திங்கள், 5 செப்டம்பர், 2016

93 விசாலி நெடுஞ்செழியன் மாமி மகளிர் ஆணைய தலைவி - தகுதியற்ற மருமகள் கல்யாணி மதிவாணன் குழந்தைகள் ஆணைய தலைவி

தமிழ்நாடு குழந்தைகள் உரிமை
பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவி, கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் காலியாக உள்ளது. மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் பதவி மிக முக்கியமானது. அது, சுமார் 5 மாதங்களாக காலியாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதேபோல், ஒரு வழக்கில் கருத்துக்கூறிய உயர் நீதிமன்றம், 2 மாத காலத்துக்குள் குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, அதே வழக்கு செப்டம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக கல்யாணி மதிவாணனை தமிழக அரசு நியமித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மனித உரிமைகளை மதிக்கத் தெரியாதவர், குழந்தைகள் உரிமை ஆணையத் தலைவரா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டத்தை மிதித்து, நீதியை வீதியில் நிறுத்தும் செயலை சர்வசாதாரணமாக செய்யக்கூடிய அரசு ஜெயலலிதா தலைமையிலான அரசுதான். தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரை நியமிக்கும் விஷயத்தில் தமிழக அரசு நடந்துகொண்டவிதம் இதை உறுதி செய்கிறது.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டிய முக்கியக் கடமை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவருக்கு உள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கான தகுதி கல்யாணி மதிவாணனுக்கு சிறிதும் இல்லை.அதிமுக-வின் அமைப்புச் செயலாளராக இருக்கும் விசாலாட்சி நெடுஞ்செழியனின் மருமகள் என்பதைத்தவிர வேறு ஒரு தகுதியும் கல்யாணிக்கு கிடையாது. ஏற்கனவே, 93 வயதாகும் விசாலாட்சி மாநில மகளிர் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதால் அந்த ஆணையம் மூன்றரை ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. கல்யாணி மதிவாணன் குழந்தைகள் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டால் அதன் நிலையும் அப்படித்தான் ஆகும். அதிமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 191% அதிகரித்துள்ளன. 2010ஆவது ஆண்டில் 810 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 2354 ஆக அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் திறமையும், அர்ப்பணிப்பு உணர்வும் உள்ள ஒருவரை தலைவராக நியமித்தால் மட்டும்தான் ஆணையத்துக்கு புத்துயிரூட்டுவதுடன், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் குறைக்க முடியும்.
அதுமட்டுமின்றி சட்டபூர்வ அமைப்புகள், ஆணையங்கள் ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்கள் பதவிகள் அதிமுக-வினருக்கு மறுவாழ்வு வழங்கும் இடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. தகுதியே இல்லாதவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தகவல் உரிமை ஆணையம் ஆகியவற்றின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதற்கான விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவர் நியமனம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளநிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய நியமனங்களை செய்வதற்கான புதிய விதிகளை வகுப்பதுடன், தேர்வுக் குழுவையும் அமைப்பதற்கான வாய்ப்புகளை உயர்நீதிமன்றம் ஆராய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: