வெள்ளி, 28 ஏப்ரல், 2017

சசிகலாவை பயன்படுத்திய ஜெயலலிதா ... ஆசைகாட்டி, பினாமி ஆக்கி ,, கணவனை பிரித்து .. இறுதியில் சிறையில் ..?

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகு... ஜெயலலிதா சமாதிக்குச் சென்று மூன்று முறை ஓங்கியடித்து சபதம் செய்தார் சசிகலா. அப்போது, ‘இந்த பெண்மணி இவ்வளவு உறுதியாக இருக்கிறாரே?' என்று எதிர்முகாமில்கூட முணுமுணுப்புகள் எழுந்தன.
ஆனால், இப்போது அதிமுக-வில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து சிறையில் உடைந்து விம்மி வெடித்து அழுது கொண்டிருக்கிறார் சசிகலா.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை, அனைவரும் நிழல் முதல்வராகத்தான் பார்த்தார்கள். கட்சியினரும், அதிகாரிகளும், மந்திரிகள், எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் ஜெயலலிதாவுக்குப் பயந்தார்களோ இல்லையோ, சசிகலாவுக்குப் பயந்தார்கள். கும்பிடு போட்டார்கள். விசுவாசத்தைக் காட்டினார்கள். ஆனால், அனைத்தும் போலியானது என்று இப்போதுதான் முழுமையாக உணர்ந்து கொண்டிருக்கிறார் சசிகலா.

சில நாள்கள் முன்பு, சசிகலாவின் பேனர்கள் அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து பிய்த்து எறியப்பட்டன. சில மாதங்கள் முன்பு, ‘அவங்க சின்னம்மா இல்லடா... எங்க அம்மா...’ என்று கார்டன் வாசலில் கண் சிவக்க கத்திய அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று, ‘கட்சியில் இருந்து அவங்களை ஒதுக்கியாச்சு' என்று காரில் உட்கார்ந்தபடி பேட்டி கொடுக்கிறார்.
இப்படி அந்தர் பல்டி அடிக்கும் அதிமுக-வினர் பற்றி அறிந்து சசிகலா நொந்து போயிருக்கிறார். எப்போதுமே கண்ணீரைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் சசிகலா, கடந்த சில நாள்களாக அதிகமாக அழத் தொடங்கிவிட்டாராம்.
‘வாழவேண்டிய காலத்துல கணவனோடு (எம்.நடராஜன்) சேர்ந்து வாழ முடியாமல் போனது. பிள்ளையும் இல்லை, ஒண்ணும் இல்லை. அதுக்கான மருத்துவ முயற்சிகளும் எடுத்துக்கல. கணவர் உடல்நிலை சரியில்லாமல் வெளியில் இருக்கார். நான் ஜெயில்ல இருக்கேன். கடைசி காலத்துலயாவது அவரோடு இருக்க ஆசைப்படுறேன். அதுவும் முடியலை. எதுக்காக எனக்கு இத்தனை தண்டனை? எத்தனை எத்தனையோ மரியாதைகளைப் பார்த்திருக்கேன். ஆனால், அதெல்லாம் பொய். உண்மையா எனக்கு எதுவுமே இல்லை. நான் வாழ்க்கையில தோத்துட்டேன்' என்று கதறி வருகிறாராம் சசிகலா.
சிறைக்குள் சிறப்பு அனுமதி பெற்று ஜெயலலிதா படத்தையும், சில தெய்வப் படங்களையும் வைத்து வணங்கி வந்தார் சசிகலா. கடந்த சில நாள்களாக அந்தப் படங்களைக்கூட திரும்பிப் பார்ப்பது இல்லையாம்.
கோடிகள் கொட்டிக் கிடந்தாலும் அவற்றால் எப்பயனும் இல்லாமல்... ஒரு சராசரி இல்லத்தரசியாக தோற்று சிறையில் துவண்டு கொண்டிருக்கிறார் சசிகலா.
மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: