சனி, 29 ஏப்ரல், 2017

போலீசில் சரணடைய வந்த ஜெயாவின் வாகன ஓட்டுனர் வீதியில் கொலை?

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் நேற்றிரவு விபத்தில் மர்மமாக இறந்ததையடுத்து, அந்த விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கொல்லப்பட்டாரா ஜெயலலிதா டிரைவர் ?கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். கனகராஜ் கார் ஓட்டுவதில் மிகுந்த திறமையானவர் என்பதால் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் -க்கு வரும்போதெல்லாம், அவரது காரை ஓட்டுவதுக்கு கனகராஜ் அழைக்கப்படுவது வழக்கம். கனகராஜை ஜெயலலிதாவின் கார் டிரைவர் வேலைக்குச் சிபாரிசு செய்தது ராவணன். சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்து அதன் பின்னர், அங்கிருந்து காரில் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் செல்லும்போது கனகராஜ்தான் மிகுந்த கவனமாக காரை ஓட்டிச் சென்றுள்ளார். ஜெயலலிதா மட்டுமன்றி சசிகலாவும் தனியாக கொடநாடு எஸ்டேட்-க்கு வரும்போது அவருக்கும் கனகராஜ்தான் கார் ஓட்டிச் சென்றுள்ளார். இப்படிப்பட்ட கனகராஜ், சேலம் அருகே ஆத்தூரில் நேற்று இரவு (28.4.2017) விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு 90க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட பிரமாண்ட பங்களா உள்ளது. இந்த எஸ்டேட்டுக்குச் செல்ல 12 நுழைவுவாயில்கள் உள்ளன. ஓய்வுக்காக ஜெயலலிதா ஊட்டி வரும்போது ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு பாதுகாப்பு குறைக்கப்பட்டு தனியார் நிறுவனத்தினர் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 24ஆம் தேதி அதிகாலை எஸ்டேட்டின் 10வது நுழைவுவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் (57) என்பவர் முகமூடி கொள்ளைக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த 9வது நுழைவுவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி கிருஷ்ண பகதூர் (37) என்பவரையும் கும்பல் தாக்கியது. இதில் அவர் மயங்கினார். அவர் இறந்துவிட்டதாகக் கருதிய கும்பல் இந்த நுழைவுவாயில்களின் எதிரேயுள்ள பங்களாவின் அறைக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கினர்.
கொடநாடு எஸ்டேட்டில் கேமராக்கள் செயல்படாததால் கொள்ளையர்கள் வந்து சென்ற கார்கள் குறித்து தெரியவில்லை. எனவே, கொலை நடந்த 24ஆம் தேதி மற்றும் அதற்கு முந்தைய நாளில் கொடநாடு பகுதிக்கு வந்து சென்ற வாகனங்கள் குறித்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும்வகையில் பஜூரோ, இன்னோவா உள்பட 5 கார்கள் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்தக் கார்களை உயிர் தப்பிய காவலாளி கிருஷ்ண பகதூரிடம் காட்டினர். அவர் கொள்ளையர்கள் வந்து சென்றதாக பஜூரோ, இன்னோவா காரை அடையாளம் காட்டினார். இதையடுத்து, கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த அந்தக் கார்களின் பதிவு எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் கிருஷ்ண பகதூர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் கம்ப்யூட்டர் உதவியுடன் கொலையாளியின் உருவப் படத்தை வரைந்து வெளியிட்டனர். அதை தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள், கர்நாடகா, கேரளா மாநில போலீசாருக்கும் அனுப்பி வைத்தனர்.
போலீசாரை திசைதிருப்ப கொலையாளிகள் சென்னை, கேரளாவுக்கு 2 பிரிவாகத் தப்பியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையிலான போலீசார் கேரள மாநிலத்திலுள்ள திருச்சூருக்கு விரைந்தனர். அங்கு இந்தக் கொலை தொடர்பாக சந்தோஷ், சதீசன், சிபு ஆகியோரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் இவர்கள் கொடநாடு கொலைச் சம்பவத்தில் கூலிப்படையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் கொடுத்த தகவலின்பேரில், மலப்புரத்தில் 3 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் 6 பேரையும் நேற்று நள்ளிரவு போலீசார் ஊட்டிக்கு அழைத்து வந்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான கனகராஜ் என்பவர்தான் இந்தச் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டது என்று போலீஸ் சந்தேகிக்கிறது.

கனகராஜ் ஜெயலலிதாவிடம் 2 வருடங்களாக கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது ஜெயலலிதாவுடன் கொடநாடுக்கு வந்துள்ளார். அந்தவகையில், கொடநாடு பங்களா பற்றிய முழு விவரங்களும் இவருக்கு அத்துபடியாக இருந்தது. இந்த நிலையில் கனகராஜ், ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் கடந்த 2012ஆம் ஆண்டு அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டனர். தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு கொடநாட்டில் உள்ள அவரது சொத்துகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார். இந்தத் திட்டத்துக்கு அவரது நண்பரான கோவையைச் சேர்ந்த சயன் என்பவர் உதவியுள்ளார். கனகராஜ் வகுத்துக் கொடுத்த திட்டத்தை சயன் கேரளாவில் உள்ள கூலிப்படை உதவியுடன் அரங்கேற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கனகராஜ், சயன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். கனகராஜைத் தேடி ஒரு தனிப்படை சென்னைக்கும் விரைந்தது. போலீசார் நெருங்குவதை தெரிந்துகொண்ட கனகராஜ் நேற்று சொந்த ஊரான சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு தப்பிச் சென்றுள்ளார். இதையறிந்த தனிப்படை போலீசார் சேலத்துக்கு விரைந்தனர்.
போலீசார் நெருங்கியதை உணர்ந்த கனகராஜ் சரணடைய முடிவு செய்து நேற்று இரவு தனது நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு சேலம் மாவட்டம், ஆத்தூர் போலீசாரிடம் சரணடையச் சென்றார். அப்போது அந்தவழியாக வேகமாக வந்த சொகுசுக் கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பலியான கனகராஜுக்கு கலைவாணி என்ற மனைவியும், 1 வயதுப் பெண் குழந்தையும் உள்ளனர். கனகராஜ் உடலைக் கைப்பற்றிய போலீசார் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தப்பியோடிய சயனை போலீசார் தேடி வருகிறார்கள். கார் விபத்தில் பலியான கனகராஜுக்கு கொடநாடு எஸ்டேட்-டில் அனைத்து விபரங்களும் தெரியும் என்பதால், அவர் இயல்பாக விபத்தில் இறந்தாரா அல்லது அவரை யாரேனும் திட்டமிட்டு கொலை செய்தார்களா என்று போலீசார் தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: