரதிபலிப்பதாக இருப்பதால், உ.பி., பஞ்சாப், அரியானா, சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், போராடும் தமிழக விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.
தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றக் கோரித் தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் தஞ்சையில் இரண்டு வாரத்துக்கும் மேலாக நடந்து வருகிறது.
மாடு செத்துப் போவதையெல்லாம் தேசியப் பிரச்சினையாக உருவேற்றி வரும் இந்து மதவெறிக் கும்பலோ, தமிழக விவசாயிகள் சாவோடு போராடுவதை உப்புப் பெறாத விசயமாக ஒதுக்கித் தள்ளுகிறது. இப்போராட்டங்களைப் பார்ப்பன, மேட்டுக்குடித் திமிரோடு அணுகி கொச்சைப்படுத்தி வருகிறது.
“டெல்லியில் ஒரு நாளைக்கு நூறு போராட்டங்கள் நடக்கும், அத்தனையையும் பிரதமர் போய் பார்க்க முடியுமா?” எனத் திமிராகக் கேட்கிறார், பொன்னார். “நிதியமைச்சரிடம் கோரிக்கைகளைத் தெரிவித்த பிறகு, போராட்டத்தைத் தொடருவதில் நியாயம் இல்லை” என எச்சரிக்கும் தொனியில் பேசுகிறார், ஹெச்.ராஜா. பத்து இலட்ச ரூபாய் செலவில் கோட்டு சூட்டு போட்ட மோடியை நியாயப்படுத்திய இந்து மதவெறிக் கும்பல், “ஆடி கார் வைத்திருக்கும் அய்யாகண்ணு விவசாயியா?” என அவதூறு செய்கிறது. வழக்கம் போலவே, “தமிழகத்தில் மோடி எதிர்ப்பைத் தூண்டிவிடுபவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்” என உளவுத் துறைக்குப் போட்டுக் கொடுக்கும் வேலையையும் செய்கிறது, பா.ஜ.க.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. இதில் கடைசி இரண்டு ஆண்டுகள் மோடியின் ஆட்சி. 2016 இறுதியில் காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவையடுத்து, சம்பா சாகுபடியை நடத்தி முடிக்கலாம் என விவசாயிகள் நம்பியிருந்தனர்.  “நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது” எனக் கூறி விவசாயிகளின் நம்பிக்கையில் மண்ணைவாரிப் போட்டது, மோடி அரசு. காவிரியில் தண்ணீர் மறுக்கப்பட்ட நிலையில், பருவ மழையும் பொய்த்துப் போனது. இதனையடுத்துதான், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் பிணங்கள் விழத் தொடங்கின. தமிழக விவசாயிகளின் சாவுக்குப் பொறுப்பேற்க வேண்டிய பா.ஜ.க., தனது குற்றத்தை மறைத்துக்கொண்டு, மொத்தப் பழியையும் தமிழக அரசின் மீது சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்ள முயலுகிறது.

ராமநாதபுரம் பகுதியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முயலும் பெண்கள்.
வறட்சி நிவராணம் 39,565 கோடி, வார்தா புயல் நிவாரணம் 22,573 கோடி – என 62,138 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருந்தது. மோடி அரசோ பிச்சை போடுவது போல, 2,014 கோடி ரூபாய் மட்டுமே நிவாரணமாக ஒதுக்கியிருக்கிறது.
4,702 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கோரிய கர்நாடக மாநிலத்திற்கு 39 சதவீதத் தொகையும் (1,782 கோடி ரூபாய்), 1,500 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கோரிய ஆந்திர மாநிலத்திற்கு மூன்றில் ஒரு பங்கும் (518 கோடி ரூபாய்) அளிக்கப்பட்டிருக்கும்போது, தமிழகம் கோரிய தொகையில் வெறும் மூன்று சதவீதமே மட்டும் நிவாரணத் தொகையாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை முழுவதுமாகப் பொய்த்துப் போகவில்லை. அம்மழையையும், காவிரி நீரையும் பயன்படுத்தி விவசாயம் செய்திருக்கும் கர்நாடகாவையும்; காவிரி நீரும் மறுக்கப்பட்டு, வடகிழக்குப் பருவ மழையும் முற்றிலுமாகப் பொய்த்துப் போய் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தையும் ஒரே தட்டில் வைத்து அணுகுவது, எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதி.
62,138 கோடி ரூபாய் நிவாரணம் கோரிய தமிழகத்திற்கு எந்த அடிப்படையில் 2,014 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது என்பதற்கு எந்த விளக்கத்தையும் மைய அரசு அளிக்கவில்லை. ஒதுக்கப்பட்டுள்ள 2,014 கோடி ரூபாயில் வறட்சி நிவாரணத்திற்கான பங்கு 1,748 கோடி ரூபாய். இந்தத் தொகையையும் மைய அரசு முழுவதுமாக அளிக்கப் போவதில்லை. தேசியப் பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தொகையில் ஒரு நானூறு கோடி ரூபாயைத் தமிழக அரசு செலவழிக்கவில்லையாம். அதனால், அந்த நானூறு கோடி ரூபாயைக் கழித்துக்கொண்டு, மீதியைத்தான் மைய அரசு தரவிருக்கிறது.
தமிழகம் முழுவதும் விவசாயம் பொய்த்துப் போய், கிராமப்புறங்களை வேலையில்லாத் திண்டாட்டம் கவ்வியிருக்கும் நிலையில், வறட்சி நிவாரணத்தில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு 6,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் எனக் கோரியிருந்தது, தமிழக அரசு. அந்தளவிற்குக்கூட வறட்சி நிவாரணம் ஒதுக்கப்படாமல் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதி.டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதி.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதி.
இந்த அநீதி குறித்துக் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவரை, தேசத் துரோகி என முத்திரை குத்தி மிரட்டினார், தமிழின விரோதி ஹெச்.ராஜா. மேலும், தமிழகத்தில் நடந்துவரும் ஆற்று மணல் கொள்ளைதான் வறட்சிக்குக் காரணமென்றும், நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக மைய அரசு ஒதுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியுதவிகளைத் திராவிடக் கட்சிகள் கொள்ளையடித்துவிட்டு, அண்டை மாநிலத்தோடும், மைய அரசோடும் மோதும் போக்கைக் கடைப்பிடிக்கின்றன என்றும் கூறி, தனது ஓரவஞ்சனையை, தமிழக விரோதப் போக்கை மூடிமறைத்துவிட முயலுகிறது, பா.ஜ.க.
தமிழகத்தைக் கவ்வியுள்ள வறட்சிக்கும், விவசாயிகளின் சாவுகளுக்கும் திராவிடக் கட்சிகளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் இந்த ஆரிய பார்ப்பன யோக்கியர்கள், இதே அளவுகோலைத் தாங்கள் ஆளும் மாநிலங்களுக்கும் பொருத்துவார்களா? நாட்டிலேயே மிக அதிக அணைகளைக் கொண்ட மாநிலமான மகாராஷ்டிராதான் அடிக்கடி வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்கிறது. நீர்த் தேக்கங்களை அமைப்பதில் மிகப் பெரும் ஊழலும் கொள்ளையும் அம்மாநிலத்திலும் நடந்திருக்கிறது. விவசாயிகளின் தற்கொலையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ள மாநிலமும் மகாராஷ்டிராதான். கடந்த இருபது ஆண்டுகளாக அந்த மாநிலத்தை மாற்றிமாற்றி ஆண்டுவரும் “தேசிய”க் கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.க.வும்தான் இந்தக் குற்றத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
ஊழலில் ஈடுபட்ட கட்சியின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாமல், திராவிடக் கட்சிகள் எனப் பேதமிட்டுப் பிரித்துக் காட்டுவதன் மூலம், திராவிடம் – தமிழினத்தின் மீதான பகையைதான் வெளிப்படுத்துகிறது, ஆரிய பா.ஜ.க. மேலும், அ.தி.மு.க.வையும் திராவிடக் கட்சியாகப் பார்ப்பது அடிப்படையிலேயே அயோக்கியத்தனமானது. திராவிடக் கட்சிகள் எனப் பொதுவாகக் குற்றம் சுமத்துவதன் பின்னே, பார்ப்பனத்தி ஜெயா அடித்த வரலாறு காணாத கொள்ளையைப் பூசிமெழுகும் தந்திரம் மறைந்திருக்கிறது. இவை ஒருபுறமிருக்க, ஆற்று மணல் கொள்ளை, ஊழல் என்பது பற்றியெல்லாம் பேசுவதற்கு பா.ஜ.க.வினருக்கு எந்தத் தகுதியும், தார்மீக உரிமையும் கிடையாது.
அ.தி.மு.க. என்ற கொள்ளைக்கூட்டத்திற்குத் தலைவியாக இருந்த ஜெயாவைத் தனது இயற்கையான கூட்டாளியாக நட்பு பாராட்டி வந்த கட்சிதான் பா.ஜ.க. சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்கு பாரதிய ஜனதா செய்திருக்கும் உதவிகளும் மோசடிகளும் ஏற்கெனவே நாறிப் போனவை. உதாரணத்திற்குச் சொன்னால், அரசு வழக்குரைஞராக பவானி சிங்கை முறைகேடான முறையில் நியமித்துக் கொடுத்ததே கர்நாடகா பா.ஜ.க. அரசுதான்.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக் கோரி தஞ்சையில் நடைபெற்று வரும் போராட்டம்.
குன்ஹா அளித்த தீர்ப்பால் தண்டிக்கப்பட்டு, பிணையில் வெளியே வந்திருந்த ஜெயாவை, அவரது போயசு தோட்டத்து வீட்டுக்கே போய் சந்தித்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. இந்தச் சந்திப்பிற்கு பிறகுதான், ஜெயா-சசி கும்பலுக்கு எதிராக நடந்துவந்த வருமான வரி வழக்கில் சமரசம் செய்துகொள்வதற்கு வருமான வரித் துறை ஒப்புக் கொண்டது.
கண்டெய்னர் பணக் கடத்தில் விவகாரத்தைச் சுமுகமாக முடித்துக் கொடுத்ததில் வெங்கய்யா நாயுடுவின் பங்கு அளப்பரியது. இப்படி பா.ஜ.க., ஜெயா-சசி கும்பலுக்கு காலத்தே செய்த உதவிகள் ஏராளமுண்டு.
மிகப் பெரிய தேசியக் கட்சி எனப் பீற்றிக் கொள்ளும் பா.ஜ.க., தமிழகத்தில் நடந்துவரும் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக சுண்டுவிரலைக்கூட அசைக்காமல் இருந்து வருவதை சந்தர்ப்பவாத ஓட்டுக்கட்சி அரசியல் என்ற வரையறைக்குள் அடைத்துவிட முடியாது. ராம மோகனராவ்-சேகர் ரெட்டி-ஓ.பி.எஸ். என்ற கூட்டணிதான் ஆற்றுமணல் கொள்ளையின் சூத்திரதாரிகள் என்பது ஊரே அறிந்த உண்மை. அந்த உத்தமர் ஓ.பி.எஸ்.ஐத்தான் இப்பொழுது பாரதிய ஜனதா முட்டுக் கொடுத்து வருகிறது. ராம மோகனராவ் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்ட பின்னணியில் மோடி அரசின் சம்மதமும் உண்டு என்று தமிழகப் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.
இப்படி ஆற்று மணல் கொள்ளையர்களோடு பல வழிகளில் நேரடியாகவும் இரகசியமாகவும் உறவு வைத்திருக்கும் பா.ஜ.க.வை, காவரியில் தமிழகத்தின் உரிமைகளை வெளிப்படையாக மறுத்துவரும் பா.ஜ.க.வை., வளர்ச்சி என்ற போர்வையில் தமிழக விவசாயத்தை, குறிப்பாக தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைச் சுடுகாடாக்க முயலும் பா.ஜ.க.வைத் தமிழகத்தின் எதிரியாக நிறுத்த வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக, தமிழகத்தைச் சேர்ந்த காட்சி ஊடகங்கள் வறட்சி குறித்த விவாதங்களில், பா.ஜ.கட்சியினரை நியாயவான்களைப் போலப் பேச அனுமதிக்கின்றன.
60,000 கோடி ரூபாய் கேட்டதற்கு, வெறும் இரண்டாயிரத்து சொச்சம் கோடி ரூபாயைப் பிச்சைப் போலத் தூக்கியெறிந்து சிறுமைப்படுத்தியிருக்கும் மோடி அரசைக் கண்டிக்காமல், அ.தி.மு.க.(அம்மா) அரசு சும்மா கிடப்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அவர்களின் மௌனம் திருடர்களின் மௌனம். வாயைத் திறந்தால், அடுத்த வருமான வரித்துறை ரெய்டு பாய்ந்துவிடுமோ என்ற அச்சம்தான் அவர்களை வாயை அடைத்துப் போட்டிருக்கிறது. மேலும், தமிழகத்தை வஞ்சித்த மோடி அரசை எதிர்த்துப் போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டு, தனது அடிவருடித்தனத்தைக் காட்டி, மோடியின் கருணையைப் பெற முயலுகிறது.
திட்டத்தில் கொள்ளை என்பதை மாற்றி, கொள்ளையடிப்பதற்காகவே திட்டம் என ஊழலில் புதிய சாதனையை உருவாக்கியவர்தான் ஜெயலலிதா. அவரது ஆசியோடு நடப்பதாகக் கூறிவரும் சசிகலாவின் பினாமி அரசு, கொள்ளையடிப்பதற்காகவே 60,000 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரண உதவி கேட்டிருக்கும் என்பதை மறுக்கவியலாது. அதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்படத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, குடிமராமத்துப் பணியின் கீழ் தமிழகம் முழுவதுமுள்ள 1,519 நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிக்கு 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது, தமிழக அரசு. இந்தப் பணி எப்படி நடைபெறுகிறது தெரியுமா?

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வகுப்புகளைப் புறக்கணித்து வெளியேறும் திருச்சி அரசு கலைக்கல்லூரி மாணவிகள்.
இந்த நீர்நிலைகளைத் தூர் வாருவதைச் செங்கல் சூளை அதிபர்களிடம் சட்டவிரோதமாகத் தூக்கிக் கொடுத்துவிட்டு, 100 கோடி ரூபாயை ஆளுங்கட்சியும் அதிகாரிகளும் அமுக்கிக் கொள்வதாகவும், தூர்வாரும்பொழுது கிடைக்கும் சவுடு மண்ணை, விவசாயிகளுக்குத் தராமல், சூளை அதிபர்களிடம் கமிசனுக்கு விற்றுவிட்டு இலாபம் பார்ப்பதாகவும் பா.ம.க. நிறுவனர் ராமதாசு அம்பலப்படுத்தியிருக்கிறார்.
இந்து மதவெறி அரசியலை முதன்மைப்படுத்தித் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்டுள்ள பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்., இப்படிபட்ட ஊழல், முறைகேடுகள் மீது தமிழக மக்கள் அடைந்திருக்கும் வெறுப்பை அறுவடை செய்து கொள்ள முயலுகிறது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று பா.ஜ.க.தான் எனப் பீற்றிக் கொள்கிறது.
ஆனால், நீட் தேர்வு, ஜி.எஸ்.டி.வரி, ரேஷன் அரிசிக்கு மானியம் ரத்து என மோடி அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தின் உரிமைக்கு எதிரானதாகவே உள்ளன. அது மட்டுமா, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம், டெல்டா பகுதியில் மீண்டும் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி, காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மறுப்பதோடு, அப்பிரச்சினையில் நிரந்தரமாகத் தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் வகையில் ஒற்றை நதி நீர் தீர்ப்பாயம் அமைக்கும் முடிவு, நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட முடியாது என்ற அறிவிப்பு, பாலாற்றில் ஆந்திர அரசும், பவானியில் கேரளாவும் தடுப்பணைகள் கட்டி வருவதைத் தடுக்க மறுப்பது, பிச்சையைவிடக் கேவலமான வறட்சி நிவாரணம் – எனத் தமிழக விவசாயத்தை அழிக்கும் தீய சக்தியாக நிற்கிறது, பா.ஜ.க. கூடுதலாக, திராவிட இயக்கங்கள் கொண்டுவந்திருக்கும் சமூக சீர்திருத்தங்களை ஒழித்துக்கட்டி, ஆரிய -பார்ப்பன மேலாதிக்கத்தைத் தமிழக மக்களின் மீது மீண்டும் சுமத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்து மதவெறிக் கும்பலைத் தமிழகத்தின் முதன்மையான எதிரியாகத்தான் கருத முடியுமே தவிர, அரசியல் பிரதிநிதியாக நினைத்துப் பார்ப்பதுகூட வெட்கக்கேடானது, அருவருப்பானது.
தமிழகத்தின் விவசாயம் அழிவை நோக்கித் தள்ளப்பட்டிருப்பதற்கு வறட்சி, காவிரி பிரச்சினை என்பவற்றையும் தாண்டிப் பல்வேறு வலுவான காரணங்கள் உள்ளன. குறிப்பாக, மைய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைதான் விவசாயத்தைச் சூதாட்டமாக்கி, விவசாயிகளை மரணத்தை நோக்கித் தள்ளி வருகிறது. தனியார்மயத்தின் பிறகுதான் ஆற்று மணல் கொள்ளை பிரம்மாண்டமாக வளர்ந்தது; தனியார்மயத்தின் பிறகுதான் ஏரிகளும், கண்மாய்களும் ஒருபுறம் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் ஆக்கிரமிப்புகளாலும், இன்னொருபுறம் பராமரிப்பின்றியும் அழிக்கப்பட்டன; தனியார்மயத்தின் பிறகுதான் விவசாய மானியங்கள் படிப்படியாக வெட்டப்பட்டன, விவசாய உற்பத்திச் செலவு அதிகமானது, விவசாய விளைபொருட்களுக்கான விலை வீழ்ச்சியடைந்தது. இந்த விஷச்சுழல்தான் விவசாயிகளைத் தீராத கடனில் சிக்க வைத்து, அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளிச் சென்றது; அவர்களை விவசாயத்தைவிட்டு ஓட வைத்தது.
இப்படி விவசாயத்தைக் கைவிட்டு நகரத்திற்கு இடம்பெயரும் விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை, கிராமத்து இளைஞர்களைத்தான் குறைந்த கூலிக்கு காண்டிராக்டு தொழிலாளர்களாக கார்ப்பரேட் முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், விவசாயத்தின், விவசாயிகளின் அழிவில்தான் நாடு எட்டு சதவீத “வளர்ச்சியை”ச் சாதித்து.
நாட்டை வறுமையிலிருந்து விடுவித்து, வல்லரசாக்கப் போகும் மந்திரக் கோலாகக் கூறப்பட்ட தனியார்மயம்-தாராளமயம் மிகப்பெரும் தோல்வியடைந்து நிற்பதை, விவசாயத்தின் நசிவு துலக்கமாக எடுத்துக் காட்டுகிறது. “அனைவருக்குமான வளர்ச்சி” எனக் கூறி ஆட்சியைப் பிடித்த மோடியும் தோல்வியடைந்துவிட்டதை, அவரது ஆட்சியிலும் தொடரும் விவசாயிகளின் மரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனாலும், மோடி உள்ளிட்ட ஆளுங்கும்பல் தமது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, நாட்டை மேலும் மேலும் தனியார்மய நாசகாரப் பாதையில் இழுத்துச் செல்கிறார்கள். மக்களுக்கு எதிராகத் திரும்பிவிட்ட அவர்களிடம், விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்குமாறு இனியும் கெஞ்சிக்கொண்டு நிற்பதால் எந்தவொரு பயனும் ஏற்படாது என்பதைப் போராடும் தமிழக விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும் உணர வேண்டும். அந்த உணர்வுதான், நமது நாட்டின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் தலைகீழான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முதல் படியாகும்.
-குப்பன்
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2017   vinavu

கருத்துகள் இல்லை: