புதன், 7 செப்டம்பர், 2016

தீர்ப்பை மீற முடியாது; தண்ணீர் திறக்கப்படும்! - சித்தராமய்யா

மின்னம்பலம்.காம் : தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கு தினமும் 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு இடைக்கால நிவாரணமாக தண்ணீரை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்தது. மண்டியா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள், மத்திய–மாநில அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தின்போது அரசு அலுவலகம் சூறையாடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என சித்தராமய்யா அறிவித்திருந்தபடி அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் பின்னர் பேசிய அவர், "உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீற முடியாது.
தீர்ப்பை மீறுவது சட்ட விரோதமாகும். இதனால், தமிழகத்துக்கு விரைவில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படும். கர்நாடக விவசாயிகளுக்கும் குடிநீர் தேவைக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இதுவரை 33 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நாளை மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்" என்றார். தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை எப்போது திறந்துவிடுவார்கள் என்பது தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: