வியாழன், 15 செப்டம்பர், 2016

காவேரி .. பிரதமரின் கள்ள மௌனத்தை கண்டித்து திருமாவளவன் ரயில் மறியல்!


காவிரி பிரச்னை தொடர்பாக நடந்து வரும் வன்முறை சம்பவங்களில் மத்திய
அரசு தலையிடாமல் ஒதுங்கி இருப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். சென்னையில் தலைமை தாங்கி இந்த போராட்டங்களை நடத்தவுள்ள திருமாவளவன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் , “கர்நாடகாவில் உள்ள சில இனவெறிக் குழுக்களால் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராக மிகப்பெரிய வன்முறை தூண்டிவிடப்பட்டுள்ளது.

காவிரி பிரச்னை என்பது கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை என்பது மாறி, இரு மாநில மக்களுக்கு இடையேயான பிரச்னையாக மாறியுள்ளது. தொடர்ந்து இப்பிரச்னையில் மத்திய அரசு காட்டி வரும் அலட்சியமே இதற்கு காரணம்.
பிரச்னை இவ்வளவு தீவிரமடைந்த நிலையிலும்கூட பிரதமர் மோடி இதை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைத்திடவும் , கர்நாடக வாழ் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிடவும் வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை (செப் 16) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.
சென்னையில் நடக்கும் ரயில் மறியல் போராட்டத்துக்கு நான் தலைமை ஏற்க உள்ளேன்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: