செவ்வாய், 13 செப்டம்பர், 2016

வீரமணி: உ.பி.யில் செல்வி மாயாவதியின் வெற்றியை நோக்கும் ‘‘சமூக என்ஜினியரிங்!’’*

தாழ்த்தப்பட்டோர் - முசுலிம்கள் இணைந்த
சமூகநீதிக் கூட்டணி உருவாகிறது*
பார்ப்பனக் கூட்டை உதறும் மாயாவதி - நம் கணிப்பு பலித்தது!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
---------------------------------
உத்தரப்பிரதேசத்தில் தலித்துகள் (தாழ்த்தப்பட்டோர்) - முஸ்லிம் உள்ளடக்கிய செல்வி மாயாவதியின் ‘‘சமூக என்ஜினியரிங்’’ கூட்டணியை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியான செல்வி மாயா வதி அவர்கள், வருகின்ற ஆண்டு (2017) உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் சரி, அதற்கடுத்து 2019 இல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, தமது கட்சியின் திடமான முடிவு - முதலமைச்சர் வேட்பாளரை நியமிக்கும் வகையில், எப்படி என்பதை, சஹரான்பூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மிகச் சரியாக தெளிவுபடுத்தி விட்டார்!

2019 இல் ஒருவேளை (மாயாவதிக்கு) தமக்கு டில்லியில் பிரதமராகும் நிலை ஏற்பட்டால்கூட, உ.பி.யில், சத்திஷ் சந்திரா (பார்ப்பன வழக்குரைஞர்) - அவர்தான் பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதிக்கு அடுத்து வரவிருக்கும் முதலமைச்சர் என்பது போன்று - அவரும், பார்ப்பனர்களின் சமூக ஊடகங்களும் கட்டி வைத்த கற்பனைக் கனவுக் கோட்டைகளை உடைத்து நொறுக்கிவிட்டார்!
*உ.பி.யில் அடுத்த முதல்வர்
பார்ப்பனர் அல்லர் - தலித்தே!*
அடுத்து உ.பி.யில் ஒரு ‘‘தலித்’’ - தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரே உ.பி. முதலமைச்சராக வருவார். ம.பி.யில் ஒரு ‘தலித்தோ’ அல்லது முஸ்லிமோ, தன் கட்சி வெற்றி பெற்றால், முதலமைச்சராக வருவார். அதேபோல, உத்தரகாண்ட் மாநிலத்தில், தம் கட்சி பகுஜன் சமாஜ் (பி.எஸ்.பி.) வெற்றி பெற்றால் ஒரு தலித் அல்லது க்ஷத்திரியர் அல்லது முஸ்லிம் முதலமைச்சராவார் என்று முழங்கியுள்ளார்.
*மாயாவதியின்
‘‘சமூக என்ஜினியரிங்!’’*
2017 உத்தரப்பிரதேச தேர்தலில் இவரது ‘சமூக என்ஜினியரிங் பார்முலா’ எப்படியிருக்கப் போகிறது என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார்!
‘‘தலித்துகள்’’ (தாழ்த்தப்பட்டோர்) - முஸ்லிம்கள் - இவர்களை இணைத்தே எனது தேர்தல் வெற்றி இலக்கு அமையும் என்று கூறிவிட்டார்!
காங்கிரஸ் சார்பில் பார்ப்பனர் வாக்கு வங்கிக்காக பார்ப்பன முதலமைச்சர் (ஷீலா தீட்சித்) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ.க. பார்ப்பனர் ஆதரவு பெற போட்டிபோடும் சூழ்நிலையில், (பார்ப்பனர்களின் வாக்கு வங்கி 12 சதவிகிதம் உள்ளதால்) செல்வி மாயாவதி அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், தலித் - முஸ்லிம்களுக்கே வாய்ப் புத் தருவேன் என்று பிரகடனப்படுத்தியுள்ளது பாராட் டுக்குரியது.
*மாயாவதியின்
உறுதி!*
‘‘சத்திஷ் சந்திரா மிஸ்ரா ஒரு வக்கீல் - எனது வழக்குகளுக்கு உதவிடுபவர்; அவ்வளவுதான்.’’ அது போலவே, மற்ற பலர். என்றாலும், இங்கே ஒரு தலித் - தாழ்த்தப்பட்டவர்தான் முதலமைச்சராக வரும் வாய்ப்பு ஏற்படும் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே மாயாவதி அவர்களது சொந்த வகுப்புப் பிரிவான ‘ஜாதவ்ஸ்’ (தாழ்த்தப்பட்டோரில் ஒரு பிரிவு) 17 சதவிகிதம் (இவர்கள் மாயாவதிக்கு முழு ஆதரவு தருபவர்கள்), முஸ்லிம்கள் சுமார் 18 சதவிகிதம்; இரண் டும் இணைந்தால் போதும் - வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.
இக்கூட்டணியில் 29 சதவிகித வாக்குகள் வாங்கி னாலே ஆட்சி அவர்களிடம் வரும் வாய்ப்புள்ளது என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, செல்வி மாயாவதி, இதில் உறுதியாக இருப்பது பார்ப்பன வட்டாரங்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது!
*நாம் கூறியது பலித்தது!*
போகப் போகப் புரியும். நாம் இதுவரை வற்புறுத்தி வந்தது - பார்ப்பன வியூகத்திலிருந்து செல்வி மாயாவதி வெளியே வரவேண்டும் என்பதுதான். அது இப்பொழுது பலித்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரியது. பொறுத்திருந்து பார்ப்போம்!
உ.பி.யில் மீண்டும் பார்ப்பன ஆட்சிக் கனவு, கானல் நீராவது மட்டும் உறுதி!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
13.9.2016

கருத்துகள் இல்லை: