புதன், 7 செப்டம்பர், 2016

‘உங்களால முடியலன்னா போங்க...!’ - டி.ஜி.பி-யிடம் கொந்தளித்த ஜெ.


minnambalam.com :(அசோக்குமார், ஜெயலலிதா, ராஜேந்திரன்)
நெட்டைத் தொட்டதும், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது.‘‘சட்டமன்றம் முடிந்ததும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் என அடுத்தடுத்து பந்தாட ஆரம்பித்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
டி.ஜி.பி.யாக இருந்த அசோக்குமார் திடீரென விருப்ப ஓய்வு பெறுவதாக தெரிவிக்க, அவரது மனுவை ஏற்று உடனடியாக அசோக்குமாரை விடுவித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தின் டி.ஜி.பி.யாக அசோக்குமார் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அதற்குமுன்பு சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் டி.ஜி.பி-யாக இருந்தவர் ராமானுஜம். அவரது பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து அசோக்குமாருக்கு அந்தப் பொறுப்பை கொடுத்தது தமிழக அரசு. அப்போதும் ஜெயலலிதாதான் முதல்வர்.
கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் அசோக்குமாரின் பணிக்காலம் முடிவடைந்தது. ஆனாலும் அசோக்குமாரை விட மனது இல்லாமல், அவருக்கு பணி நீடிப்பு வழங்கப்பட்டது. அசோக்குமார் ஓய்வுபெற இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. அதாவது, நவம்பர் மாதம் வரை அவரது பணிக்காலம் இருக்கிறது. ஆனாலும் அவர், தற்போது விருப்ப ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துதான் விடுவிக்கப்பட்டுள்ளார். காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது பல தகவல்களைச் சொல்கிறார்கள். ‘அசோக்குமாருக்கு பணி நீடிப்பு வழங்கப்பட்டபிறகு அவர் சொல்வதை கீழே உள்ள அதிகாரிகள் பெரியளவில் கேட்கவில்லை. தமிழகத்தில் மீண்டும் அதிமுக அரசு அமைந்தபிறகு சட்டம்-ஒழுங்கு என்பது மிகப்பெரிய சவாலாக மாறிப்போனது. அசோக்குமார் சொல்வதை அதிகாரிகள் கேட்காத காரணத்தால் அவராலும் முழுமையாகச் செயல்பட முடியவில்லை. இதை அரசின் கவனத்துக்கும் அவரால் எடுத்துச்செல்ல முடியவில்லை. தன்னால் செயல்பட முடியவில்லை என அரசு நினைக்கும் என்பதே அசோக்குமாரின் கவலையாக இருந்தது. எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் தொடர்ந்து அரசை விமர்சனம் செய்து வந்தது. இதெல்லாம் முதல்வரின் கோபத்தை அதிகப்படுத்தியது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்தபிறகு அசோக்குமாரை அழைத்து முதல்வர் பேசியதாகச் சொல்கிறார்கள். ‘சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. காவல் துறையின் செயல்பாடுகளும் அப்படித்தானே இருக்கிறது...’என்று முதல்வர் சொல்ல... அமைதியாக இருந்திருக்கிறார் அசோக்குமார்.
‘உங்களால முடியலன்னா போங்க.. நான் பாத்துக்குறேன்!’ என்று கோபத்துடன் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. முதல்வரைச் சந்தித்துவிட்டு அசோக்குமார் வெளியேவந்த சில மணி நேரங்களில், ‘உங்களை விருப்ப ஓய்வுக்கு மனு கொடுக்கச் சொல்லி சொல்லச் சொன்னாங்க...’ என்ற தகவல் போயிருக்கிறது. அசோக்குமாரும் கொஞ்சமும் யோசிக்காமல் உடனடியாக மனு கொடுக்க... அரசும் உடனடியாகவே அவரை விடுவித்துவிட்டது.
இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அசோக்குமார் திமுக-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். திமுக ஆட்சி இல்லை எனத் தெரிந்தபிறகுதான் மீண்டும் அதிமுக பக்கம் வந்தார். இது முதல்வருக்குத் தெரிந்தும்கூட, அவர் சரியாகச் செயல்படுவார் என்பதால்தான் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தார். இப்போது அவரது செயல்பாடுகள் சரியில்லை என்பதால்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்" என்பதுதான் அந்த போஸ்ட்.
அதற்கு லைக் போட்டு, ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.
தொடர்ந்து கமெண்ட்டில், ‘‘அசோக்குமார் இருந்த இடத்துக்கு சென்னை சிட்டி போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாரே... அவர் பெயர்தானே எஸ்.ஆர்.எம். பச்சமுத்து விவகாரத்தில் பலமாக அடிபட்டது. அப்படியிருக்க, அவரை நம்பி எப்படி, அப்படி ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் முதல்வர்?" என்று கேட்டது.
பதில் அடுத்த ஸ்டேட்டஸ் ஆகவே தயாரானது.
‘‘பச்சமுத்துவை இந்த வழக்கிலிருந்து காப்பாற்ற காவல்துறை உயரதிகாரி ஒருவர் மறைமுகமாகச் செயல்பட்டு வருகிறார் என ஆரம்பத்திலிருந்தே நான் டிஜிட்டல் திண்ணையில் சொல்லிவந்தேன். அதேபோல, அந்த அதிகாரி பச்சமுத்துவுக்கு ஆதவராகச் செயல்படுவது கார்டனுக்குத் தெரியாது என்பதையும் நான் சொல்லியிருந்தேன். அந்த அதிகாரி ராஜேந்திரன்தான் என்பது அதிகாரிகள் வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரியும். ஆனால் முதல்வர் கவனத்துக்கு இதுவரை அந்தத் தகவல் போகவே இல்லை என்கிறார்கள். ஒருவேளை இனி, பச்சமுத்து விவகாரத்தில் ராஜேந்திரன் ஆதரவாகச் செயல்பட்டது முதல்வர் கவனத்துக்குப் போனால், அவரும்கூட அங்கிருந்து மாற்றப்படலாம். அதுவரை ராஜேந்திரன்தான் டிஜி.பி. சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தபோதே, பச்சமுத்து விவகாரத்தில் ராஜேந்திரன் செய்ததை காவல் துறையில் உள்ள அதிகாரிகள் ரசிக்கவில்லை. இப்போது டிஜிபி ஆகிவிட்டதால், பச்சமுத்துவை இந்த விவகாரத்தில் இருந்து மீட்டெடுக்க இன்னும் கூடுதல் ஆர்வம்காட்ட ஆரம்பிப்பார். எப்படி அவரை சமாளிப்பது என்ற புலம்பல் இப்போதே அதிகாரிகள் மட்டத்தில் கேட்க ஆரம்பித்துவிட்டது. இந்த விவகாரத்தை கார்டன் கவனத்துக்குக் கொண்டுபோகவும் சில அதிகாரிகள் தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளனர்" என்ற பதில் ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது.
அதற்கு லைக் போட்டு ஷேர் செய்த வாட்ஸ் அப், ‘நடக்கிறபோது பார்ப்போம்!’ என கமெண்ட் போட்டு ஆஃப் லைனில் போனது.

கருத்துகள் இல்லை: