ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

வங்கதேசத்தில் ஜமாத் இஸ்லாம் பிரமுகர் மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார்!


minnambalam.com :வங்கதேசத்தின் தொழிலதிபரும் வங்கதேசத்தில் உள்ள பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத் இ இஸ்லாம் கட்சியின் முக்கியத் தலைவருமான மிர் காசிம் அலி நேற்று இரவு வங்கதேசத்தின் காசிம்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். இது அவரது ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் தனி நாடாக உருவானபோது, அதை கடுமையாக எதிர்த்தவர் மிர் அலி. இந்தியா தன் சுயநலனுக்காகப் பாகிஸ்தானைத் துண்டாடுகிறது என்ற கருத்தை மிர் அலி கொண்டிருந்தார். பிரிவினையின்போது ஜமாத் இ இஸ்லாம் கட்சி உயர்நிலை குழு உறுப்பினர் மற்றும் ஊடக அதிபராக இருந்த மிர் அலி, இந்தப் பிரிவினைக்கு எதிராகப் போராடினார். இந்த போரில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டபோது அந்த வழக்கில் ஆறாவது போர்க்குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார் மிர் அலி. அவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
ஆனால், அவரது மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனையை நேற்று உறுதி செய்தது. இந்த வழக்கில் 2013-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை காசிம் அலியோடு சேர்த்து ஆறு பேர் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள்.
முதுமை காரணமாக இரண்டு பேருக்கு தூக்கை நிறைவேற்றாமல் வைத்திருக்கும் நிலையில், ஆறாவது நபராக குற்றம் சுமத்தப்பட்ட மிர் காசிம் அலி நேற்று இரவு காசிம்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். மிர் காசிம் அலிக்கு நிறைவேற்றப்பட்ட தூக்குத்தண்டனைக்கு பாகிஸ்தான் எதிர்வினை ஆற்றி உள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விடுத்த செய்தியில், “குறைபாடுடைய விசாரணை முறையினால், 1971-ல் டிசம்பருக்கு முன்னதாக குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டு காசிம் அலி தூக்கிலிடப்பட்டதில் பாகிஸ்தான் ஆழ்ந்த கவலை அடைந்து உள்ளது. குறப்பாடுடைய விசாரணையோடு நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகள் துன்புறுத்தல் குறித்து என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

கருத்துகள் இல்லை: