வியாழன், 15 செப்டம்பர், 2016

சாமுத்திரிகா பெண்கள் - கமலஹாசனின் புதிய வியாபாரம் ... சாமுத்திரிகா பட்டு...


theekkathir.in :நடிகர் கமல்ஹாசன் போத்தீஸ் – ன் நிறுவனத்தின் விளம்பரத்தில்,  ‘சர்வ லட்சணமும் பொருந்திய காஞ்சிப்பட்டு, சாமுத்திரிகா பட்டு’  என்ற  விளம்பரத்தில் நடித்துள்ளார். அதில் போத்தீஸ்   நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ், நடிகர் கமலஹாசனிடம்  “ லட்சணமான பெண்களை பத்தி பேசும் போது, சாமுத்திரிகா லட்சணம் உள்ள பெண்ணுன்னு நாம சொல்லுவோம். அது மாதிரி எந்த ஒரு பட்டுக்கு எல்லா லட்சணமும் இருக்குதோ அந்த பட்டுக்கு சாமுத்திரிகா பட்டு,” எனக்கூற, அதற்கு கமல்ஹாசன் பதிலுக்கு, “ஓகோ சாமுத்திரிகா லட்சணம் இருக்கிற பெண்களுக்கு சாமுத்திரிகா பட்டு.  ஆம்பளைகளுக்கு கிடையாதுன்னு நினைக்கிறேன்,” என அந்த விளம்பரத்தில் கூறுகிறார்.

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்”
என்று பாரதி தன் காலத்தில் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக வெகுண்டு எழுந்தார்.
ஆனாலும் இன்று வரை நவீன அறிவியல் யுகத்திலும் கூட ஆணாதிக்க சமூகத்தின் பிடியில் இருந்து பெண்கள் மீண்டபாடில்லை.
பெண்மைக்கான கற்பிதங்கள்தான்  நவீனமாக மாற்றப்பட்டு வருகிறது.  பெண்கள்  அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கான ஜீவராசியாக கூட இந்த ஆணாதிக்க சமூகம் ஒத்துக்கொள்வதில்லை.
அதற்கு உறுதுணையாக  இதுவரை மதங்கள் மற்றும் மத நம்பிக்கைகள் முதன்மைப்படுத்தப்பட்டன. அந்த நம்பிக்கைகளையும் கூட நிதி மூலதனம் இன்று மிக நுட்பமாக லாபமாக்கி வருகிறது.
பெண்கள் சகல துறைகளிலும் காலூன்ற நினைத்தாலும், காலை வாரிவிடும் கூட்டமும் அந்த அளவு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறன.  அந்த கூட்டம்தான்  பெண்கள் 6 மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது. ஜீன்ஸ், குட்டை பாவாடை அணியக்கூடாது. வேலைக்கே செல்லக்கூடாது  என்று குட்டையை குழப்பிய படியே இருக்கின்றனர்.
அதற்கு ஏற்றார் போன்று பெண்களின் மீது அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளுக்கே இதுதான் காரணம் என்று கற்பிதம் செய்யப்படுகிறது. தலைநகர் தில்லியில் மட்டுமே நாள் ஒன்றிற்கு 4 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவர்களில், குட்டை பாவாடை, ஜீன்ஸ் அணியும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள்  மட்டுமில்லை. 5 வயது சிறுமி முதல் வயதான மூதாட்டி வரை இந்த பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
தற்கான  அடிப்படை காரணங்களில் மிக முக்கியமான பாத்திரத்தை ஊடகங்கள் வகிக்கின்றன. குறிப்பாக சினிமா மற்றும் விளம்பரங்களில் பெண்கள் எப்போதும் போகப்பொருளாகவே காண்பிக்கப்படுவதும் முக்கிய காரணம் என உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
விளம்பரம்
இன்று நிலவும் உலகமயமாக்கல் சந்தைக் கலாச்சாரத்தில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு, விளம்பரம் உயிர்நாடியாக இருக்கிறது.  கடந்த 2015-ல் மட்டும் 48 ஆயிரத்து 700 கோடி ரூபாய் விளம்பர சந்தையில் புழக்கத்தில் இருந்தது. உலகின் 12-வது பெரிய விளம்பரச் சந்தை இந்தியாவுடையது. 2020-ல் இந்தியா உலகின் ஏழாவது பெரிய விளம்பரச் சந்தையாக இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பெரும்பகுதியான நுகர்வு பொருட்களுக்கான விளம்பரங்களில் பெண்களே காட்சிப்பொருளாகவும், போகப்பொருளாகவும் தொடர்ந்து சித்தரிக்கப்படுகின்றனர்.
பெண்குழந்தை என்றாலே டென்ஷன் என்று பிரகாஷ்ராஜ் ஓராண்டிற்கு முன்பு ஒரு விளம்பரத்தில் தெரிவித்தார். அந்த விளம்பரத்திற்கு எதிராக  பெண்கள் அமைப்புகளின் கடும் கண்டனங்களைத் தொடர்ந்து அந்த விளம்பரம் ஒளிபரப்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடிகர் கமல்ஹாசன் போத்தீஸ் – ன் நிறுவனத்தின் விளம்பரத்தில்,  ‘சர்வ லட்சணமும் பொருந்திய காஞ்சிப்பட்டு, சாமுத்திரிகா பட்டு’  என்ற  விளம்பரத்தில் நடித்துள்ளார். அதில் போத்தீஸ்   நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ், நடிகர் கமலஹாசனிடம்  “ லட்சணமான பெண்களை பத்தி பேசும் போது, சாமுத்திரிகா லட்சணம் உள்ள பெண்ணுன்னு நாம சொல்லுவோம். அது மாதிரி எந்த ஒரு பட்டுக்கு எல்லா லட்சணமும் இருக்குதோ அந்த பட்டுக்கு சாமுத்திரிகா பட்டு,” எனக்கூற, அதற்கு கமல்ஹாசன் பதிலுக்கு, “ஓகோ சாமுத்திரிகா லட்சணம் இருக்கிற பெண்களுக்கு சாமுத்திரிகா பட்டு.  ஆம்பளைகளுக்கு கிடையாதுன்னு நினைக்கிறேன்,” என அந்த விளம்பரத்தில் கூறுகிறார்.
அது என்ன சாமுத்திரிகா லட்சணம்?
இது மேலோட்டமாக  பார்க்கும் போது அழகான பெண்களை பற்றி  பேசுவதாக மட்டுமே தெரியும். ஆனால் சாமுத்திரிகா லட்சணம் என்றால் என்னவென்று கொஞ்சம் நுட்பமாக பார்த்தால், அதில் ஆணாதிக்கத்தை ஒழித்து வைத்து, நுட்பமாக பளபளவேன, நெய்யப்பட்டிருக்கிறது புரியும். நமது இந்து மதத்தின் உபவேதத்தில் பெண்களின் அங்க அவையங்களை வைத்து, நிறம் , உடலமைப்பு ஆகியவற்றை கொண்டு சாமுத்திரிகா லட்சணம் தீர்மானிக்கப்படுகிறது என இந்து மத ஜோதிடர்கள் கூறுகின்றனர்.  அதுவும் நான்கு வகையாக பிரித்து  பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என வகைப் படுத்தப்பட்டிருக்கிறதாம். அதன் மூலம் ஒரு பெண்ணை அங்க அவைய அமைப்பின் படி பெண்களை ஒழுக்கம் உள்ளவர்களாகவும், ஒழுக்கம் இல்லாதவர்களாகவும் தீர்மானிக்கிறது.
இதில் பத்தினி என்பவள்தான் மிகவும் நேர்த்தியான அங்க அவையங்களையும்,  உத்தமமான குணத்தையும், அடக்கமான பண்பையும், கற்புக்கரசியாகவும் இருப்பார்களாம். அதன் பின் வரிசையில் இருப்பவர்கள் சித்தினி, சங்கினி, அத்தினி வகையை சேர்ந்தவர்கள்  என இந்து மத ஜோதிடர்கள் சித்தரித்துள்ளனர்.
எப்படி மனுவின் வர்ண பாகுபாட்டில் சூத்திரர்கள் கீழ் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்களோ, அதுபோல அத்தினி வகையை சேர்ந்த பெண்கள் கீழ் நிலையில் வைக்கப்படுகின்றனர். ஆனால் ஒட்டு மொத்தத்தில் பெண்களை ஆண்களுக்கான போகப்பொருளாகவே இந்த உப வேதம் கூறுகிறது.
இந்த உபவேதத்தின் படி பார்த்தால் பெற்றதாயும், உடன் பிறந்த சகோதரிகளுமே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவார்கள். சாமுத்திரிகா லட்சணப்படி பெண் வேண்டுமென்றால், அது உயிரற்ற சிலையாகத்தான் இருக்க முடியும். மனிதனே குரங்கில் இருந்து வந்தவன்தான் என அறிவியல் கூறுகிறது. காலத்திற்கு ஏற்ப எல்லாம் மாறும் தன்மையுடையவையே. மாற்றம் என்ற வார்த்தையை தவிர எல்லாம் மாறக்கூடியவையே என காரல் மார்க்ஸ் கூறுகிறார்.
ஆனால் கற்பனையை முன்வைத்து கருத்துமுதல்வாதத்தின் அடிப்படையில்  இந்த சாமுத்திரிகா லட்சணம் புனையப்பட்டிருக்கிறது. உண்மையில் சாமுத்திரிகா லட்சணப்படி பெண் வேண்டும் என்றால் அது உயிரற்ற சிலையாகத்தான் இருக்க முடியும். ஏன் என்றால் சிலை வடிவமைப்பின் போதுதான் சாமுத்திரிகா லட்சணப்படி வடிவமைப்பார்கள்.
சாமுத்திரிகா லட்சணத்தில், கால் பாதம், தொடை, இடை, மார்பகங்கள், கைவிரல், கழுத்து, கண்கள், கூந்தல், வாசம், மூக்கு, நெற்றி என ஒவ்வொன்றுக்கும் அளவீடு வரையறுக்கப்பட்டு, அந்த பட்டியல் மேலும், நீள்கிறது. அப்படி இல்லாதவர்கள் எழிலற்றவர்கள் மட்டுமல்ல ஒழுக்கத்திலும், குடும்பத்திற்கும் லாயக்கற்றவர்கள் என கூறுகிறது.
உதாரணத்திற்கு சாமுத்திரிகா லட்சணத்தில்   பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்க கூடாதாம்.  அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வரமாட்டாராம். எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவாராம்.
அதே போல் காலின் கட்டை விரல் ஒன்று வளைந்தும், மற்றொன்று வளையாமலும் இருக்க கூடாதாம். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் இருப்பார்களாம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாமாம். பெண்ணின் கால் விரல்களுக்கே இந்த கதி என்றால் மற்ற அங்க அவையங்களுக்கு என்ன மாதிரி வரையறை கொடுத்திருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள். எழுத்தில் எழுத முடியாது. அதுவும் மதத்தின் பெயரால் இந்த சமுத்திரிகா லட்சணம் மிகவும் நுட்பமாக நெய்யப்பட்டிருக்கிறது.
அதே நுட்பத்தில் கூட நடிகர் கமல்ஹாசனை இந்த விளம்பரத்தில் நடிக்க வைத்திருப்பார்களோ என்று என்ன தோன்றுகிறது. காரணம் விளம்பரத்தில் கமலஹாசன், “ஓகோ சாமுத்திரிகா லட்சணம் இருக்கிற பெண்களுக்கு சாமுத்திரிகா பட்டு.  ஆம்பளைகளுக்கு கிடையாதுன்னு நினைக்கிறேன்” என அழத்தமாக கூறுகிறார்.
அப்படியல்ல, ஆண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணம் உண்டு என இந்து மத உபவேதம் கூறுவதாக மக்களை மூடர்களாக்கும் ஜோதிடர்கள் உருவாக்கி வைத்திருக்கின்றனர். இதுதான் நம் கையை கொண்டு நம் கண்ணையே குத்த வைப்பது என்பதாகும். இனியும், சாமுத்திரிகா லட்சண முத்திரை உங்களுக்கு வேண்டுமா?
இது போகிற போக்கில் கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டிய லட்சணமல்ல. பெண்களை இழிவு செய்யும் இந்த அவலட்சணத்தை அடியோடு அகற்ற வேண்டியது பெண்ணுரிமை பாதுகாவலர்களின்  லட்சியமாக இருக்க வேண்டும்.
                                                                                                                            – எம்.பாண்டீஸ்வரி

கருத்துகள் இல்லை: