புதன், 7 செப்டம்பர், 2016

அந்த ஆட்டத்துக்கு நான் இனி வரமாட்டேன். ( சிறுகதை)

The moment you realize that you were always the right person. Only ignorant people walk away from greatness.” ― Shannon L. Alder
அந்த பெரிய இருபத்தி ஐந்து நிமிஷங்கள்.... என்னனவோ ஞாபகங்கள் ஒரே நேரத்தில் எல்லா கடந்த காலங்களும் நினைவுக்கு வருமா? இதுவரையில் இந்த அனுபவம் எனக்கு இருந்ததில்லை. எனக்கு மட்டும் அல்ல யாருக்குமே இப்படி எல்லா திரைப்படங்களையும் ஒரே நேரத்தில் பார்ப்பது போன்ற ஒரு அனுபவம் வாழ்வில் வந்திருக்காது.
எனக்கு முதலில் வந்த நெஞ்சு வலி ஒரு சாதாரண நெஞ்சுவலி என்று என்னால் என்ன முடியவில்லை. உடம்பெல்லாம் ஒரு வினோத நிகழ்வு நடப்பது நன்றாக உணரமுடிகிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை எனக்கு இது பயமாக இல்லை. ஆனால் ஷோபாவை நினைக்கும் போதுதான் கொஞ்சம் கவலையாக இருக்கிறது.

இது ஒரு சாதாரண நிகழ்வு என்று எனக்கு தெரிகிறது. ஒன்றும் பயப்பட
தேவையில்லை.
ஆனாலும் ஒரு விடுதலை உணர்வு ஏற்படுகிறதே?
நான் இந்த உலகத்தை மிக சின்னஞ்சிறு வயதில் பார்த்த காட்சிகள்,  கொஞ்சம் கொஞ்சமாக நான் வளர்ந்த காட்சிகள் கல்லூரிக்கு செல்லும் காட்சிகள், அம்மா அப்பா அண்ணன் தங்கையோடு சண்டை பிடிப்பதும், ஒன்றாக களவுகள் செய்து  அப்பா  அம்மாவிடம் அகப்பட்டு  திருதிருவென முழிப்பது போன்ற எல்லா காட்சிகளும் ஏனோ மீண்டும் மீண்டும் என்னை நோக்கி வந்த வண்ணமே இருக்கிறது.
இந்த சின்னஞ்சிறு வாழ்க்கையில் நான் பார்த்தது அல்லது நான் வாழ்ந்தது என்று எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம்.
ஒருவழியில் இந்த அனுபவங்கள் எல்லாவற்றையும் விட்டு நான் கொஞ்சம் தூரம் செல்கிறேன் போலவும் உணர்கிறேன்.

அதேசமயம் இவை எல்லாம் என்னோடு என்றும் இருப்பவை நான் வேறு இவை வேறல்ல என்ற எண்ணமும் தோன்றுகிறது.
திடீரென்று எல்லாம் ஒரு  மிகவும் ஆனந்தமான ஒரு கனவு போல இருக்கிறது.
சதா எனக்குள் இருக்கும் ஒரு பாரம் இப்போ இல்லாதது போல் தோன்றுகிறது.
என்னவோ ஒரு சிறையில் விடுதலை பெற்ற சுதந்திர உணர்வு பெரும் நிம்மதியை தருகிறது.
எனது கடந்த காலம் எனக்கு கொஞ்சம் எதிரியாக இருந்தது

அதாவது கொஞ்சம் துன்பமாக இருந்ததது. எனது உறவினர்கள்தான் அதற்கு பெருமளவு காரணம்.
இருந்தாலும் அவர்கள் மீது எனக்கு தற்போது எந்த  கோபமும் கிடையாது .  அடடா இது எனக்கே பெரும் அதிசயமாக இருக்கிறது.
நேற்றுவரை மிகவும் மோசமாக நான் வெறுத்த எனது அம்மாவின் உறவினர்களைகூட என்னால் இப்போது வெறுக்க முடியவில்லையே? அவர்கள் எல்லாம் மிகவும் வேடிக்கையான மனிதர்களாக அல்லவே தெரிகிறார்கள்?
இந்த மனிதர்களின் முழு வாழ்க்கையும் வெறும் குழந்தை தனம் நிறைந்த கண்ணாமூச்சி விளையாட்டு போலதான் தெரிகிறது.
குழந்தைகளுக்கு என்னதான் தெரியும்? அவர்களின் கோபம் வெறுப்பு சுயநலம் பேராசை துரோகம் எல்லாமே வெறும் சின்ன சின்ன விளையாட்டுக்கள் அல்லவா?
இவர்கள் யாரும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழப்போவதில்லையே?
இருக்கும் நாட்களின் எவ்வளவு மகிழ்வாக வாழலாம் அல்லது  வாழ்ந்திருக்கலாம்?
 ...............
இங்கு என்ன நடக்கிறது என்று அறிவதில் எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
எனது கோபத்துக்கு உரியவர்கள் எல்லோரும் என்னை வந்து பார்க்கிறார்களே?
நான் இருக்கிறேன்! ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் வேறு ஏதோ ஒரு உலகத்தில் இருப்பது போலல்லவா தோன்றுகிறது.
எனக்கு மிக அருகிலேயே எல்லோரும் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் எங்கோ ஒரு தூரத்தில் அல்லது வேறு ஒரு உலகத்தில் இருப்பது போல அல்லவா காட்சி அளிக்கிறார்கள்?
ஓஹோ அவர்கள் எல்லோரும் ஏதோ பெரும் துன்பத்தால் மனம் நொந்து அழுதுகொண்டு இருக்கிறார்களே?
ஒருவேளை என்னை நினைத்து அழுகிறார்களோ?
இருக்கட்டும் இருக்கட்டும்.
அதுவும் ஒரு வேடிக்கைதானே.
இதுவரை நடந்தது எல்லாமே ஒரு வேடிக்கையான ஆட்டமாகதானே நடந்தது.
ஏதோ நான் எங்கோ போவிட்டது போல தேம்பி தேம்பி வயது வித்தியாசம் இலாமல்அழுகிறார்கள்.
அவர்கள்  கொஞ்சம் உண்மையாகத்தான் அழுவது எனக்கு தெரியும்.
 கடந்த நிமிஷம் வரை நான் அவர்கள் கண்முன்னே தான் இருந்தேனே?
அவர்களுக்கு என்னை ஏனோ பெரிதாக தெரியவில்லை.
நான் இனி அவர்களின் டிராமாவில் இல்லை என்பதை மட்டும் அவர்களால் ஏற்றுகொள்ள கொஞ்சம் சிரமாக இருக்கிறது.
இதில் கோபம் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை.
எல்லா மனிதர்களையும் போல அவர்களும்,
 விலை மதிப்பில்லாத வாழ்வை வெறும் கரன்சி கண்களால் மட்டுமே பார்த்த  பாமரர்கள்.  
அவர்கள் வாழ்வில் காசுக்கு மிகப்பெரும் பங்கு இருந்தது.
வாழ்வின் எல்லா பக்கங்களையும் கரன்சிகளே தீர்மானித்தது.
கரன்சிகள் அவர்களுக்கு அன்பை தந்தது,  கோபத்தை தந்தது,வெறுப்பை தந்தது, விருப்பங்களை தந்தது அட காதலை கூட தந்தது.

இந்த இடத்தில் தான் அவர்களின் அந்த கரன்சி கோட்டையில் இருந்து  நான் கொஞ்சம் தவறி விழுந்து விட்டேன்   

இதில் எனக்கு ஒன்று கோபம் கிடையாது.
முன்பு அவர்கள் மீது எனக்கு அடங்காத கோபம் இருந்தது உண்மை.
ஆனால் ஏனோ தெரியவில்லை தற்போது என்னால் யாரையும் வெறுக்க முடியவில்லை.
எல்லா ஜீவராசிகள் மீதும் அன்பு கொள்வது மட்டும்தான் என்னால் முடியும். 

இப்போது ஒன்றும் குறைந்து போய்விடவில்லை.

அவர்களின்  இந்த  ஆட்டத்தின் முடிவில் அவர்கள்  அறிவு பெறுவார்கள்.

ஆனால் நான் இந்த.......ஒ...... அந்த ஆட்டத்துக்கு  இனி வரமாட்டேன்.

எனக்கு இந்த ரவுண்டு  போதும்.

எல்லாம் சுபம் .எல்லோரும் சந்தோசமா இருங்கப்பா!                              

கருத்துகள் இல்லை: