திங்கள், 24 ஏப்ரல், 2017

அந்தஸ்துக்கு ஏற்ப ஜீவனாம்சம் உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

புதுடில்லி: 'விவாகரத்து பெறும் போது, மனைவிக்கு அளிக்கப்படும் ஜீவனாம்ச தொகை, கணவன், மனைவி ஆகிய இருவரின் அந்தஸ்துக்கு பொருந்தும் வகையில் இருக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.கடந்த, 1995ல் திருமணமாகி, 2012ல், விவாகரத்து பெற்ற தம்பதி தொடர்பான வழக்கை, சமீபத்தில், கோல்கட்டா ஐகோர்ட் விசாரித்தது. விவாகரத்து பெற்ற கணவனின் மாதச் சம்பளம், 63,500 ரூபாயிலிருந்து, 95 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருந்தது. அதே சமயம், விவாகரத்து பெற்ற கணவன், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவள் மூலம், ஒரு குழந்தைக்கு தந்தையாகி உள்ளார்.கணவனின் சம்பளம் அதிகரித்து உள்ளதால், பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வந்த ஜீவனாம்ச தொகையை, 16 ஆயிரம் ரூபாயில் இருந்து, 23 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, கோல்கட்டா ஐகோர்ட் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், கணவன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஆர்.பானுமதி, எம்.எம்.சந்தனகவுடர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.


அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறும் கணவன், இருதரப்பின் அந்தஸ்துக்கு பொருந்தும் வகையில், ஜீவனாம்சம் அளிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில், ஜீவனாம்சம் அளிப்பவரின் நிதி நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஜீவனாம்ச வழக்கில், கணவன், மனைவி ஆகிய இருவரது நிகழ்கால சூழ்நிலையை பொறுத்தே, ஜீவனாம்ச தொகை அமையும்.

இந்த வழக்கில், கணவனுக்கு சம்பளம் உயர்ந்துள்ள போதிலும், அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணமாகி, குழந்தை பிறந்துள்ளது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும். அதனால், கோல்கட்டா ஐகோர்ட் கூறிய ஜீவனாம்ச தொகை, 23 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது தினமலர்

கருத்துகள் இல்லை: