புதன், 26 ஏப்ரல், 2017

இரட்டை இலையை விலை பேசிய அந்த ஆள் யார் ? அமித் ஷா? மோடி? யார் அந்த RSS காரன்?


இரட்டை இலை சின்னத்தை ரூ.50 கோடிக்கு விற்க முயன்ற டெல்லி அதிகாரி யார்?: மக்கள் குழப்பம்அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான தினகரிடம் ஒப்படைக்க 50 கோடி ரூபாய்க்கு டெல்லியில் பேரம் பேசிய தேர்தல் கமிஷன் அதிகாரி யார்? என்ற குழப்பம் தமிழக மக்களிடையே மேலோங்கி உள்ளது. புதுடெல்லி: பண்டைக்காலத்தில் ஒரு நாட்டை ஆளும் அதிகாரம் யாருக்கு? என்பதை மன்னர்களின் தோள் வலிமையும், வாள்முனையும், போர்க்களங்களும் தீர்மானித்தன. மன்னர்களின் ஆட்சிக் காலத்தின்போதே தமிழர்களாகிய நாம், ஒரு சிறிய பகுதிக்குட்பட்ட உள்ளூர் மக்களை ஆளும் அதிகாரத்தை யாருக்கு அளிப்பது? என்பது தொடர்பாக ‘குடவோலை’ எனப்படும் வாக்குச்சீட்டின் வாயிலாக தேர்வு செய்யும் வழிமுறையை காலகாலமாக பின்பற்றி வந்துள்ளோம்.  தினகரனை பிடிப்பவர்கள் ஏன் பேரம் பேசியவனை விட்டு வைத்துள்ளார்கள் ? சந்தேகம் மத்திய அரசு மீது வருவது தவிர்க்கவே முடியாது !


இந்த தத்துவத்தின்படி, ஒட்டுமொத்த நாட்டையும் ஆள்வது மத்திய அரசாகவும், நிர்வாக வசதிக்காக பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள மாநிலங்களை ஆள்வது மாநில அரசு என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் திருவிழாவாக பாராளுமன்ற தேர்தலும், அந்தந்த மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களும் கருதப்படுகின்றன. ஜனநாயகம் என்றும் அழைக்கப்படும் இந்த மக்களாட்சி முறைதான் இந்தியாவின் மிகப்பெரிய பலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மக்களாட்சி திருவிழாவான தேர்தல்களுக்கான தேதியை அறிவிக்கவும் வாக்குப்பதிவை நியாயமான முறையில் நடத்தி, ஆட்சியாளர்களை தேர்வு செய்யவும் இந்திய தேர்தல் கமிஷன் உருவாக்கப்பட்டது. வாக்குச் சீட்டு மூலம் ஓட்டளித்த காலம்போய், தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வரை இந்திய தேர்தல் கமிஷனில் பல்வேறு பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் முக்கிய தூணாக பார்க்கப்படும் நாட்டின் தலைமை தேர்தல் கமிஷனில் தற்போது கரையான்கள் குடியேறியுள்ளதை அறிந்துள்ள பலர் இந்தக் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் மனஉளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக இரு அணியினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற அ.தி.மு.க. (அம்மா அணி) துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் அவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக சுகேசுக்கு ரூ.10 கோடியை தினகரன் கொடுத்ததாக தகவல் வெளியானது.


இந்த நிலையில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த விசாரணைக்கு வருமாறு டெல்லி போலீசார் அளித்த சம்மனை ஏற்று டி.டி.வி. தினகரன் கடந்த சனிக்கிழமை டெல்லி சென்றார். சாணக்கியாபுரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் போலீஸ் முன்பு அவர் ஆஜரானார். அவரிடம் 4 நாட்களாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு டெல்லி குற்றவியல் போலீசார் டிடிவி தினகரனை அதிரடியாக கைது செய்தனர். கைதான டி.டி.வி தினகரன் மற்றும் அவருடன் கைதான மல்லிகார்ஜுனா ஆகியோர் இன்று பிற்பகல் 3 மணி அளவில் டெல்லி திஸ் ஹசாரி கோர்ட்டில் நீதிபதி பூணம் சவுத்திரி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, தினகரன் வக்கீலின் சார்பில் அவரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேற்படி வழக்கு தொடர்பாக சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்று இருவரையும் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, அவர்களை 7 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்வாதம் செய்தார்.

இதையடுத்து தினகரனை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவையடுத்து முடக்கப்பட்ட தேர்தல் சின்னமான இரட்டை இலையை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான தினகரிடம் ஒப்படைக்க 50 கோடி ரூபாய்க்கு பேரம் பேசிய தேர்தல் கமிஷன் அதிகாரி யார்? என்ற குழப்பம் தமிழக மக்களிடையே மேலோங்கி உள்ளது.

அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமானால் இரட்டை இலை சின்னம் நிச்சயம் தேவை என்பதை டி.டி.வி.தினகரன் உணர்ந்திருந்தார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும் போது இரட்டை இலை சின்னத்துடன்தான் களம் இறங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில்தான் அவரிடம் யாரோ இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளை அணுகலாம் என்று தவறான யோசனையை தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இதன் தொடர்ச்சியாக இடைத்தரகர் சுகேசை தினகரனிடம் அறிமுகம் செய்துள்ளனர். அவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் இடைத்தரகர் சுகேசை பற்றி தினகரன் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது.

சுகேசுடன் பேசிய பிறகு முன் பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த பணம் ஹவாலா ஏஜெண்டு ஷா பைசல் என்பவர் மூலம் கைமாறியது. சென்னை வந்து ஒரு நபரிடம் பணக்கட்டுகளை பெற்ற ஷாபைசல் அதை கார் மூலமாக டெல்லிக்கு கொண்டு சென்று சுகேசிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

இதற்கு மற்றொரு ஹவாலா ஏஜெண்டான கோபி என்பவரும் உதவியாக இருந்துள்ளார். சுகேஷ் போலீசாரிடம் சிக்கிய போது இந்த ஹவாலா ஏஜெண்டுகளை பற்றி உளறிவிட்டான். இதன் காரணமாக இரு ஏஜெண்டுகளும் போலீசாரிடம் சிக்கினார்கள்.

அவர்களிடம் உரிய முறையில் விசாரித்த போது ரூ.10 கோடி முன் பணம் கைமாறியதாக உண்மையை கக்கிவிட்டனர். இதன் தொடர்ச்சியாகவே டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தை விரிவுபடுத்திய போது டி.டி.வி.தினகரன் அதில் சிக்கவேண்டிய சூழ்நிலைகள் உருவானது.

தரகர் சுகேஷ் மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் ஷாபைசல் மற்றும் கோபி ஆகியோர் கொடுத்திருக்கும் வாக்குமூலங்கள் மற்றும் அவர்களிடம் இருந்து திரட்டப்பட்டுள்ள ஆதாரங்கள் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக வலுவான நிலையில் உள்ளன.

இந்நிலையில், நாட்டின் மிக உயர்ந்த அமைப்பான இந்திய தலைமை தேர்தல் கமிஷனில் உள்ள மிகப்பெரிய அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பிரமுகர் லஞ்சம் கொடுத்து, காரியம் சாதிக்க முயன்று, கைதான சம்பவம் இங்குள்ள நடுநிலையாளர்களையும், அரசியல் நோக்கர்களையும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டின் வி.வி.ஐ.பி.க்களில் ஒருவராக கருதப்படும் தினகரனை வலுவான ஆதாரங்கள் இல்லாமல் போலீசார் கைது செய்திருக்க மாட்டார்கள். அந்த ஆதாரங்களை சரிபார்க்காமல் அவரை போலீஸ் காவலுக்கு நீதிபதி உட்படுத்தி இருக்க மாட்டார்கள் என்ற பரவலான கருத்து எழுந்துள்ளது.

போதிய ஆதாரங்கள் டெல்லி போலீசாரின் கையில் சிக்கியுள்ள நிலையில் லஞ்சம் கொடுக்க முயன்ற தினகரன் கைது செய்யப்பட்டுள்ளபோது, லஞ்சப் பணமாக பேரம் பேசப்பட்ட 50 கோடி ரூபாயை பெற்றுகொண்டு, அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான தினகரனிடம் ஒப்படைக்க 50 கோடி ரூபாய்க்கு பேரம் பேசிய இந்திய தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரி யார்? என்ற குழப்பம் தமிழக மக்களிடையே மேலோங்கி உள்ளது.

இதையும் வெளிப்படையாக தெரிவிப்பதுடன், அந்த அதிகாரியையும் மக்கள் மன்றத்தின் முன்னாலும், நீதிமன்றத்தின் முன்னாலும் போலீசார் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்களா? என்ற மில்லியன் டாலர் கேள்வியும் அவர்கள் மனங்களில் தொக்கி நிற்கிறது. மாலைமலர்

கருத்துகள் இல்லை: