திங்கள், 12 செப்டம்பர், 2016

தமிழ் இளைஞரை தாக்கியதை புன்னகையுடன் விபரித்த கன்னட டிவி



தமிழகத்தைச் சார்ந்த சந்தோஷ் என்ற இளைஞர், சமூக வலைதளத்தில், காவிரியில் தமிழகத்தை ஆதரித்தும் தமிழ், கன்னட நடிகர்களை ஒப்பிட்டும் சில கருத்துகளை எழுதியுள்ளார். இதையடுத்து, கன்னட அமைப்பினர் கும்பலாக சேர்ந்து, சந்தோஷைக் கடுமையாக தாக்கி, நடுரோட்டில் மண்டியிட வைத்து, மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தமிழக தலைவர்கள் தங்களின் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
டாகடர் ராமதாஸ்
காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் நியாயம் குறித்து முகநூலில் கருத்து தெரிவித்ததற்காக தமிழ் இளைஞர் ஒருவர் பெங்களூருவில் கன்னட வெறியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நாளில் இருந்தே, அங்கு தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை சில கன்னட மொழி வெறி அமைப்புகள் பரப்பி வருகின்றன. பெங்களூரு, மாண்டியா, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், தமிழகமும், தமிழர்களும் அமைதி காத்து வந்தனர்.
தமிழகத்தில் நடந்த போராட்டங்களின்போது கன்னடர்களின் உடமைக்கோ, உயிருக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், கர்நாடகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களின்போது தமிழர்கள் மற்றும் தமிழகத்தின் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதும், தமிழர்கள் தாக்கப்படுவதும் நியாயமற்றவை. மனித நேயத்துக்கும், மனித உரிமைக்கும் எதிரான இச்செயல்களை சகித்துக் கொண்டிருக்க முடியாது.
காவிரி பிரச்னை காரணமாக கர்நாடகத்தில் பதற்றமும், வன்முறையும் அதிகரித்துள்ள நிலையில், தமிழர்களைக் காப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல், கர்நாடகத்தில் நடைபெறும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும்படி கர்நாடக அரசை எச்சரிக்க மத்திய அரசு தயங்குகிறது. தமிழ் இளைஞரை தாக்கிய கன்னட வெறியர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படியும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு வலுத்த பாதுகாப்பு வழங்கும்படியும் கர்நாடக அரசை மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வலியுறுத்த வேண்டும்’ என அறிக்கையில் கூறினார்.
சீமான்
“நாங்கள் எதைச் செய்தாலும் தமிழர்கள் இனவெறியர்கள், பாசிசத்தை தூண்டுபவர்கள், தீவிரவாதிகள் என்றெல்லாம் பேசி பழி சுமத்துகின்றனர். காவிரியிலிருந்து தண்ணீர் கேட்கும்போது எங்கள் பேருந்துகளை பிடித்து வைத்துக் கொள்வது, தமிழ் படங்கள் ஓடும் திரையரங்குகளை அடித்து நொறுக்குவது, மக்களுக்கு உயிர் பயத்தைக்காட்டி அச்சுறுத்தலை கொடுப்பது, பேருந்துகளைக் கல்லால் அடித்து நொறுக்குவது, தண்ணீர் எதற்கு சிறுநீர் தருகிறோம்,குடியுங்கள் என்று எழுதி அனுப்புவது போன்ற கொடுமைகள் கர்நாடகாவில் நடைபெறுகிறது.
கர்நாடக ஆர்ப்பாட்டத்தை விமர்சித்த தமிழ் இளைஞருக்கு அடி, உதை… மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த கொடூரம். எல்லா பக்கமும் எங்களை அடிக்கிறார்கள். எவ்வளவு நேரம் ஆகும் இங்கிருக்கும் கன்னடர்களை நாங்கள் அடிப்பதற்கும், விரட்டுவதற்கும். தமிழர்களுக்கு மொழிப்பற்று இனப்பற்று கிடையாது. சாதிப்பற்று, மதப்பற்றுதான் இருக்கிறது. தொடர்ச்சியாக இதை சகித்துக்கொண்டே இருப்போம் என்று எதிர்ப்பார்ப்பது மிகப்பெரிய தவறு. தமிழர்களுக்கு எந்த நேரமும் திடீரென கோபம் வரலாம்.எவனையாவது போட்டு நாங்களும் அடிக்கலாம். அது நடக்கலாம். அந்த நிலைக்கு எங்களை தள்ளாமல் ஒரு நியாயமான முடிவை எடுக்க முயற்சிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் சீமான்.
தமிழிசை சவுந்தரராஜன்
“கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் என்பது கண்டிக்கத்தக்கது. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக காங்கிரஸ் அரசு, திசை திருப்பும்விதமாக மாநில மக்களின் ஆதரவை பெறத்தான் காவிரி பிரச்னையை கையில் எடுத்துள்ளது. தமிழக எல்லையில் தமிழர்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் பாஜக-வும் பங்கேற்க தயாராக இருக்கிறோம்”.
பெ.மணியரசன்:
“தனது கருத்தைப் பதிவு செய்ததற்காக, தமிழ் இளைஞரை கன்னட வெறியர்கள் கடுமையாக தாக்கி, வீடியோ எடுத்து, அதை கன்னடத்தினரிடம் காண்பித்து,எப்படி தமிழர்களை தாக்கியிருக்கிறோம் என்று வெறியூட்டுகிறார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை.”
பொன்.ராதாகிருஷ்ணன்: “தமிழக இளைஞர் தாக்கப்பட்டதில், கர்நாடக அரசு மொழித் தீவிரவாதிகளை தூண்டிவிடுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏற்கனவே தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். தமிழக இளைஞரை தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும்”.

கருத்துகள் இல்லை: