திங்கள், 5 செப்டம்பர், 2016

காஞ்சனா தற்கொலை முயற்சிக்கு இது தான் காரணம்..! வெளிவராத தகவல்

விகடன்.காம் : தலைமை செயலகத்தில் திருவொற்றியூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காஞ்சனா, கடந்த 2ஆம் தேதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் காஞ்சனா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காஞ்சனாவின் தற்கொலை முயற்சிக்கு காவல்துறை கூறும் காரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து பெயரைக் குறிப்பிட விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் கடந்த 1999ம் ஆண்டு காஞ்னா, ஓமலூரில் சப்-இன்ஸ்பெக்டராக காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். விளையாட்டு மீது அவருக்கு அளவுகடந்த ஆர்வம் இருந்தது. பல தடகள போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வாங்கி துறைக்கு பெருமை சேர்த்தார். இதுவரை ஏராளமான பதக்கங்களை பெற்றுள்ளார். தற்போது தண்டையார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.
அங்கு பிரச்னைகள் ஏற்பட காஞ்சனா பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
துணிச்சலான இன்ஸ்பெக்டர் காஞ்சனா என்றே அவரை சக போலீஸ் அதிகாரிகள் அழைப்பதுண்டு. ஏனென்றால் எந்த காரியத்திலும் துணிச்சலுடன் செயல்படுவார். இதுவே அவரது இடமாறுதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அப்படி தான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூருக்கு வந்தார். அங்கே உள்ள இன்னொரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், காஞ்சனாவுக்கும் பணி மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த இன்ஸ்பெக்டர் காஞ்சனாவுக்கு பலவகையில் தொந்தரவு கொடுத்துள்ளார். காஞ்சனாவின் ஜீப்பை எடுக்க விடாமல் தடுத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுள்ளது. இதனால் சொந்த வாகனத்தைப் காஞ்சனா பயன்படுத்தினார். அதற்கும் சில இடையூறுகளை அந்த இன்ஸ்பெக்டர் செய்துள்ளார். இவ்வாறு பலவகையில் இடையூறு செய்த அந்த இன்ஸ்பெக்டரால் காஞ்சனா மனஉளைச்சலுக்குள்ளாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார். காஞ்சனாவுக்கு சக போலீஸ் அதிகாரியால் தொந்தரவு என்றால் அவர், உயரதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். அதற்காக தற்கொலைக்கு முயன்று காவல்துறையின் மீது களங்கத்தை ஏற்படுத்தலாமா. அவரது செயலுக்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்"என்றார்.
அடுத்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருந்தது.
"காஞ்சனா விசாரிக்கும் பல புகார்களை அந்த சரகத்தில் உள்ள ஒரு இன்ஸ்பெக்டர் விசாரித்துள்ளார். அப்போது, வடமாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண், ஒரு வழக்கில் சிக்கியுள்ளார். அவரை விசாரித்த இன்ஸ்பெக்டர், இளம்பெண்ணுடன் அதிக நெருக்கம் காட்டியுள்ளார். இது காஞ்சனாவுக்கு தெரியவந்ததும் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை கேள்வி கேட்டுள்ளார். ஜூனியர் இன்ஸ்பெக்டரான காஞ்சனா தன்னை எதிர்த்து பேசியதை பொறுக்க முடியாத அந்த இன்ஸ்பெக்டர் பழிவாங்கும் படலத்தை தொடங்கியுள்ளார். இந்த சம்பவம் நடந்த சில தினங்களுக்குள் இன்னொரு சம்பவத்திலும் இன்ஸ்பெக்டர் சிக்கியுள்ளார். அந்த சம்பவத்தில் இன்னொரு இளம்பெண்ணை இன்ஸ்பெக்டர் காப்பாற்றியுள்ளார். இதுஎல்லாம் காஞ்சனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுதொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க காஞ்சனா சொல்லியுள்ளார். ஆனால் மேலிட செல்வாக்கு காரணமாக அந்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சட்டபேரவையின் போது முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கலாம். இல்லையெனில் அங்கேயே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவோடு அங்கு வந்துள்ளார். முதல்வரை சந்திக்க வழியில்லாததால் தற்கொலைக்கு முயன்ற காஞ்சனாவை சக போலீஸார் காப்பாற்றியுள்ளனர். இப்போது காஞ்சனா மீது நடவடிக்கை எடுத்தால் இந்த விவகாரம் நிச்சயம் வெளியே தெரியும் என்பதால் போலீஸ் உயரதிகாரிகள் என்ன செய்வது என்று ஆலோசித்து வருகின்றனர்" என்றனர்.
திருவொற்றியூர் போலீஸார் கூறுகையில், "காஞ்சனா வீட்டில் எல்லா வேலைகளையும் சக போலீஸ்காரர்கள் தான் செய்ய வேண்டும் என்று அவர் நிர்பந்திப்பார். அவர் ஸ்டேசனில் பாத்ரூம் சென்றால் கூட தண்ணீர் ஊற்ற மாட்டார். அங்குள்ள சக பெண் போலீஸ் தான் ஊற்ற வேண்டும். அந்தளவுக்கு தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக அதிகாரிகள் மீட்டிங் நடந்தது. அப்போது அங்கு வந்த ஒரு இன்ஸ்பெக்டரின் கார், காஞ்சனாவின் கார் முன்னால் நிறுத்தப்பட்டது. அதை பெரிதுப்படுத்தி விட்டார் காஞ்சனா. உண்மையில் சொல்லப்போனால் காஞ்சனா குற்றம் சுமத்தும் இன்ஸ்பெக்டர் பைபாஸ் சர்ஜரி செய்தவர். அவர் மீது காஞ்சனா சொல்லும் குற்றச்சாட்டுக்கள் உண்மையல்ல" என்றனர்.   எஸ்.மகேஷ்

கருத்துகள் இல்லை: