புதன், 14 செப்டம்பர், 2016

தமிழரை நிர்வாணப்படுத்தி அடித்த கன்னட ரக்‌ஷன வேதிகே: வெறுப்பரசியலின் பின்னணி…

கன்னட ரக்‌ஷன வேதிக தலைவரும் அவர்தம் வன்முறையாளர்களும்minnambalam.com மராட்டியத்தில் இந்துத்துவ கொள்கைகளை மராட்டிய மொழிப் பற்றாக வெளிப்படுத்திக்கொள்ளும் சிவ சேனையின் அடியொற்றி கர்நாடகத்தில் 2000களின் தொடக்கத்தில் தோன்றிய வலதுசாரி அமைப்பே கன்னட ரக்‌ஷன வேதிகே. அதாவது கன்னட பாதுகாப்பு இயக்கம் என்று பொருள். கர்நாடகத்தின் அனைத்து மாவட்டத்திலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா, நியூசிலாந்து என வெளிநாடுகளிலும் 12 ஆயிரம் கிளைகளுடன் வெறுப்பரசியல் கடை பரப்பியுள்ளது இந்த அமைப்பு.
முதன் முதலில் தன்னுடைய வெறுப்பரசியலை தொடங்கியது, கர்நாடக – மராட்டிய எல்லையோரம் இருக்கும் பெல்காம் நகர் பிரச்சினையில்தான். சிவ சேனையின் அடியொற்றி தொடங்கப்பட்டாலும் சிவ சேனைதான் கன்னட ரக்‌ஷன வேதிகேவின் முதல் எதிரி. பெல்காம் தங்களுக்கு வேண்டுமென்று சிவசேனையும் கர்நாடகத்துக்கே என க.ர.வே யும் மோதிக்கொண்டன. பெல்காமை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும் என தீர்மானம் போட்ட பெல்காம் மேயர் மீது கருப்பு மை ஊற்றி (அதே சிவ சேனை பாணிதான்) ஊடகங்களில் இடம்பிடிக்க ஆரம்பித்தது.


கன்னட ரக்‌ஷன வேதிக தலைவரும் அவர்தம் வன்முறையாளர்களும்
அடுத்து, 2007-ஆம் ஆண்டு காவிரி நதிநீர்பிரச்சினையில் இந்த அமைப்பு மாநிலம் முழுவதும் முன்னெடுத்த முழுஅடைப்பு போராட்டம் ‘மாபெரும்’ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, காவிரி பிரச்சினைதான் தன்னுடைய அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என இந்த அமைப்பு தீர்மானித்தது. சிவ சேனைப் பாணியில் தமிழக ஆட்சியாளர்களின் உருவ பொம்மைகள் எரிப்பது, தமிழர்கள் அடித்து – உதைப்பது என மொழிப் பற்றை முன்னிறுத்தி வெறுப்பரசியலின் முன்னுதாரணமாக மாறியது. இதன் அடியொற்றி பல வெறி அமைப்புகள் உருவாகின.
திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்தும் இந்த அமைப்பு போராடியது. ஆனால் அது கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில்தான் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், காவிரி நீர்ப் பிரச்சினையை பூதாகரமாக்கி தன்னுடைய வெறுப்பரசியலை முடுக்கி விட்டுள்ளது இந்த அமைப்பு.
கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் வன்முறைகளில் இந்த அமைப்பின் பங்கு கணிசமானது. பெங்களூருவில் தமிழ் இளைஞரை கல்லூரிக்குச் சென்று தாக்கியது இந்த கும்பல்தான். அடுத்து முதியவர் என்றும் பாராமல் அவரை அடித்து வீழ்த்தி ரசித்ததும், ஓட்டுநர் ஒருவரை நிர்வாணமாக்கி அதை ரசித்து படமாக்கி சமூக ஊடகங்களில் விட்டதும் இந்த கும்பல்தான்.
வெறுப்பரசியலை தூக்கிப் பிடிக்கும் இந்த அமைப்புகளின் செயல்பாட்டுக்கு ஒட்டுமொத்த கர்நாடக மக்களும் பழிஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கண்டனங்களைத் தெரிவிப்பதோடு, இந்த அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை: