வியாழன், 27 ஏப்ரல், 2017

இந்திய நீதிமன்றம் அந்நிய முதலீட்டாளர்களின் (Suzuki) கைக்கூலிப்படையா ?

ஜப்பானிய நிறுவனமான சுசுகியைத் திருப்திபடுத்துவதற்காகவும், தொழிலாளி வர்க்கத்தை எச்சரிப்பதற்காகவுமே மாருதி தொழிலாளர் வழக்கில் 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. மாருதி தொழிலாளர்களுக்கு எதிரான கிரிமினல் குற்றவழக்கில் மார்ச் 18-ஆம் தேதியன்று குர்கான் செசன்ஸ் நீதிபதி கோயல் தீர்ப்பு வழங்கி விட்டார். குற்றம் சாட்டப்பட்ட 148 பேரில் 117 தொழிலாளர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், 13 தொழிலாளிகளுக்கு கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், கொடும் காயம் விளைவித்த குற்றத்துக்காக 14 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 பேரில் 12 பேர் சங்க நிர்வாகிகள். ஒருவர் சம்பவ நாளன்று மேலாளரால் சாதிரீதியாக இழிவுபடுத்தப்பட்ட ஜியாலால் என்ற தொழிலாளி.  கொலைக் குற்ற வழக்கில் ஆதாரமின்றித் தண்டிக்கப்பட்ட மாருதி தொழிலாளர்கள். “148 தொழிலாளிகள் சேர்ந்து அவனிஷ் குமார் தேவ் என்ற அதிகாரியைக் கொலை செய்தார்கள் என்பது வழக்கு.
அதில் 117 பேருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. மீதமுள்ளவர்களைத் தண்டிப்பதற்கான எந்தவித ஆதாரமும் தீர்ப்பில் இல்லை” என்கிறார் தொழிலாளர்களின் வழக்கறிஞர் ரெபெக்கா ஜான்.

அரசு வழக்கறிஞர் அனுராக் ஹூடா, 13 தொழிலாளர்களையும் தூக்கில் போடவேண்டுமென்று கோரினார். “மாருதி சம்பவம் உலக அரங்கில் இந்தியாவின் கவுரவத்தை தாழ்த்திவிட்டது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அஞ்சுவார்கள்” என்று தொழிலாளர்களின் பிணையை மறுப்பதற்கு பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் 2013-இல் கூறியதை மேற்கோள் காட்டி, மரண தண்டனையை அவர் வலியுறுத்தினார். “மேக் இன் இந்தியா என்று பிரதமர் மோடி முழங்கி வரும் சூழலில், இத்தகைய சம்பவங்கள் தேசத்திற்கே களங்கமாக இருக்கின்றன” என்று கூறி ஊடகங்களிடமும் தூக்குத் தண்டனைக்காகப் பிரச்சாரம் செய்தார் ஹூடா.
சாட்சியங்கள் இல்லாத போதிலும் தேசத்தின் மனச்சாட்சியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம். அந்நிய முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டு 13 பேரைத் தூக்கில் போடவேண்டும் என்று வெளிப்படையாகக் கோருகிறார் அரசு வழக்கறிஞர்.
2012-இல் மாருதி தொழிலாளர்கள் மீது ஜப்பானிய சுசுகி நிர்வாகம் ஒரு கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த தருணத்தில், அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி என்ன செய்தார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மோடி ஜப்பானுக்கு நேரில் சென்று சுசுகி முதலாளியைச் சந்தித்தார். அங்கிருந்தபடி மாருதி தொழிலாளர்களுக்குக் கண்டனமும் தெரிவித்தார். இன்று டில்லியிலும் அரியானாவிலும் நடந்து கொண்டிருப்பது பா.ஜ.க.-வின் ஆட்சி. தொழிலாளிகளைத் தூக்கில் போடவேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கொந்தளிப்பதில் வியப்பென்ன?

“குற்றம் சாட்டுபவர்கள் குற்றத்தைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்க இயலாதபட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்க இயலாது” என்பது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு. மாருதி வழக்கைப் பொருத்தவரை ஒரேயொரு தொழிலாளிக்கு எதிராகக்கூடக் கொலைக்குற்றத்தையோ, காயம் விளைவித்த குற்றத்தையோ அரசு தரப்பு நிரூபிக்கவில்லை.

நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து மாருதி தொழிலாளர்கள் மானேசரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
“தொழிலாளர்கள் வன்முறை மற்றும் தீவைப்பில் ஈடுபட்டு அவனிஷ் குமார் தேவைக் கொன்று விட்டார்கள்” என்று போலீசுக்கு புகார் கொடுத்தவர் தீபக் ஆனந்த் என்ற எச்.ஆர். மானேஜர். புகார் கொடுத்த அவரால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரையும் நீதிமன்றத்தில் அடையாளம் காட்ட முடியவில்லை. “தான் சம்பவ இடத்திலேயே இல்லை என்றும், நிர்வாகத்தின் ஆணைப்படிப் புகார் கொடுத்ததாகவும்” குறுக்கு விசாரணையில் அவர் ஒப்புக் கொண்டார்.
சாட்சிகளாக ஆஜர்படுத்தப்பட்டவர்களில் ஒரு தொழிலாளிகூட இல்லை. எல்லா சாட்சிகளும் நிர்வாகத்தினர் மற்றும் காண்டிராக்டர்கள். தொழிலாளர்களின் பெயர்களை அகர வரிசைப்படி குற்றப்பத்திரிகையில் எழுதியது மட்டுமல்ல; ஏ, பி என்பவற்றை முதல் எழுத்தாக கொண்ட தொழிலாளிகளை அடையாளம் காட்ட குறிப்பிட்ட அதிகாரிகள், பின்னர் சி,டி என்ற முதல் எழுத்து கொண்ட பெயர்களை உடைய தொழிலாளிகளை அடையாளம் காட்ட சில காண்டிராக்டர்கள் என்று செட்டப் செய்து, சாட்சிகளுக்குப் பயிற்சி கொடுத்து அழைத்து வந்தனர். இருந்த போதிலும் தொழிலாளிகளை அவர்களால் அடையாளம் காட்ட முடியவில்லை.
“தொழிலாளர்கள் உருட்டுக் கட்டைகளாலும் இரும்புக் கம்பிகளாலும் தாக்கியதாக” முதல் தகவல் அறிக்கையில் வழக்கம்போல எழுதிவிட்டது போலீசு. ஆலைக்குள்ளே உருட்டுக்கட்டையோ  இரும்புக்கம்பியோ கிடையாது என்று நிர்வாகம் போலீசுக்குப் புரிய வைத்த பின்னர், “கார் கதவுக்குள்ளே பொருத்தப்படும் 3 கிலோ எடையுள்ள இரும்பு பீம்களால் தாக்கியதாக” குற்றச்சாட்டைத் திருத்தினர். 139 தொழிலாளிகள் = 139 பீம்கள் என்று கணக்குக் காட்டினர். 139 பீம்கள் தொழிற்சாலையின் இருப்பில் குறைவதாகவோ, திருட்டுப் போனதாகவோ நிர்வாகம் பதிவு செய்யவில்லை என்பதைத் தொழிலாளர்கள் தரப்பு அம்பலப்படுத்தியது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களான பீம்களை, ஆலையிலிருந்து 20 கி.மீ. முதல் 70 கி.மீ. தொலைவில் உள்ள தொழிலாளிகளின் வீடுகளிலிருந்து கைப்பற்றியதாகக் கூறியது போலீசு. கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தை 70 கி.மீ. தள்ளியிருக்கும் தமது வீட்டில் கொலைகாரன் பத்திரமாக வைத்திருந்ததாகவும், சுமார் ஒரு மாதம் கழித்து அதைக் கைப்பற்றியதாகவும் போலீசு சொன்ன கதையைக் கேட்டு நீதிபதி சிரித்திருக்க வேண்டும் அல்லது சீறியிருக்க வேண்டும். அவரோ போலீசின் கட்டுக்கதையை ஏற்றுக்கொண்டார்.
“3 கிலோ எடையுள்ள இரும்பு பீமால் நிர்வாகத்தினரையும் போலீசாரையும் தொழிலாளர்கள் தாக்கியதாக”க் குற்றச்சாட்டு. ஆனால், தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நபருக்குக்கூடச் சிறிய எலும்பு முறிவுகூட இல்லை. வெறும் சிராய்ப்புக் காயங்களைத்தான் அவர்களால் காட்ட முடிந்தது. இந்தக் காயங்களுக்காக போலீசார் கொடுத்த மருத்துவச் சான்றிதழ்களும் போர்ஜரி என்பதைத் தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபித்தனர். இருப்பினும், “சான்றிதழ்கள் பொய் என்பதால், காயங்கள் பொய்யாகிவிடாது” என்று தீர்ப்பில் குறிப்பிடுகிறார் நீதிபதி.

மாருதி தொழிலாளர்கள் சார்பாக வாதாடி மூத்த வழக்குரைஞர் ரெபக்கா ஜான் (இடது); அவரது ஜூனியர் வழக்குரைஞர் ஹர்ஷ் போரா.
ஜியாலால் என்ற தலித் தொழிலாளியை ஒரு மேலாளர் சாதியைச் சொல்லி இழிவு படுத்தியதை ஒட்டித்தான் அன்றைய பிரச்சினை மாருதியில் தொடங்குகிறது. இது தொடர்பாக மேலாளர் மீது ஜியாலால் கொடுத்த தீண்டாமைக் குற்றப் புகார் “பொய்யானது” என்று போலீசு நிராகரித்து விட்டது. அதே நேரத்தில், தொழிலாளிகள் ஆத்திரம் கொண்டு தாக்குவதற்கான நோக்கத்தை (motive) நிரூபிக்கும் பொருட்டு, சாதியைச் சொல்லி இழிவுபடுத்திய அந்தச் சம்பவத்தை போலீசு பயன்படுத்திக் கொண்டது. அப்பட்டமான இந்த முரண்பாட்டையும் நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்பது குற்றச்சாட்டு. ஆனால், அத்தனை பெரிய ஆலையில் தீ வைத்து எரிக்கப்பட்ட இடமோ ஒரேயொரு கட்டிடம் மட்டும்தான். மனிதவள மேம்பாட்டு அதிகாரி அவனிஷ் குமார் தேவின் கை, கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் அந்த அறை தீவைத்துக் கொளுத்தப்பட்டிருக்கிறது. அவர் தப்பிக்க முடியாமல் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார் என்பதுதான் கூராய்வின் முடிவு.
“இன்னார் அவரைத் தாக்கினார்” என்றோ, “இன்னார் அறைக்குத் தீவைத்தார்” என்றோ யாரும் சாட்சியமளிக்கவில்லை. கண்காணிப்பு காமெரா பதிவுகளைக் காட்டுமாறு தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் கோரியபோது, “பதிவுகள் அனைத்தும் எரிந்து விட்டதாக”ப் புளுகியது அரசு தரப்பு. “காமெரா எரிந்திருந்தாலும் பதிவான வன்தகடு எங்கே” என்ற கேள்வியை நீதிமன்றம் கேட்கவில்லை.
எரிந்து கருகிப்போன அந்த அறையிலிருந்து எரியாத தீப்பெட்டி ஒன்றைக் கைப்பற்றி, அதுதான் “கொளுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட தீப்பெட்டி” என்று காட்டியது போலீசு. அந்த தீப்பெட்டியில் எந்த தொழிலாளியின் ரேகைப்பதிவும் இல்லை. அதை வைத்துத்தான் கொளுத்தினார்கள் என்பதையும் போலீசு நிரூபிக்கவில்லை.
“தீப்பெட்டியைக் கைப்பற்றியதாகக் (போலீசார்) காட்டியிருப்பது சந்தேகத்துக்குரியதுதான் என்பதில் சந்தேகமேயில்லை. அதன் காரணத்தினாலேயே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொளுத்தியிருக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது” என்று தீர்ப்பில் குறிப்பிடுகிறார் நீதிபதி. இந்தக் கேலிக்கூத்துக்குப் பெயர் குற்றவியல் விசாரணையாம்!

மாருதி தொழிலாளர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் சென்னை-ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கொலை செய்யப்பட்ட அவனிஷ் குமார் தேவ் தங்களது நண்பர் என்கிறார்கள் தொழிலாளிகள். சங்கமே வைக்கக்கூடாது என்று நிர்வாகம் வெறிகொண்டு ஒடுக்கி வந்த சூழலில், சங்கத்தைப் பதிவு செய்வதற்குத் தொழிலாளிகளுக்கு அவர்தான் உதவியிருக்கிறார். “நிர்வாகம் ஆலைக்குள் கொண்டு வந்து இறக்கியிருந்த அடியாள் படையினர்தான் அவனிஷைக் கொலை செய்திருக்கிறார்கள்” என்று அமர்ஜித் என்ற தொழிலாளி குற்றம் சாட்டினார்.
“தீ வைத்த அடியாள் யார் என்று அமர்ஜித்தால் நிரூபிக்க முடியாத காரணத்தினால், அமர்ஜித்தும் அவரது சக தொழிலாளிகளும் தான் தீ வைத்தார்கள் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருவதாக”த் தனது தீர்ப்பில் கூறுகிறார் நீதிபதி.
ஆகத் தொன்மையானது என்று கூறப்படும் ஹமுராபியின் சட்டம்கூட (கி.மு.1800), “குற்றம் சாட்டுபவன்தான் குற்றத்தை நிரூபிக்க வேண்டும்” என்கிறது. “தவறும்பட்சத்தில், சாட்டப்படும் குற்றத்துக்கான தண்டனை மரணம் என்றால், அந்த தண்டனைக்குக் குற்றம் சாட்டுபவன் ஆளாக வேண்டும்” என்றும் எச்சரிக்கிறது.
“தான் நிரபராதி என்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபித்துக் கொள்ளவேண்டும்” என்று குற்றவியல் சட்டத்தின் அடிப்படையையே தலைகீழாக மாற்றின தடா, பொடா சட்டங்கள். தற்போது மாருதி தீர்ப்பு இன்னும் ஒரு படி மேலே போகிறது. குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளிகள் தங்களை நிரபராதிகள் என்று நிரூபித்துக் கொள்வது மட்டும் போதாதாம். குற்றவாளி யார் என்று கண்டுபிடித்து, அதனை நிரூபிக்க வேண்டிய புலனாய்வு அமைப்பின் பொறுப்பையும் சிறையில் இருந்த தொழிலாளர்கள் மீது சுமத்துகிறார் நீதிபதி. அவ்வாறு “நிரூபிக்கத் தவறிய காரணத்தினால், நீங்கள்தான் குற்றவாளிகள்” என்று 13 தொழிலாளர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்திருக்கிறார்.
உலகத்தின் கவனத்தையே ஈர்த்த ஒரு போராட்டம் தொடர்பான வழக்கை போலீசும் நீதித்துறையும் எப்படிக் கையாண்டிருக்கின்றன என்பதை மேற்கண்ட விவரங்களைப் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். ஒரு நிலப்பிரபுத்துவ கட்டப்பஞ்சாயத்தில்கூட செல்லுபடியாகாத பொய்களை ஏற்றுக் கொண்டு தண்டனை வழங்கியிருக்கிறது விசாரணை நீதிமன்றம். கார்ப்பரேட் ஊடகங்களோ, “13 பேருக்கு ஆயுள் தண்டனை” என்பதை முதன்மைப் படுத்தி செய்தி வெளியிட்டு, விசாரணை என்ற பெயரில் நடைபெற்றிருக்கும் இந்த கேலிக்கூத்தை இருட்டடிப்பு செய்து விட்டன.

மார்ச் 18 அன்று இந்த தீர்ப்பு வெளியானதையொட்டி மானேசருக்கு நேரில் சென்ற வினவு இணையதளத்தின் செய்தியாளர், மார்ச் 23 பகத்சிங் நினைவு நாளன்று மானேசரில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
“உறக்கச் சொல், நாம் ஒன்று என்று! தொழிலாளிகளின் பறிக்கப்பட்ட வேலைகளை திரும்பக் கொடு! மோடி அரசு ஒழிக! புரட்சி ஓங்குக” என்று முழங்கிய அந்தத் தொழிலாளர்களிடம் “ஒரு பன்னாட்டு நிறுவனத்தைப் பணிய வைத்த பெருமிதம் தெரிந்தது. சாதிய கட்டுமானத்தின் இறுக்கத்தை உடைத்து வர்க்க ஒற்றுமையைக் கட்டியெழுப்பிய செருக்கு தெரிந்தது. அச்சமற்ற களிப்பு தெரிந்தது” என்று தான் கண்ணுற்ற அனுபவத்தை அவர் பதிவு செய்கிறார்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகத்தையும், அரசையும், போலீசையும் எதிர்த்து மாருதி தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் பல வகைகளிலும் முன்னுதாரணம் படைத்திருக்கிறது. 2012-இல் கைது செய்யப்பட்ட 148 தொழிலாளிகளில் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்குக் குறைவானவர்கள். பலர் புதிதாகத் திருமணமானவர்கள். கொலை வழக்குகளில் கூலிப் படையினருக்கெல்லாம் ஒரு சில மாதங்களிலேயே பிணை வழங்கும் நீதிமன்றங்கள், மூன்றரை ஆண்டு காலத்துக்குத் தொழிலாளர்களுக்குப் பிணை வழங்கவில்லை.

மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்காக நாடு தழுவிய அளவில் 4.4.2017 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக, சென்னை – டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் ஆலை வாயிலில் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
இப்படி நிர்வாகமும் போலீசும் மட்டுமின்றி, நீதிமன்றமும் தமக்கு எதிராக நின்ற போதிலும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் அசாதாரண உறுதியைக் காட்டினர். “உயரத்தில் இருந்து விழுந்தால்தான்  பிரச்சினை. நாம் தரையில் இருப்பவர்கள் தானே? எப்படியோ பிழைத்துக் கொண்டோம். முதலாளிக்கு ஒரு தொழிற்சாலை, தொழிலாளிக்கு ஆயிரம் தொழிற்சாலைகள்” என்று மானேசர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தொழிலாளி அடக்குமுறையை எதிர்கொண்ட அனுபவத்தை அலட்சியமாக சொல்லிச் சிரித்தார்” என்று குறிப்பிடுகிறார் வினவு செய்தியாளர்.
சங்க நிர்வாகிகளையும் முன்னணியாளர்களையும் கொலை வழக்கில் சிறை வைத்துவிட்டால், அத்தோடு தொழிற்சங்கம் என்ற பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும் என்று மாருதி நிர்வாகம் போட்ட கணக்கை இளம் தொழிலாளர்கள் முறியடித்திருக்கிறார்கள். வழக்கை எதிர்கொள்வதற்கு இமான் கான் என்ற தொழிலாளியின் தலைமையில் கமிட்டி அமைத்தார்கள். உடனே இமான்கானைக் கைது செய்து சிறைவைத்தது போலீசு. அவருடைய இடத்திற்கு ஓம் பிரகாஷ் ஜாட் என்ற 28 வயது இளைஞனைத் தெரிவு செய்தனர். அவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தது போலீசு. அவர் தலைமறைவானார். மன அழுத்தம் காரணமாக மாரடைப்பால் இறந்தார். அவருடைய பொறுப்பை ராம் நிவாஸ் என்ற 31 வயது தொழிலாளி எடுத்துக்கொண்டார். அடக்குமுறைகள் செல்லுபடியாகவில்லை.
தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே ஒரு கொலை, தீவைப்பு நாடகத்தை அரங்கேற்றிய மாருதியில், தொழிற்சங்கத்தை அசைக்க முடியாமல் நிறுவிவிட்டார்கள் தொழிலாளர்கள். மாருதி தொழிலாளர்களின் உறுதி காரணமாக, அதன் கிளை நிறுவனமான பெலசோனிகாவில் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை 89-லிருந்து 705-ஆக உயர்ந்திருக்கிறது. தொழிலாளர்களின் ஊதியமும் உயர்ந்திருக்கிறது. “48 நொடிகளுக்கு ஒரு கார்” என்று 2012-இல் இலக்கு வைத்து மிரட்டிய நிர்வாகம், இப்போது “59 நொடிக்கு ஒரு கார்” என்று பணிந்திருக்கிறது.
117 தொழிலாளர்கள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டு விட்டார்கள். இருப்பினும் மாருதி நிர்வாகம் அவர்களுக்கு இழப்பீடும் கொடுக்காது, வேலையும் கொடுக்காது. 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற 14 தொழிலாளிகள் ஏற்கெனவே தண்டனைக் காலத்தைச் சிறையில் கழித்துவிட்டதால், வெளியே வந்து விட்டார்கள். எஞ்சியிருப்பவர்கள் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர். “ஆகப்பெரும்பாலான தொழிலாளிகள் விடுதலை ஆகிவிட்டார்கள். அது போதும். எங்களைப் பற்றிக் கவலை வேண்டாம்” என்று சிறையிலிருக்கும் தொழிலாளிகள் தனக்கு செய்தி அனுப்பியிருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் வழக்கறிஞர் ரெபெக்கா ஜான்.
“நிரந்தரத் தொழிலாளிகளுக்கும் தற்காலிகத் தொழிலாளிகளுக்கும் இடையிலான ஒற்றுமையை உருவாக்கியிருக்கிறோம். இது நிர்வாகத்தால் உடைக்க முடியாத ஒற்றுமை. இதுதான் 2012-இல் தொடங்கிய எங்கள் போராட்டத்தின் முக்கியமான வெற்றி” என்று சொல்கிறார் சங்கத்தின் முன்னாள் தலைவரான தொழிலாளி பவன் குமார்.
அரசும் போலீசும் தொழிலாளர் நலத்துறையும் நீதிமன்றமும் தமது நடுநிலை முகமூடி கழன்று பன்னாட்டு முதலாளிகளின் கூலிப்படைகள் என்று அம்பலமாகியிருக்கின்றன. இது மாருதி போராட்டம் வழங்கியிருக்கும் முக்கியமான செய்தி.
  • அஜித்
    புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2017

கருத்துகள் இல்லை: