சனி, 29 ஏப்ரல், 2017

ஆம் ஆத்மி தவறு செய்துவிட்டது : கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி தவறு செய்துவிட்டது : கெஜ்ரிவால்
மின்னம்பலம் :  டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சில தவறுகளை செய்ததால் எளிதில் வெற்றிபெற வேண்டியதை விட்டுவிட்டு தோல்வியைத் தழுவியுள்ளது என, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆளும்கட்சியான ஆம் ஆத்மி படுதோல்வியை சந்தித்தது. இந்தத் தேர்தலில், டெல்லியில் உள்ள 3 மாநகராட்சியையும் பாஜக தொடர்ந்து 3வது முறையாகக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. மொத்தம் உள்ள 270 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சியால் வெறும் 48 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

தேர்தல் தோல்வியால் மனமுடைந்த கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களே காரணம் என்று குற்றம்சாட்டிப் பேசினார். அதன்பின்னர், தேர்தல் தோல்வி குறித்து கடந்த சில தினங்களாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவந்த நிலையில், தவறுகள் செய்ததால் தேர்தலில் தோற்றதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் கெஜ்ரிவால் கூறியதாவது: கடந்த 2 தினங்களாக நான் கட்சித் தொண்டர்கள் மற்றும் வாக்காளரிடம் பேசினேன். அப்போது வெளிப்படையான உண்மைகள் தெரிய வந்தது. ஆம் ஆத்மி கட்சி சில தவறுகள் செய்துள்ளது. இதை ஒப்புக்கொள்கிறேன். தேர்தல் தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும். அதற்கு இதுதான் சரியான நேரம். நாங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மேலும் கட்சியில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால், கடந்த 2012ஆம் ஆண்டில்தான் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. டெல்லி சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பஞ்சாப் மற்றும் கோவாவில் கால் பதிக்க திட்டமிட்ட ஆம் ஆத்மியின் கனவு நிராசையானது. அதையடுத்து, தற்போது டெல்லி மாநகராட்சித் தேர்தலிலும் ஆம் ஆத்மி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: