செவ்வாய், 25 ஏப்ரல், 2017

பூனம் அகர்வால் வழக்கு ... ராணுவ அதிகாரிகள் சிப்பாய்களை தங்கள் வீட்டு பணிகள் ... அம்பலப்படுத்தியவர்


ராணுவத்தில் இருந்து வரும் ‘நடைமுறை’ ஒன்றை அம்பலப்படுத்தும்
பணியில் ஈடுபட்ட பெண் பத்திரிகையாளர் மீது ‘அதிகாரபூர்வ ரகசியச் சட்டம்’ என்பதை எழுப்பி வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து அவர் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு, மற்றும் மகாராஷ்டிர அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பெண் நிருபர் பூனம் அகர்வால் செய்திருந்த மனு மீதான விசாரணையை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு, “நாம் இந்த விவகாரத்தை ஆராய வேண்டும்” என்று கூறியுள்ளார். ஊடகங்களும், நாட்டு மக்களும் உண்மையை அறிந்து விடக்கூடாது என்பதற்காக அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாக பூனம் அகர்வால் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். அவர் தன் மனுவில் இந்தச் சட்டம் குறித்த கட்டுப்பாடான, கண்டிப்பான விளக்கத்தை உச்ச நீதிமன்றம் அளித்து அரசியல் சாசன சட்டத்தின் பார்வையில் அதனை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.


நிருபர் பூனம் அகர்வால் ராணுவ முகாம் ஒன்றில் நுழைந்து அங்கு ராணுவ வீரர்களை மேலதிகாரிகள் தங்கள் சொந்த வேலைகளுக்கும் வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் நடைமுறை இருந்து வருவதை அம்பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் கடந்த மாதம் மர்மமான முறையில் முகாமில் இறந்து கிடந்த ஜவான் ராய் மேத்யூ என்பவர் பற்றிய தகவல்களையும் மற்ற ராணுவ வீரர்களிடம் சேகரித்து வீடியோ எடுத்திருந்தார்.

இதனையடுத்து நாசிக் போலீஸ் அகர்வால் மீது அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் முதல் தகவலறிக்கை பதிவு செய்தனர். முன்னாள் ராணுவ வீரர் தீப் சந்த் என்பவர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் தன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது, ஆதாரத்தைத் திரிக்கவும், கிரிமினல் குற்றங்களை மறைக்கவும், பத்திரிகை சுதந்திரத்தையும் பேச்சு மற்றும் வெளிப்பாடு சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சியில் செய்யப்பட்டுள்ளது என்று பூனம் அகர்வால் தன் மனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும், “பிப்ரவரி 24, 2017 அன்று ஒளிபரப்பப்பட்ட கிளிப்பில் அனைத்து முகங்களும் மங்கலாக்கப்பட்ட ஒரு செய்தியில் ஜவான் ஒருவர் மர்மான முறையில் மரணமடைந்தது பற்றி காண்பிக்கப்பட்டது உடனேயே எனக்கு எதிராக இந்த ரகசியக் காப்புச் சட்டத்தை கையிலெடுத்து ஜவான் சாவு குறித்த நியாயமான விசாரணையை தடை செய்ய முயல்கின்றனர்” என்று கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அந்த மனுவில், ‘தியோலி முகாமில் இருந்து வந்த அந்த ராணுவ வீரரின் அழுகிப்போன உடல் அந்த முகாமிலிருந்து 200மீ தள்ளியுள்ள கைவிடப்பட்ட அறை ஒன்றில் தூக்கில் தொங்கியவாறு இருந்ததையும் மனுதாரர் குறிப்பிட்டு ராணுவ வீரரின் மர்ம மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்று கோரியுள்ளார்.

பிப்ரவரி 25-ம் தேதி தன் மனைவிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட பிறகு ராணுவ வீரர் மேத்யூவைக் காணவில்லை. அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ரிப்போர்ட்டிங் ஆபிசர், மரணமடைந்த வீரர் மேத்யூவின் குடுபத்தினரை அழைத்து காணாமல் போனவர்கள் குறித்த புகார் அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கை மேற்கொண்ட பூனம் அகர்வால் இந்த விவகாரத்தை தனக்குக் காட்டிக் கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் தீப் சந்த்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இணையதளம் ஒன்றில் பூனம் அகர்வால் வெளியிட்ட வீடியோவில் மேலதிகாரிகளின் நாய்களை ராணுவ வீரர்கள் வாக்கிங் கூட்டிச் செல்வதும், மேலதிகாரிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதும் வெளியானது.

அசம்பாவித மரணம் என்று மேத்யூ மரணம் குறித்து நாசிக் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் பூனம் அகர்வால் மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.  tamilthehindu

கருத்துகள் இல்லை: