சனி, 29 ஏப்ரல், 2017

தமிழகத்தில் ஒரு விவ்சாயிகூட வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளவில்லை! உச்ச நீதிமன்றத்தில் பொய்யுரைத்த தமிழக அரசு !

தமிழகத்தில் ஒரு விவசாயி் கூட வறட்சியால் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை என்ற கருணையற்ற பதிலை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் 12,602 விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர். இதில் 606 தற்கொலைகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் தற்கொலையில் தமிழகம் எட்டாவது இடத்தில் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகமும் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சி காரணமாக கடந்த நான்கு மாதங்களில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். இந்நிலையில், தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தமிழ்நாடு பொதுநல வழக்கு மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஏப்ரல்-13 ஆம் தேதி நீதிபதி தீபக் மிஷ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு அக்கறை காட்டாமல் இருக்கிறது என கண்டனம் தெரிவித்து, இவ் வழக்கு தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஏப்ரல்-28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் கடந்த ஏப்ரல்-25 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் கடந்த ஆண்டு 82 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், இவர்களில் ஒரு விவசாயிகள் கூட வறட்சியால் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை. இறந்த விவசாயிகளில் 30 பேர் தங்கள் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துக் கொண்டனர். மீதமுள்ள 52 விவசாயிகள் வயது முதிர்வு மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். மேலும், மரணம் அடைந்த 82 விவசாயிகள் குடும்பத்துக்கும் மனிதாபிமான உணர்வோடு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தேசிய விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ரூ.623 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழக விவசாயிகள் தற்கொலை வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று ஏப்ரல்-28 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது. இவ்வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை அலட்சியப்படுத்தும் வகையில் உள்ளது. இதுகுறித்து தென்னக நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு,” விவசாயிகள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. விவசாய கடனை தள்ளுபடி செய்தால் மட்டுமே விவசாயிகள் தற்கொலையை தடுக்க முடியும். தமிழக அரசு தவறான ஒரு அறிக்கையை தக்கல் செய்து உச்சநீதிமன்றத்தை ஏமாற்றப் பார்க்கிறது என்று கூறியுள்ளார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: