சென்னை: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதியன்று சிறையில் 20
ஆண்டுகளைக் கடந்த ராஜிவ் கொலையாளிகள் 7 பேர், வீரப்பன் அண்ணன் மாதையன்,
ஆட்டோ சங்கர் தம்பி மோகன் உட்பட ஆயுள் தண்டனைக் கைதிகள் 80 பேரை விடுதலை
செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
2008-ம் ஆண்டுவரை அண்ணா பிறந்த நாளையொட்டி சிறைக் கைதிகள் முன்கூட்டியே
விடுவிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் பாஜகவின் சுப்பிரமணியன்
சுவாமி இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதனால் கைதிகளை முன்கூட்டியே
விடுதலை செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சட்டசபையிலும் கூட அரசு சார்பில் விளக்கம்
அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு
கடந்த மாதம் 16-ந் தேதி முடிவுக்கு வந்தது.
தலையிட முடியாது
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கவுல், 2008-ல் முன்கூட்டியே விடுதலை
செய்யப்பட்ட பலரும் தற்போது வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர். அவர்களை
சேர்த்துக் கொண்டு வழக்கை நடத்த முடியாது. தமிழக அரசின் அரசாணையில் நாங்கள்
தலையிட முடியாது என திட்டவட்டமாக கூறி சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை
தள்ளுபடி செய்துவிட்டார்.
30 ஆண்டுகளைக் கடந்த கைதிகள்
இதனால் இந்த ஆண்டு மீண்டும் அண்ணா பிறந்த நாளில் சிறைக் கைதிகள்
விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. முதல் கட்டமாக 30 ஆண்டுகள், 20 ஆண்டுகளை
கடந்த சிறைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
யார் யார்?
ஆட்டோ சங்கரின் தம்பி மோகன் 27, சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன்
26 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் உள்ளனர். ராஜிவ் கொலை வழக்கில் 7
தமிழர்கள் 25 ஆண்டுகாலமாக சிறையில் உள்ளனர். இவர்களுடன் 19 ஆண்டுகளைக்
கடந்த கோவை குண்டுவெடிப்பு கைதிகள் உட்பட மொத்தம் 80 பேரை தமிழக அரசு
விடுதலை செய்ய வாய்ப்புள்ளது.
1000 கைதிகள் விடுவிப்பு?
அதே நேரத்தில் முந்தைய ஆட்சிகாலங்களைப் போல ஆயிரக்கணக்கான சிறைக் கைதிகளை
விடுதலை செய்யவும் வாய்ப்பிருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜிவ் கொலை வழக்கில் தமிழக அரசு தமக்கு உள்ள 161-வது பிரிவை பயன்படுத்தி 7
தமிழர்களை விடுதலை செய்துவிடும் என்றே கூறப்படுகிறது.
Read more at: /tamil.oneindia.com
Read more at: /tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக