வியாழன், 8 செப்டம்பர், 2016

பஞ்சமி நிலம்... எஸ்.ஆர். எம். கட்டடம் இடிப்பு; படம் பிடித்த ஜூ.வி. செய்தியாளர் சிறைப்பிடிப்பு


thetimestamil.com :சென்னை காட்டாங்கொளத்தூரில், சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்திற்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, ஹோட்டல் மேனேஜ் மென்ட் என பல்வேறு கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில், தலித்துகளுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர்பஞ்சமி நிலத்தையும், அதேபோன்று பொத்தேரி ஏரி, பாசன கால்வாயையும் எஸ்.ஆர்.எம். நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக பொத்தேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்துமாறு காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறைக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதிகளை கடந்த ஒரு வாரமாக ஆய்வு செய்தனர்.

அப்போது, எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் பல்வேறு கட்டடங்கள், கார் பார்க்கிங், குடோன், இருசக்கர வாகன பார்கிங் மற்றும் சாலை, படகுகுழாம் ஆகியவை பஞ்சமி மற்றும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக் கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து முதல் கட்டமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி எஸ்.ஆர்.எம். பழைய கேம்பஸ் வளாகத்தில் கட்டப் பட்டிருந்த எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ் முன்பதிவு மையம் திங்கட்கிழமை இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. மேலும், பல கட்டடங்கள் அடுத்தடுத்து இடிக்கவும் முடிவு செய்யப்பட் டுள்ளது.அரசின் நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இன் னும் 2 ஏடிஎம் மையம், டென்னிஸ் மைதானம், ஜிஎஸ்டி சாலையை ஒட்டியுள்ள 80 அடி சாலை, 20 அடி சாலை, 40 அடி சாலை, முன்பக்க வளைவு மற்றும் பூங்கா போன்றவை ஆக்கிரமிப்பில்தான் உள்ளன; பஞ்சமி நிலத்தில் ஹோட்டல், பார்க் கிங் அமைத்துள்ளனர்; அனுமதி இல் லாத படகு குழாம் உள்ளது; இவை அனைத்தையுமே மாவட்ட நிர்வாகம் இடிக்க வேண்டும் என்றனர்.
மேலும், ஏரியில் இருந்து செல்லும் பாசன கால்வாய் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டதாகவும், தங்கள் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு செல்லும் பாதையையே முற்றிலுமாக எஸ்.ஆர்.எம். நிறுவனம் ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர்கள், அதிகாரிகள் முழுமையான ஆய்வை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது தீக்கதிர் நாளிதழ்.
செய்தியாளர் சிறைப்பிடிப்பு
எஸ்ஆர்எம் கல்லூரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நேற்று முன்தினம் இரவு இடிக்கப்பட்டது. இதையறிந்ததும், ஜூனியர் விகடன் வார இதழ் நிருபர் ஜெயவேல், நேற்று மாலை 4 மணியளவில் இடிக்கப்பட்ட கட்டிடத்தை தனது செல்போன் மூலம் படம் எடுத்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டிகள், ஜெயவேலிடம் இருந்த செல்போன் மற்றும் பைக் சாவியை பறித்து கொண்டனர். பின்னர் அவரது செல்போனில் இருந்த படங்கள் அனைத்தையும் அழித்துவிட்டனர். அவர் வெளியே செல்ல முயன்றபோது, அவரை தடுத்து நிறுத்தி, சிறை வைத்தனர்.
இதுபற்றிய தகவல் செங்கல்பட்டு, தாம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள செய்தியாளர்களுக்கு தெரியவந்தது. அதேபோல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் இந்த தகவல் பரவியது. காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி உத்தரவின்பேரில் டிஎஸ்பி தென்னரசு (பொறுப்பு), மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டு இருந்த நிருபர் ஜெயவேலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுபற்றி அங்கிருந்த செக்யூரிட்டிகளிடம், போலீசார் விசாரித்தபோது, கல்லூரியை யார் படம் பிடித்தாலும், அவர்களிடம் இருந்து கேமராவை பறிமுதல் செய்ய வேண்டும். சிறை வைக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது என்றனர்.
இதற்கிடையில் செய்தியாளர்கள், பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள், போலீசாரை முற்றுகையிட்டனர். பத்திரிகை நிருபர் என அடையாள அட்டையை காண்பித்த போதும் எப்படி சிறை வைக்கலாம். அப்படி சந்தேகம் எழுந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், பத்திரிகை நிருபரை சிறைப்பிடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சட்டத்துக்கு புறம்பாக சிறை வைத்துள்ளனர் என கேள்வி எழுப்பினர். இதை பற்றி விசாரிக்க எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் செக்யூரிட்டி நிறுவன உயர் அதிகாரியை, போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவர், எந்த விஷயமானாலும், நான் கோர்ட்டில் பேசி கொள்கிறேன் என அலட்சியமாக கூறி, விசாரணைக்கு வர மறுத்துவிட்டார் என தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

கருத்துகள் இல்லை: