செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

சினிமா... அரசியல் கட்சிகளிடமும் பெருமுதலாளிகளிடமும் அகப்பட்டு.... தமிழ் ஸ்டுடியோ அருணுடன் உரையாடல்

தமிழ் ஸ்டுடியோ’… தீவிர சினிமா விரும்பிகள் மத்தியில் பரிட்சையான பெயர். சினிமா என்னும் கலை அதற்குரிய வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதே தமிழ் ஸ்டுடியோ’வை திரை  இயக்கமாக உருமாற்றியதற்கான காரணமாகச் சொல்கிறார் மோ. அருண் . சினிமா ரசனையை இயக்கம் நடத்தியெல்லாம் மேம்படுத்த முடியாது என ஒரு பக்கம் விமர்சனங்கள் எதிர்கொண்டபடியே திரைக்கான ‘படச்சுருள்’ இதழ்,  இணைய இதழ், திரை நூல்கள், திரை நூல்களுக்கென பிரத்யேக பியூர் சினிமா விற்பனையகம், சினிமா திரையிடல், சினிமா கலைஞர்களுடன் கலந்துரையாடல் என தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறார் அருண். வடபழனியில் உள்ள பியூர் சினிமா புத்தகக் கடையில் அருணுடன் உரையாடலை நடத்தினேன்…
பொதுவான கேள்வியிலிருந்தே தொடங்கலாம்…சினிமா ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

“கதை சொல்ற பழக்கம் சின்ன வயசிலேர்ந்து இருந்தது, எங்க அம்மாகிட்டேயிருந்து அது வந்திருக்கலாம். 5 வயசுல நாங்க சென்னை வந்துட்டோம். ஈசியார்லதான் இருந்தோம், ஜெயந்தி தியேட்டர் எங்களுக்கு ரொம்ப கிட்ட. நடந்து வந்தே பார்த்துடுவோம். அப்ப தியேட்டர் வந்து சினிமா பார்க்கிற அளவுக்கு எங்களுக்கு வசதி இருந்தது. அப்பெல்லாம் டெண்ட் கொட்டாய்தான். திருமலை அப்ப டெண்ட் கொட்டாயா இருந்தது. தியேட்டர் போக வசதி இல்லாதவங்க, கொட்டாய்க்குப் போயிடுவாங்க. கொட்டாயில் 70 காசு, தியேட்டர்ல 3 ரூபா டிக்கெட்டு அப்போ. அந்த வயசுல அப்படி வந்த ஆர்வம்தான்.
பி. எஸ்ஸி. மேத்க்ஸ் விவேகானந்தா கல்லூரியில படிச்சேன். அப்புறம் எம்.சி. ஏ பண்ணேன். லைப்ரரிக்குப் போறது என்னோட பழக்கம். இப்படி பிரிட்டீஷ் லைப்ரரிக்குப் போகும்போது, ஸ்காலர்ஷிப் தேர்வு ஒன்னு நடந்தது. லண்டன் பிரிட்டீஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் சார்ந்த ஒரு அகாடமி இருக்கு, அதில் ஃபிலிம் பத்தி படிக்கிறதுக்கான ஸ்காலர்ஷிப் எனக்கு கிடைச்சது.  எனக்கு ஃபிலிம் மேல ஆர்வம் இருந்தாலும் குடும்பச்சூழல், ஒரு டிகிரி முடிச்சிட்டு வேலைக்குப் போறதுதான் நல்லதுங்கிறமாதிரி இருந்தது. இந்த கோர்ஸ் முடிக்க வருடம் ரூ. 3 லட்சம் கட்ட வேண்டியிருந்தது. ஆனா அது எனக்கு ஃப்ரியா கிடைச்சது. அவங்களே அழைச்சிட்டுப்போய், படிக்க வெச்சாங்க. அந்த மூன்று வருட படிப்புக்குப் பிறகுதான், இதுவரைக்கும் தமிழ் சினிமாவைப் பார்த்தோம் இல்ல, அந்த இமேஜ் முற்றிலும் மாறியிருந்தது.
சினிமாவே இல்லை. வேறொரு மீடியமாக இங்க இருந்தது. சினிமாவைப் படிப்பதென்பது, சினிமாவைப் பார்ப்பது. அங்க தினமும் நான்கைந்து படங்களைப் போடுவார்கள். அந்தப் படங்களை ரிசர்ச் பண்ணனும்; அனலைஸ் பண்ணனும்; இமேஜஸ் மூலாம ஒரு படத்தின் கதையை எப்படி சொல்வீங்கன்னு… நிறைய பேசிக்கிட்டே இருப்போம். க்ரூப் டிஸ்கஷன் இருக்கும். அதுபோல ஒரு கற்கும் முறை இங்கே கிடையாது. இந்திய ஃபிலிம் இன்ஸ்டிடியூட்களில் அதுபோன்ற கற்றுத்தரும் முறை இல்லை. அங்கு என்னுடைய சினிமா பத்தின பார்வையே மாறியது. அங்க நான் தங்கப் பதக்கம் வாங்கினேன்.
சென்னை திரும்பியபோது, வீட்டோட பொருளாதார நிலைமை ரொம்ப கஷ்டமா இருந்தது. சின்ன வயசுல வசதியா இருந்தோம். அப்புறம் நிறைய பிரச்சினைகளால ஏழையாகிட்டோம். மிக மோசமான பொருளாதார நிலைமை. வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். ஆனாலும் வாங்கின பதக்கத்தை வெச்சி, புனே ஃபிலிம் அப்ரிசேஷன் 15 நாள் கோர்ஸ் படிச்சேன். அங்க பி. கே. நாயர்கிட்டேயிருந்து படங்கள் வாங்கி போடுவாங்க. அப்போ அவரு வகுப்பெடுக்கலை.  அங்கேயும் நிறைய படங்கள் பார்த்தோம்; லண்டன்ல பார்த்த சில படங்களை இங்கேயும் பார்த்தேன். இங்க ஃபிலிம் அப்ரிசேஷன் பத்தி பேசறது வேறமாதிரி இருந்துச்சு. இந்திய கலாச்சார பின்னணியில் இங்க பேசினாங்க. ஸோ, இந்த இரண்டு இடங்கள் என்னை வேற மாதிரி மாத்துச்சு.
சின்ன ஐடி நிறுவனத்துல அப்போ நான் வேலைப்பார்த்துட்டு இருந்தேன். அங்க சினிமா எடுக்கிறதுல ஆர்வமா இருந்த ஒரு நண்பர் இருந்தாரு, அவர்கூட சேர்ந்து குறும்படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி தரமணி ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களைக் கேட்டோம். நான் டிஎஃப்டி படிச்சிருக்கேன்னு நண்பருக்கும் தெரியாது; அவங்ககிட்டேயும் நான் காட்டிக்கலை.  நாங்க ஐடிலேர்ந்து வர்றோம்னு சொன்னதும் அவங்க பெரிசா சம்பளம் வாங்குறோம் நினைச்சிட்டாங்க. அப்ப நாங்க, மூவாயிரத்து ஐநூறு ரூபாதான் சம்பளம் வாங்கிட்டிருந்தோம்.  சின்ன நிறுவனத்துலதான்  வேலைப் பார்த்தோம். அவங்க என்ன பண்ணாங்கன்னா, கூடிக்கூடி பேசி, நிறைய பணம் பிடுங்க ஆரம்பிச்சாங்க. எடிட்டிங்னா, 20 ஆயிரம் ஆகும். ஒரு மணிநேரத்துக்கு மூவாயிரத்து ஐநூறு, கேமராவுக்கு ஒரு நாள் வாடகை 18 ஆயிரம் ரூபா. ஒரு கட்டத்துல இவங்க ஏமாத்துறாங்கன்னு தெரிஞ்சது. குறும்படம் எடுக்கிறதை கைவிட்டுட்டு நண்பர்களோடு சேர்ந்து பேசினோம்.
இதுபோல, கிராமத்திலிருந்து சினிமா எடுக்கவந்து எத்தனை பேர் ஏமாந்திருப்பார்கள் என எங்களுக்குள்ள விவாதம் நடந்தது. அப்போதான் ‘தமிழ் ஸ்டுடியோ’ன்னு ஒரு இணையதளம் ஆரம்பித்து, சினிமா ஆர்வத்தோட வர்ற இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று முடிவெடுத்தோம். 2008ல   ‘தமிழ் ஸ்டுடியோ’ இணையதளமா ஆரம்பித்ததுதான். இதன் மூலமா, சினிமா ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு குறும்பட வட்டம் என நிகழ்வுகளை நடத்தினோம். ஆர்வத்தோட வர்ற பசங்களுக்கு படம் எடுக்கவும் தெரிவதில்லை; சும்மா வர்றாங்க, கேமராவ வெச்சி ஏதோ ஒன்னை எடுக்கிறாங்க. அவங்களை சரியா வழிகாட்டிலாம் என்று தொழிற்நுட்பங்களை சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோம்.
இப்படித்தான் இந்த பயணம் ஆரம்பித்தது. பிறகு, லண்டனிலும் புனேயிலும் கற்றுக்கொண்டதை இங்கே ஏன் செயல்படுத்திப் பார்க்கக்கூடாது என்று யோசனை வந்தது. 2008 காலக்கட்டதுல வந்த படங்கள் பார்த்தீங்கன்னா முழுக்க முழுக்க காதல் படங்களாகவும் மோசமான கமர்ஷியல் படங்களாகவுமே இருந்தன.  இங்கே அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய படங்கள் இல்லை. மும்பைலகூட அரசியல் பேசற படங்கள் இருக்கும். ஸோ கால்டு, கமர்ஷியல் படங்களுக்கு எதிரா இல்லைன்னாலும் அதற்கு இணையா இந்தப் படங்கள் வந்துக்கிட்டிருக்கும். அங்கேயிருந்துதான் ரித்விக் கட்டக் வர்றாரு; மிருனாள் சென் வர்றாரு, புத்ததேவ் தாஸ் குப்தா வர்றாரு. அதாவது நான் சொல்றது வட இந்தியாவுலேர்ந்து எடுத்துக்கலாம். ஒரு இயக்கம் அங்க தொடங்குது. ஆனா தமிழ்நாட்டுல அப்படியொரு இயக்கமே இல்லை. அதிகபட்சம் கேரளாவிலும் கர்நாடகாவிலும், அதையும் இயக்கம் என சொல்ல முடியாது, கமர்ஷியலா இல்லாம ஆர்ட் ஃபிலிமா இருக்கும். நல்ல சினிமாவா இருக்கும்.
தமிழ்நாட்டிலேயும் ஆந்திராவிலேயும் அதுபோல சூழலே இல்லை. 80கள்ல மகேந்திரன், பாலு மகேந்திரா இருந்தாங்க. நான் சொல்றது 2000க்குப் பிறகு ஒரு இயக்கம் இல்லை. இங்க ஒரு இயக்கம் தேவைன்னு நாங்க உணர்ந்தோம். பிரெஞ்சுல நியூ வேவ் இயக்கம்போல, இத்தாலியில உருவான நியோ ரியலிசம் மாதிரி ஒரு இயக்கம் வேணும்னு ‘தமிழ் ஸ்டுடியோ’வை ஒரு இயக்கமா மாத்தினோம். நல்ல சினிமாவை உருவாக்குவோம்ங்கிறதுக்காக இதைத் தொடங்கினோம்”.
நல்ல சினிமா எடுக்க ஒரு இயக்கம் எல்லாம் தேவையில்லை. சினிமா இயக்கங்களால ஒருபோதும் நல்ல சினிமாவை எடுக்க வைக்க முடியாதுன்னு சமீப காலமா ஒரு விமர்சனம் வைக்கப்படுது…
“இதுபோல அனைத்தையும் துடைத்துப்போடுகிற அறிக்கையை யார் வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போயிடலாம். ஆனா, அதை நிறுவணும். கருத்து ரீதியாக நிறுவினால் அது காலத்துக்கும் நீடிக்கும். நல்ல சினிமா என்பதற்கு இங்க நிறைய பொருள் இருக்கு. இங்க இருக்கிறவங்க, நல்ல சினிமான்னா என்ன நினைக்கிறாங்கன்னா லோ பட்ஜெட்ல படம் எடுக்கிறது, புதுமுகங்களை வைத்து எடுக்கிறது, இல்லைன்னா கஷ்டப்பட்டு வந்து படம் எடுக்கிறது, கஷ்டப்படற விளிம்புநிலை மக்களை வைத்து படம் எடுக்கிறது… இந்தமாதிரி எடுத்தா நல்ல சினிமான்னு நினைக்கிறாங்க. நல்ல சினிமா எது என்பதற்கான அர்த்தமே இங்க தெரியல. ஃபேஸ்புக்ல எழுதற படங்கள் எப்படியிருக்குன்னா, உதாரணத்தோட சொல்றேனே…‘உறியடி’ன்னு ஒரு படம், ஃபேஸ்புக்ல எல்லோரும் நல்ல படம்னு எழுதி தள்ளினாங்க. ஜாதி சங்கங்கள் எப்படி உருவாகுதுன்னு கடைசியா ஒரு டயலாக் வரும். கடைசி கட்டம் அதை நோக்கித்தான் போகும். இது மட்டும் நல்ல சினிமாவை தீர்மானிக்குமா? அது நல்ல சினிமா கிடையாது”.
ஏன்?
“சொல்றேன், அது ஒரு பிரச்சாரம். சாதி சங்கம் எப்படி உருவாகுதுன்னு ஆவணப்படம் பண்ண முடியும், குறும்படம் எடுக்க முடியும். கட்டுரை எழுத முடியும்; ஆய்வு செய்ய முடியும். சினிமாங்கிறது ஒரு மீடியம் இல்லையா? அந்த மீடியத்துக்கு ஏத்தமாதிரி நீங்க அதை மாற்ற வேண்டும். சினிமாவுக்கு வடிவம் ரொம்ப முக்கியம். அது இல்லாம சினிமாவை உருவாக்க முடியாது. கருத்தியலை மட்டும் சொல்றதுக்கு சினிமாவைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதை நீங்க பிரச்சாரமா பேசிட்டுப் போயிடலாம்”
கருத்தியலை வெகுஜென மீடியத்துல கொண்டுபோகக்கூடாதுன்னு சொல்ல வர்றீங்களா?
“இல்லை. கொண்டு போகலாம். ஆனா இங்க நோக்கம், எடுக்கிறவங்களை லைம் லைட்ல வைக்கிறதா இருக்கு. நிறைய படங்கள் சொல்லலாம். ‘அங்காடித்தெரு’ன்னு ஒரு படம் வந்துச்சு. அந்தப் படம் வந்த பிறகு, சரவணா ஸ்டோர்ல ஏதாவது மாற்றம் வந்ததா? தி. நகர்ல ஏதாவது மாற்றம் நடந்ததா? படங்கள் உடனடியா மாற்றம் ஏற்படுத்தாதுன்னு நான் நம்பறேன். ஆனா அந்தப் படங்களைப் பார்க்கும்போதே உங்களுக்குள்ள ஒரு மாற்றம் வரும். நீங்க பார்த்துட்டு அழறீங்க, இந்தமாதிரியெல்லாம் நடக்குதான்னு வருத்தப்படறீங்க. இந்த டைவர்ஷன் இருக்குல்ல, படம் பார்க்கும்போதே ஒரு வடிகால் கிடைச்சிடுது, அழுதுவிடுகிறீர்கள், அங்கே அது முடிந்துவிடுகிறது. ரியல் சினிமாவோட வேலை, பிராச்சாரமா சொல்றதில்ல; உங்களை சிந்திக்க வைக்கிறதுதான்”.
‘பன்றி’ன்னு ஒரு படம் வந்தது. அதை நீங்க பிரச்சாரம்னு பார்க்கிறீங்களா? கலை சினிமாவா பார்க்கிறீங்களா?
“அதை நான் பிரச்சாரம்னு சொல்லலை. நான் என்ன சொல்றன்னா, முதல்ல சினிமாவை அதோட ஃபார்ம்ல சொல்லுங்கன்னு சொல்றேன். விஷுவலா அதைப் பத்தி பேசணும். இந்தியா மாதிரியான மூன்றாம் உலக நாடுகள்ல வெறுமனே வடிவத்தை மட்டும் பேச முடியாது. மேற்கத்திய நாடுகள்ல இதைப் பேசலாம். ஏன்னா அங்க பொலிடிகல் கரெப்ட்னஸ் கிடையாது. அங்க தெளிவான சட்டவிதிகள் இருக்கு; அதைத்தாண்டியும் கென் லோச் (Ken Loach) மாதிரியானவங்க அரசியல் பேசுவாங்க, சினிமாவோட வடிவத்துல அதை பேசுவாங்க. அந்தமாதிரியான படங்கள் வரணும்னுதான் நாம போராடிக்கிட்டி இருக்கோம். அதுதான் ரியல் சினிமா. இங்க இருக்கிறது, ஒன்னு பிரச்சார படமா இருக்கு, அதுல வடிவம் மோசமா இருக்கும். இல்லை வடிவம் நல்லாருக்கும்; ஆனா அதுல உள்ளடக்கம் எதுவுமே இருக்காது. நம்ம ஊர்ல இருக்கிற பிரச்சினை எதுவுமே இல்லாம, ஒரு மேலோட்டமான சினிமாவா இருக்கு. இது இரண்டு சந்திக்கிற சினிமாதான் ரியல் சினிமாவா இருக்கும்”.
ரியல் சினிமா, பியூர் சினிமா…சினிமாவுக்கு ஏன் இந்த ‘புனித’த்தன்மை வேண்டும்?
“சினிமாவை சினிமாவுக்கான வடிவத்துல கொண்டுவாங்கன்னு சொல்றதுதான் ‘பியூர் சினிமா’. முன்னமே சொன்னதுபோல, நம்ம ஊர்ல, அறிவார்த்தமாகூட பேசவேண்டாம்…சினிமா என்னன்னு கேட்டா, நாடகத்துல இருந்து வந்ததுன்னு சொல்வாங்க. நமக்கு தான் அப்படி. 100 வருடங்களுக்கு முன்பு, மும்பையிலேர்ந்து இங்க வருது. அதுக்கு முன்னாடி நாடகம்தான் நாம போட்டுக்கிட்டு இருந்தோம். நாடகங்களின் நீட்சி சினிமான்னு சொல்லிட்டு நாம பேசக்கூடாது. ஏன்னா சினிமாவை நாம கண்டுபிடிக்கல. நீங்க கண்டுபிடிச்சாதான், அது நாடகத்தோட நீட்சியா இருக்க வாய்ப்பிருக்கு. நீங்க நாடகம் போட்டுக்கிட்டு இருந்தீங்க, உங்களுக்கு ஒரு அறிவியல் கருவி கிடைக்குது. கேமரா மாதிரி ஒன்னு கிடைக்குது, இதை புரஜெக்ட் பண்ணா படம் தெரியும்கிறபோது, இதைக் கொண்டுபோய் வெச்சிக்கிட்டு அதே நாடகத்தை இதுல போடறதுக்குப் பேரு சினிமா கிடையாது.
சினிமா வடிவத்துல நிறைய பண்ண முடியும். நிறைய சாத்தியங்கள் இருக்கு. நாடகத்துல என்ன பண்ண முடியும்னா, நான் வந்து மேடையில் நிப்பேன். நீங்க என்னை மட்டும்தான் பார்க்கணும். நான் சொல்றதை கேட்டுட்டு போயிடுவீங்க. நாடகத்துல ஒரே ஷாட் தான், நீங்க என்ன பார்க்கிறீங்களோ அது ஒன்னுமட்டும்தான். சினிமாவுல ஒரே நேரத்துல பல ஷாட்டுகளைக் காட்ட முடியும். ஷாட்டோட வேலை என்னன்னா இந்தக் கதையை நேர்த்தியா நகர்த்தறது. ஆடியன்ஸை ஏமாத்தாம, கருத்தியல் ரீதியா தாக்கத்தை ஏற்படுத்துறது ஷாட்டோட நோக்கமா இருக்கும்.
இங்க என்ன நடந்துச்சுன்னா, நாடகம் போட்டுக்கிட்டே இருந்தாங்க, கேமரா கிடைச்ச உடனே, அதை நாடகம் போடற இடத்துல கொண்டுபோய் வெச்சாங்க. நாடகங்கள் சினிமா உருமாற ஆரம்பிச்சது. அங்க வடிவம் அடிபட ஆரம்பித்தது. நாடகத்துல பேசிக்கிட்டே இருப்பாங்க. ஏன் பேசறாங்கன்னா, பேசலைன்னா பார்க்கிறவன் தூங்கிடுவான். காதுல சப்தம் கேட்டுக்கிட்டே இருக்கணும், அதனால அவன் முழுச்சிக்கிட்டே இருப்பான். தமிழ் சினிமாவுல ‘சைலன்ஸ்’னு ஒரு ஏரியாவே கிடையாது. பாலு மகேந்திரா படங்களைத் தவிர்த்து எந்தப் படங்களைப் பார்த்தாலுமே சைலன்ஸே இருக்காது. சத்தம் போட்டுக்கிட்டே இருப்பாங்க. இசை சத்தமாவே இருந்திட்டு இருக்கும். ஏன்னு கேட்டா, படத்தை தொய்வடைய விடாம சப்தங்களை சேர்த்துக்கிட்டே இருப்பார்கள். சப்தங்களை உங்களை திசைதிருப்பாமல் படத்தை கவனிக்க வைக்கும். சில நேரம் அதுவே உறுத்தலா மாறிடும். இப்ப தமிழ் சினிமாமாவுல அப்படித்தான் உறுத்தலா மாறிக்கிட்டிருக்கு. நிறைய பேர் இதைப் பத்தி பேசறாங்க.
ஸோ…இந்த இடத்துலதான் நாம பியூர் சினிமாவைப் பத்தி பேச வேண்டியிருக்கு. லிட்ரேச்சரை ஏன் பியூர் லிட்ரேச்சர்னு சொல்றோம்? நவீன இலக்கியம், சங்க இலக்கியம்னு பேசறோம். செய்யுள், உரைநடைன்னு காலத்துக்கு ஏத்தமாதிரி வடிவம் மாறுகிறது. இப்ப ஒரு ஓவியத்தை எடுத்துக்குவோம். ஓவியம்னா என்ன, லைன்ஸ் இருக்கும், கலர்ஸ் இருக்கும். ஓவியத்துல ஒரு உடலை வரைஞ்சிட்டு கண் வர்ற இடத்துல கண், கால் இருக்க வேண்டிய இடத்துல கால்னு எழுதிட்டு அதை ஓவியன்னு சொல்ல முடியுமா? ஓவியத்துக்குன்னு ஒரு வடிவம் இருக்கு. என்ன சொல்ல விரும்புறீங்களோ அதை வரையணும். அதுபோல சினிமாவுக்குன்னு ஒரு வடிவம் இருக்கு. அதோட வடிவம், இயல்புத்தன்மையை நீங்க களைச்சிட்டீங்க. உங்களோட அரசியல் நோக்கத்துக்காக, குறிப்பா திராவிட அரசியல் நோக்கத்துக்காகவும் பிரச்சார நோக்கத்துக்காகவும் அவங்கதான் அதை பிரச்சாரமா மாத்தினது. திராவிட சினிமா தான் தமிழ் சினிமாவை பிரச்சார சினிமாவா மாத்தினது. அதுக்கு முன்னாடி வரைக்கும் தமிழ் சினிமா, தெய்வாதீனமா வந்தது; நிறைய புராணங்கள் படமா எடுக்கப்பட்டது. இவங்க வந்து அதை மாற்றுகிறார்கள். அது ரொம்ப முக்கியமான மாற்றம்தான். சினிமாவை மக்களுக்காக மாற்றுகிறார்கள். அரசியல் ரீதியாக ஒரு பெரிய மாற்றம். ஆனா அதை எப்படி செய்திருக்க வேண்டுமென்றால், சினிமா வடிவத்தோட அதை செய்திருக்க வேண்டும். உங்களுடைய அரசியல் லாபங்களுக்காக, அந்த வடிவத்தை சிதைச்சி, வேறவொரு வடிவத்துல, இயல்புத்தன்மையை களைச்சிட்டீங்க. நான் பியூர்னு சொல்றது, சினிமாவோட இயல்புத்தன்மையை மீட்டெடுக்கிறதுதான்”.
தமிழ் ஸ்டுடியோ இதுவரையான பயணத்துல இழந்தது என்ன? பெற்றது என்ன?
“அப்படி எதுவும் கணக்கில் கொள்ளாமல்தான் பயணிக்கிறோம். முன்பு மாதம் ஒருமுறை குறும்பட இயக்கம்னு நடத்திக்கிட்டு இருந்தோம். இப்போ ஆக்டிவிட்டீஸை அதிகப்படுத்தியிருக்கோம். . ஒரு கட்டத்துல அமைதியா இருக்கறதுக்கான தேவை களைச்சிபோட்டுடுச்சி, நீங்க நிறைய வேலை செய்யணும்கிற நிலைமை ஆகிடுச்சி. ஏன்னா நான் எங்க தமிழ் சினிமாவைப் பத்தி பேசினாலும் பிரச்சினைக்குரியதா மாறிடுது. சினிமா எப்படியிருக்குன்னா மோசமான சினிமா, பார்வையாளரை எப்படி நினைக்க சொல்லுதுன்னா ரொம்ப நல்ல சினிமான்னு நினைக்க வைக்குது. போலித்தனமான சினிமாவா மாறுது. இந்த இடத்துல உண்மையை பேசறதுக்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கு. நான் நிறைய எழுதினது கிடையாது. தமிழ் ஸ்டுடியோவோட வேலையே முழுக்க முழுக்க செயல்படறதுதான். நிறைய வேலை செய்வோம், எக்கச்சக்கமான சந்திப்புகள் நடத்துவோம். நிறைய படங்கள் போடுவோம். கிராமம் கிராமமா கொண்டுபோய் நல்ல படங்கள் பத்தி விவாதிப்போம். குறும்படங்கள் போட்டதால சில கிராமங்கள் சண்டையெல்லாம் வந்திருக்கு. குறிப்பா திருவண்ணாமலையில ரெண்டு ஜாதிக்குள்ள சண்டையெல்லாம் வந்திருக்கு. அங்க ஜாதி தொடர்பா ஒரு படத்தைப் போட்டோம். ரெண்டு சாதியினருமே எங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கும்போதே அடி, தடி வரைக்கும் போயிட்டாங்க. நான் சொல்றது 2009ல நடந்தது.
இதே சினிமாவை வெச்சி பெரிய மாற்றமெல்லாம் நடத்தியிருக்கோம். தருமபுரி மாவட்டத்துல எல்லோருடைய பல்லும் மஞ்சள் நிறத்துல இருக்கும். அதைப் பத்தி யாருமே அதுவரைக்கும் பேசல. முதல் முறையா நாங்க போய் கேள்வி கேட்கிறோம். அந்தப் பகுதியில படம் போடும்போது, அங்க எல்லோருடைய பல்லும் மஞ்சள் நிறத்துல இருக்குன்னு கேட்கிறோம். யாருக்குமே பதில் சொல்லத் தெரியல. இங்க எல்லோருக்குமே அப்படித்தான். அந்தப் பகுதிகள்ல ஃபுளூரைடு அதிகம். அதனால் பற்கள் மஞ்சளா இருக்கு.  ஃபுளூரைடு எப்படி அந்த ஊர் தண்ணீர்ல அதிகம் சேருதுன்னு அந்த ஊர்மக்களுக்கு படம் எடுத்து போட்டு காட்டினோம். இப்ப அதைப் பத்தி பேசறாங்க. முதல்முதல் நாங்க தான் பேசறோம்.
சண்டைக்கூட எப்படி நடக்குதுன்னா, ஒரு ஜாதிக்காரங்க இன்னொரு சாதிக்கு எதிரா படம் போடறதா நினைக்கிறதாலதான். நாங்க பேசித்தீர்க்க முயற்சி பண்ணியிருக்கோம். ஆனா அது நடக்கல. அவ்வளவு சீக்கிரம் நடந்ததுன்னா வேற வேலை எங்களுக்கு இல்லாம போயிடும். இப்படி நிறைய வேலைப் பார்த்திட்டு இருக்கும்போது ஃபேஸ்புக்குன்னு ஒரு சமூக ஊடகம் 2010ல அறிமுகமாகுது. அதுவரைக்கும் நாங்க வலைத்தளங்கள்ல இயங்க நேரம் கிடைக்கல. நான் ஐடி நிறுவனத்துல வேலைப் பார்த்தேன். நேரம் கிடைப்பது குறைவுதான். ஃபேஸ்புக் பொறுத்தவரைக்கும் அலுவலகத்திலேயே அமர்ந்து வேலைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை கொடுத்தது. எனக்கு தமிழ் தட்டச்சு தெரியும். ஐந்து நிமிடத்துல் 60 வார்த்தைகளை என்னால் எழுத முடிந்தது. பத்தி பத்தியா எழுத முடிந்தது. அந்த சுதந்திரம் அலுவலகத்திலும் இருந்தது. எழுத ஆரம்பித்தபோதுதான் பிரச்சினைகள் அதிகமாக ஆரம்பிச்சது. நிறைய இழக்க ஆரம்பிச்சோம்.
ஒரு சித்தாந்த ரீதியிலான ஒரு உரையாடலை எழுத்து வடிவத்துக்குக் கொண்டுவரும்போது நிறைய இழக்க ஆரம்பித்துவிடுவோம். சித்தாந்த ரீதியா வேலைப் பார்க்கும்போது உங்களுடைய சித்தாந்தம் என்னன்னு யாருக்கும் தெரியாது. இயக்க ரீதியா வேலைப் பார்க்கிறது தெரியும். இந்த வேலை எதை நோக்கியதுங்கிறதை தீர்மானமா முன்வைக்கும்போது, அது நிறைய பிரச்சினைகளைக் கொண்டுவரும். செயல்பாடுகள் எல்லோரையும் ஒருங்கிணைப்பதா இருக்கும் ஒரு ஊர்ல போயிட்டீங்கன்னு அந்த ஊருல இருக்க எல்லோரையும் ஒருங்கிணைச்சு வேலை பார்த்திடலாம். ஆனா, பேச்சும் எழுத்தும் அப்படியல்ல”
DSC_0219
இதையொட்டி ஒரு கேள்வி… சமூக ஊடகங்கள்ல உங்க கருத்து அடிக்கடி சர்ச்சைகளுக்கு உள்ளாகுது, இதை எப்படி பார்க்கிறீர்கள்?
“மூன்றாம் உலக நாடுகள்…  போரால் பாதிக்கப்பட்ட வியட்நாம்லேர்ந்து படங்கள் வருது. அவங்க அரசியல் பேசறாங்க. கியூபாவில் இருந்து வர்ற படங்கள்… மூன்றாம் உலக நாடுகள்னு சொல்றது பொருளாதார அடிப்படையிலும் அரசியல் நிர்மாண அடிப்படையிலும் பின் தங்கியுள்ள நாடுகள். இந்தியாவும் அதுலதான் இருக்கு. நாம முன்னேறும் நாடுன்னு சொல்லிக்கிட்டாலும் உண்மை அதுதான். கியூபா, வியட்நாம்லேர்ந்து வர்ற படங்கள் மக்கள் பிரச்சினையை பேசுது.  இலக்கியம், சினிமா என எல்லா மீடியத்திலும் அதை முன்வைக்கிறாங்க. ஆனா இங்க தமிழ்நாட்ல இலக்கியமாகட்டும் சினிமாவாகட்டும் மக்கள் பிரச்சினையை அதிகம் பேசறதே இல்லை. சுருக்கமா சொல்றேன்.. நீங்க தமிழ்நாட்டுக்கு வரமா, ஏதோ ஒரு நாட்ல இருந்துட்டு இங்க எழுதப்படற நாலு இலக்கிய புத்தகங்களையும், எடுக்கப்படற பத்து படங்களையும் பார்த்துட்டு, நானே சொல்லக்கேட்டிருக்கேன்..‘உங்க ஊரே ரொம்ப அமைதியா, தெய்வாதீனமா, சுபிட்சமா இருக்கு… எல்லோரும் லவ் பண்ணிக்கிட்டு இருக்காங்க”ன்னு சொல்லியிருக்காங்க. பசுமையான ஊர்கள், எல்லாமே அழகாயிருக்குன்னும் சொல்வாங்க. அதுபோல இலக்கியத்தை படிச்சா உயர்வா இருக்கு. இலக்கிய கதாபாத்திரங்கள் எல்லாம் ரொம்ப நல்லவங்களாவே இருக்காங்க.. இந்த மாதிரி ஒரு பிரச்சினையும் இல்லாத ஊர்ல எதுக்கு இந்த மாதிரி ஒரு இயக்கம்னு எனக்கு கேள்வி வந்தது.
இதே நீங்க கியூபப் படங்களைப் பாருங்க, சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகளின் படங்கள், வியட்நாம், லத்தீன் அமெரிக்க படங்கள்…இவங்க சினிமா ஃபார்ம்ல இருந்து அரசியலை பேசறாங்க. மூன்றாம் உலக நாடுகள் அத்தனையிலேயும் இது நடக்கும்போது, இங்க மட்டும் அது ஏன் நடக்கலை? முன்னமே சொன்னமாதிரி சினிமா மக்கள் கையில் இல்ல.  சினிமாங்கிறது இங்க முதலீட்டைக் கோரும் கலை. கலைங்கிறதை தூக்கிட்டாங்க, வணிகம்னு ஆக்கிட்டாங்க. ஃபிலிம் இண்டஸ்ட்ரியா மாத்திட்டாங்க..முதலீட்டை கோராத கலை இங்க என்ன இருக்கு. இன்னைக்கு ஒரு இலக்கிய புத்தகம் 1000 பிரதிகள் அச்சடிக்க, ரூ. 1 லட்சம், குறைந்தது 50 ஆயிரம் ரூபா தேவை. இன்னைக்கு முதலீட்டை கோராத கலைன்னு எதுவும் இல்லை. ஒரு பெயிண்டிங் செய்ய, கேன்வாஸ், பெயிண்ட், பிரஷ்னு ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்யணும். இலக்கியமாகட்டும், ஓவியமாகட்டும், இசையாகட்டும், அதே போல சினிமாங்கிறது எல்லா கலைகளையும் ஒருங்கிணைக்கிற கலை. முதலீடு கொஞ்சம் அதிகமா தேவைப்படும்.
என்ன பிரச்சினைன்னா இந்த முதலீடெல்லாம் மக்கள்கிட்டதான் இருக்கு..ஓவியமாகட்டும், இலக்கியமாகட்டும் அது மக்கள்கிட்டதான் இருக்கு.  சினிமா மட்டும் தொழிலதிபர்கள்கிட்டேயும் அரசியல் கட்சிகள்கிட்டேயும் அரசியல் பெருமுதலாளிகள்கிட்டேயும் இருக்கு, காரணம் மாஸ்.  இசையும் ஓவியமும் கணிசமான மக்களைத்தான் சென்றடையுது. ஆனா சினிமாவுக்கு ஒரு மாஸ் இருக்கு. இரண்டு படங்கள்ல தோன்றி நடிச்சவர் எம்பியாகவும் எம் எல் ஏவாகவோ முடியும். நீங்க வாழ்நாள் முழுக்க வரைஞ்சாலும் கவுன்சிலர்கூட ஆக முடியாது. வாழ்நாள் முழுக்க இசைக்கலைஞரா இருந்தாலும் எம்எல்ஏ ஆக முடியாது. ஆனா தன் சொந்த பணத்தை முதலீடு செய்து நடிச்சி, படமெடுத்து, எம்பி ஆனவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.  ஐந்து முதலமைச்சர்கள் தமிழ் சினிமாவில் இருந்து உருவானவங்கன்னு சொல்றோம். அப்ப சினிமாவுக்கு பின்னாடி பெரிய பாலிடிக்ஸ் இருக்கும். என்னன்னா சினிமாவை வெறுமனே முதலீட்டைக் கோரும் கலைன்னு சொல்லிட முடியாது. அரசியல் லாபத்துக்காக இந்த மீடியத்தை வெச்சி பெரிய பவர் லாபி பண்ணலாம்ங்கிறதுக்காக அப்படி மாத்திட்டாங்க. அதிகாரத்தை மையப்படுத்திய உருவானதால்தான் அது கரெப்ட் ஆனது.
இதையெல்லாம் கேள்விகேட்கும்போது மென்மையான வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்க முடியாது. செல்லக்குட்டிங்களா, குழந்தைகளான்னு பேசமுடியாது. ஒற்றை வைக்கோல் புரட்சி பத்தி சொன்ன சூழலியலாளர் மசானா புகோகாகிட்ட இதே போல ஒரு கேள்வியைக் கேட்டாங்க.. அவர் என்னைவிட காத்திரமா, காட்டமா பதில் சொன்னாரு “உலகம் முழுக்க இயற்கை வேகமாக அழிக்க பெரிய இயக்கங்கள் இருக்கின்றன. நான் இயற்கையை காப்பாற்றுவதற்காகவும் விவசாயத்தைக் காப்பாற்றுவதற்காகவும் சின்ன இயக்கமான நாங்கள், மென்மையாகப் பேசிக்கொண்டிருந்தால், யாரும் எங்களைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.  இப்படிப் பேசுவதன் மூலம் குறைந்தபட்ச கவனமாவது எங்களுக்குக் கிடைக்கிறது. சின்ன அதிர்வு உண்டுபண்ணுகிறோம்” என்றார்”.
ஆனால், வினை… எதிர்வினை…இதுவே ஒரு செயல்பாடாக மாறிவிடாதா?
“உங்களுடைய நோக்கம் என்னங்கிறது முக்கியம். சமாளிக்கிறது நமக்கு நோக்கம் இல்லை. அதுவுமில்லாம இவங்க அப்பிராணிகளா இருக்காங்க. தங்களுக்கு எதுவும் தெரியாம.. எல்லாம் தெரிஞ்சமாதிரி அமெச்சூர் தனமா இருக்காங்க.. இவங்க எங்க இருக்காங்கன்னா சமூக ஊடகங்கள்ல, ஊடகங்கள்ல இருக்காங்க. இன்னைக்கு தமிழ் ஸ்டுடியோ பத்தி எந்த மீடியாவும் எழுதாது. நடிகர் லாரன்ஸ் கொடுத்த பணத்தை விகடன் 100 பேருக்கு 1 லட்சம்னு பிரிச்சி கொடுத்தது. இந்தப் பணத்தை எங்கிட்ட கொடுத்தா நான் வாங்கியிருக்க மாட்டேன். ஆனா, எங்க இயக்கத்தை அவங்க பரிசீலனைகூட செய்யலை. சினிமா இயக்கத்துக்கு கொடுக்கமாட்டாங்கன்னு சொல்லலாம்.  நல்ல சினிமாவை வளர்த்தெடுக்கிறாங்கன்னு ரெண்டு பேருக்கு ரூ. 1 லட்சம் கொடுத்திருக்காங்க. தமிழ் ஸ்டுடியோ 9 வருஷமா நல்ல சினிமாவுக்காக வேலை செஞ்சிக்கிட்டு இருக்கு.. ஏன் கொடுக்கலைன்னா நான் வைக்கிற விமர்சனங்கள்தான் காரணம்.
இதை ஏன் நான் பதிவு செய்றேன்னா, இதை நான் கிஃப்டாதான் பார்க்கிறேன். இதனால் மனசு உடைந்து போகவில்லை. பியூர் சினிமா புத்தகக் கடை ஆரம்பித்தது பத்தி மலையாள மனோராமா பத்திரிகையில வந்தது. ஆனால் இங்கே இருக்கிற தினமலர் தவிர, வேற எந்த பத்திரிகையிலும் வரலை. பத்திரிகை துறையில நிறைய நண்பர்கள் இருக்காங்க. ஆனா, எல்லோரும் எப்படின்னா, ‘உன்னை எப்படி வளரவிட்டுடுவேனா பாரு’ன்னு சொல்றவங்கதான்”.
தமிழ் ஊடகங்கள்ல லாபி நடக்குதுன்னு சொல்ல வர்றீங்களா?
“ஆமா…இங்க அப்படித்தான். ஒன்றிரண்டு நேர்மையான பத்திரிகையாளர்கள் இருக்கலாம். ஆனா தலைமை என்ன சொல்லுதோ அதுதான் அங்கே இறுதியானது. அதோடு ஊடகத்தில் இருக்கிறவங்களும் பொதுமக்களும்கூட சுற்றுச்சூழல், இயற்கை விவசாய செயல்பாட்டாளர்களுக்குக் கொடுக்கிற மரியாதையை சினிமாவுக்காக வேலை செய்றவங்களுக்கு கொடுக்கிறதில்ல.. நீர்நிலை பாதுகாப்போம்னு என்னுடைய நண்பர், அவர் பேரும் அருண் தான், அவருக்கு இந்த ஊடகம் கொடுத்த அங்கீகாரம், தமிழ் ஸ்டுடியோவுக்கு கிடைச்சதில்லை. நான் என்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவில்லை. தமிழ் ஸ்டுடியோ என்ற இயக்கத்தைத்தான் முன்னிலைப்படுத்துகிறேன். இதை ஒரு பதிவாதான் சொல்றேன். சினிமாவுக்காக பணியாற்ற வருகிறவர்கள் அங்கீகாரம் இல்லாமல்தான் பணியாற்ற வேண்டும் என்பதை இந்தப் பணிகளுக்கு வருகிறவர்கள் தெரிந்துகொள்ளத்தான் இதைச் சொல்லுகிறேன். ஏன் இப்படி ஊடகங்கள் விலக்கி வைக்குதுன்னு கேட்டா, நாங்க பேசுகிற சினிமா, ஊடகங்கள் பேசுகிற சினிமாவிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது; அதை விமர்சிப்பது. மக்களுக்கான சினிமாவைப் பேசுகிறோம் அதான் பிரச்சினையின் மூலம்.
இப்படி ஊடகங்களால புறக்கணிக்கப்பட்ட, அங்கீகாரத்துக்காக ஏங்குகிற கலைஞர்களுக்கு நாங்க விருது கொடுக்கிறோம். கலைஞர்கள் தாய்மை உணர்வோடு இருப்பவர்கள். அவர்களுக்காக நாங்க இருக்கோம் சொல்றதுக்காகத்தான் லெனின் விருது, பாலுமகேந்திரா விருதுன்னு கொடுக்கிறோம். இதற்கும் ஊடக விருதுகளுக்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு”.
சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்க சினிமாதான் முக்கியக் காரணம் என்று சமீப காலத்தில் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. திரை செயற்பாட்டாளராக நீங்கள் இது குறித்து என்ன சொல்கிறீர்கள்?
“சினிமா ஒரு காரணம் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். புராணக் கதையாக சொல்லப்படுகிற ராமாயணத்தில் ராவணன் எந்த படத்தைப் பார்த்து சீதையைத் தூக்கிக் கொண்டு போனான். சினிமா இல்லாத காலக்கட்டத்துல எவ்வளவோ குற்றங்கள் நடந்திருக்கே? சினிமா பார்த்துட்டு தான் குற்றம் செய்யப்படுகிறது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஆனா, பெண்கள் மேல வன்முறை தூண்டிவிடுகிற நல்ல படங்களா பேசப்பட்ட பருத்திவீரன் என்ற படமாகட்டும், பாலாவோட எல்லா படங்களுமேகூட பெண்கள் காதலிக்கப்பட வேண்டியவங்க, அப்படி இல்லேன்னா கொல்லப்படவேண்டியவங்க என்பதைத்தான் சித்தரிக்கின்றன. ஒரு ஆண் எப்படி வேணும்னாலும் இருப்பான்; தண்ணி அடிச்சிட்டு வருவான், ரவுடியா இருப்பான், சட்டத்துக்கு, மனித நேயத்துக்கு புறம்பான செயல்களைச் செய்வான். ஆனால் அவனை பெண் காதலிக்க வேண்டும். இல்லையென்றால் அவள் கொல்லப்படுவாள். அலைக்கழிக்கப்படுவாள். இந்த அடிப்படையிலான ஆண் என்கிற அதிகார மையத்திலிருந்துதான் சமீப காலமாக நாம் சமூகத்தில் பார்க்கிற கொலைகள் நடக்குது. ‘நான் உன்னை விரும்பறேன், நீ என்னை விரும்பணும் இல்லேன்னா செத்துடு’ன்னுதான் திரும்ப திரும்ப சினிமா சொல்லுது. இதுக்கு சினிமா காரணமா இருக்கமுடியாது. சினிமா யார் கையில இருக்கோ அவங்கதான் காரணம். சினிமாவோட பிரச்சினை இல்லை. சினிமாவை கையாளக்கூடிய போலி கலைஞர்களால் வந்த பிரச்சினை, கமர்ஷியல் வியாபாரிகளால் வந்த பிரச்சினை”.
தற்போதைய தமிழ் சினிமாவின் திசை எப்படி போகிறது. தமிழ் சினிமாவில் நியூ வேவ் படங்கள் வர ஆரம்பித்துள்ளதாக பேசப்படுகிறது. அது உண்மைதானா?
“தமிழகத்தில் அரசியல் ரீதியான எழுச்சி நடக்கிறவரைக்கும், சினிமாவில் புதிய அலை உருவாக வாய்ப்பே இல்லை. ஒரு அலை இருக்கிறதென்றால் அதற்கு தொடர்ச்சி இருக்க வேண்டும். ‘நாளைய இயக்குநர்’னு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி வந்தப்போ அதைக் கடுமையா விமர்சனம் செய்து எழுதினேன். அது நாங்க தமிழ் ஸ்டுடியோவில் குறும்படங்கள் எடுத்து வருகிற இயக்குநர்களின் படங்களைப் பார்த்து நிறை-குறைகளைச் செய்துக்கிட்டிருந்ததோட கமர்ஷியல வடிவம். குறிப்பிட்ட தலைப்பைக்கொடுத்து அதப்பத்தி படம் எடுன்னு சொல்லும்போதே அந்த கலைஞனோட சுதந்திரம் போயிடுது. ஒரு கலைஞனை அப்படி நிர்பந்திக்கவே முடியாது. நாளைய இயக்குநர்னு தலைப்பு.. குறும்படம் இயக்குகிறவர் இயக்குநர் இல்லை என்று யார் சொல்வது? இவர்களுக்கு என்ன அதிகாரம்? அயோக்கியத்தனமான வார்த்தை. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படம் எடுத்த அனைவரையும் கேவலப்படுத்தக்கூடிய வார்த்தை. பெரிய படம் எடுத்தாதான் இயக்குநரா? கமர்ஷியல் படம் எடுக்கிறவர்கள்தான் இயக்குநர்களா? அதிலிருந்து வந்தவர்கள் எல்லாம் கமர்ஷியல் படம் எடுக்கத்தான் முயற்சித்தார்கள். அப்பவே அதைப் பத்தி எழுதினேன். திரும்பத்திரும்ப சொல்கிறேன்..
நான் பேசும்போது என்னிடம் சண்டை போட்டார்கள். முதல் படம் சின்ன பட்ஜெட்டில், சின்ன நடிகர்கள் அல்லது புதுமுக நடிகர்களை வைத்து படமெடுக்கிறார்கள். அது இல்லை நியூவேவ். அடுத்த படம் கார்த்திக்காக, சூர்யாவுக்காக கதை எழுதி காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவா நியூவேவ். நோக்கம் என்னன்னா, சின்ன பட்ஜெட்ல படம் எடுத்து, பெரிய ஆளை நோக்கி போய் நிக்கிறதுதான். நான் எப்ப ஆடி கார் வாங்கிறதுங்கிற நிலைமைதான். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில இருந்து வந்து நியூ வேவ் சினிமான்னு எடுத்தவங்க, எத்தனை பேர் இரண்டாவது படம் எடுத்தாங்க, ஏன் உடனே படம் எடுக்க முடியலை. ஏன்னா பெரிய நடிகருக்காக காத்திருக்காங்க. கார்த்திக் சுப்புராஜ் மூணு படம் எடுத்தாரு..நளன் குமாரசாமி ரெண்டாவது படம் வேறொரு மொழிப்படத்தை எடுக்கிறார். அதுக்குள்ள உங்க கற்பனை வளம் என்னாச்சு? நான் அப்ப என்ன விமர்சனம் வெச்சேனோ இப்போ அது உண்மையாகிடுச்சி இது உங்க கேள்விக்கான பதில்”.
அரசியல் புரட்சிதான் சினிமாவுக்குள் புரட்சி ஏற்படுத்தும்னு சொல்றீங்களா?
“அரசியல் சலனமே இல்லாம இருக்கு. அமைதியா இருக்காங்க. பக்கத்து வீட்ல குழந்தை கொல்லப்பட்டாலும் அதைப் பத்தின கோபம் நமக்கு வரலை. எல்லோரும் ஹீரோவாக இருக்கத் தேவையில்லை. ஆனா தார்மீக கோபம் சமூகத்துல இல்ல..செயல்பாடே இல்லாத அமைச்சர்களும் முதலமைச்சரும் திரும்பவும் ஆட்சிக்கு வர்றாங்க. அப்படீன்ன, முன்ன இருந்தவங்க செயல்பாடு இவங்களைவிட மோசமானதானா இருந்திருக்குன்னு அர்த்தம். எல்லாவற்றுக்குமே மக்கள் சாந்தமா இருக்காங்க”
இந்த அமைதிக்கு என்ன காரணம் என நீங்கள் கருதுகிறீர்கள்?
“இங்கே மக்களை ஆட்சியாளர்கள் ஆளுகைக்குள்ள வைத்திருக்கிறார்கள். ஊடகங்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை. மீடியா மீடியாவாக இல்லை. இன்றைக்கு மீடியாக்கள் எல்லாம் யார் கையில் இருக்கிறது என்று பார்த்தால், யாரெல்லாம் அதிக வழக்குகள் வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீடியா நடத்துகிறார்கள், யாரெல்லாம் மோசமாக இயற்கை கொள்கையடிக்கிறாரோ, யார் கல்வி கொள்ளையராக இருக்கிறாரோ, யார் அரசியல்வாதியின் பினாமியாக இருக்கிறாரோ அவர் மீடியா நடத்துகிறார்…மீடியா மக்கள் கையில் இருக்க வேண்டும், அல்லது மக்களுக்கான தலைவர்கள் கையில் இருக்க வேண்டும். மீடியா நடத்த வருகிறவர்கள் எல்லாம், எப்படி தன்னை முன்னிலைப்படுத்தி, முன்னுக்கு வந்து அரசியல் செய்யலாம், அதிகாரத்துக்கு வரலாம் என நினைக்கிறார்கள்.
மீடியா முடங்கியிருக்கிறது. அதுபோல கலைகளும்..இலக்கிய ஏற்கனவே மென்மையான இலக்கியமா மாறிவிட்டது. தொடக்கத்தில் இருந்த பார்ப்பன இலக்கியம் தொடங்கி, இப்போதிருக்கும் நவீன இலக்கியம், தலித் இயக்கியம் உள்பட மென்மையான போக்கே உள்ளது. புரட்சிக்கான கூறுகள் இல்லை; எழுதுகிறவர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் போக்குதான் இருக்கு. மக்களை ஒன்றுதிரட்டுகிற எல்லா கலை வடிவங்களும் முடங்கித்தான் போயிருக்கு.
மக்கள்கிட்டயும் அடிப்படை பிரச்சினையிருக்கு. நான் இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்யணும்னா, உதாரணத்து என்னை எடுத்துக்கொள்ளுங்கள். ‘கிழிக்க முடியாது, நீ நினைக்கிற மாற்றத்தையெல்லாம் கொண்டு வர முடியாது. அப்படியான புரட்சியெல்லாம் இங்க நடக்காது’ என யார் சொல்கிறார்கள்னா பொதுதளத்தில் இருந்து விலகி, அறிவுஜீவிகள் என சொல்லிக்கொள்பவர்கள் சொல்கிறார். ஆமாம் மாற்றம் வராதுதான். இங்கே வருகிற மாணவர்களுக்கு நான் அதைத்தான் சொல்கிறேன். இப்போ நாம் செய்கிற பணிகள் பத்து வருசத்துக்குப் பிறகு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும், நல்ல சினிமா வரும் என ஒருபோதும் நினைக்க வேண்டாம். அப்படியான மாற்றம் வராது என சொல்லுவேன்.
எளியமையா சொல்றேன்..நான் உங்களிடம் ஒரு கருத்தை சொல்கிறேன். அதை சரியென்று நினைத்து நீங்கள் மாறிவிடுகிறீர்கள். அடுத்து இன்னொருவர் ஒரு கருத்தை சொல்கிறார். அதைக் கேட்டும் நீங்கள் மாறிவிடுகிறீர்கள். இதுபோன்ற உடனடியான மாற்றத்துக்கு நாங்கள் எதிரானவர்கள். இந்த இயக்கத்தால் உடனடியா மாற்றம் கொண்டுவரமுடியாது. அது படிப்படியாகத்தான் நிகழும். உங்களுக்குத் தெரியாமல் உளவியல் செயல்பாட்டில் அது நடக்கும். அதை நோக்கித்தான் நாங்க போகிறோம். மறைமுகமாக இதுபோன்ற இயக்கங்கள் தேவையில்லை என்று சொல்லி பணியாற்ற வருகிறவர்களை உளவுப்பூர்வமாக ஒடுக்க நினைக்கிறார்கள் இந்த அறிவுஜீவிகள்.
DSC_0217
கேரளத்திலோ, மேற்குவங்கத்திலோ தொடர்ச்சியாக இருக்கக்கூடிய சிந்தனை மரபு இங்கே இல்லை. பெரியாருக்குப் பிறகு இங்கே ஒரு சிந்தனை மரபே எழவில்லை.. பின்நவீனத்துவம், நவீனத்துவம்ங்கிற பேர்ல அவரை கேள்விக்குட்படுத்துகிறார். யாரை வேண்டுமானால் கேள்விக்குட்படுத்தலாம். ஆனால் அது உங்க சுயமான சிந்திக்கக்கூடிய அறிவில்லாமல் செய்யக்கூடாது. எல்லாவற்றையும் துடைத்துப் போடுகிற ஸ்டேட்மெண்டாதான் அது இருக்கு. பெரியாரை கட்டுடைக்கிறேன் என்று அது இன்னொன்றை வைக்க வேண்டும். அது இல்லாமல் அவர் மோசமானவர்; அவர் ஏதிலி; அவர் தெலுங்கர்-தமிழரல்ல; பேசப் பேச அந்த சிந்தனைப் பள்ளி உடையது. பெரியாரின் சிந்தனையை உடைக்க 100 வருடத்துக்கு யாராலேயும் முடியாது. அவருடைய சிந்தனைதான் நம்மை குறைந்தபட்ச மனிதர்களாக்கி இருக்கிறது.
இன்னைக்கு தமிழ்நாட்டுல பெரியார் மாதிரி ஆயிரம் பேர் தேவைப்படுகிறார்கள். பெரியார் காலத்தில் இந்த அளவுக்கு சாதி பிரச்சினை இருந்ததா என்று தெரியவில்லை. நான் கல்லூரி முடிச்சிட்டு வெளிய வர்றவரைக்கும் என் சாதி மத்தவங்களுக்கோ, அவங்க சாதி எனக்கோ தெரியாது. ஆனா இப்போதைய சூழல் அப்படியில்லை. இத்தனைக்கு நாம் சாதியை எதிர்த்து பேசுகிறோம்; அவரவர் சாதியை தெரிந்துகொண்டே..எனக்கு ஆச்சரியமா இருக்கு. பெரியாரை முன்வைத்து பேசுகிறவர்களே சாதியவாதிகளாகவும் இருக்கிறார்கள். இப்படியே போனால் பேருக்குப் பின்னால் சாதியை ஒட்டிக்கொள்ளும் போக்குதான் மீண்டும் ஏற்படும். இந்த அடிப்படையில் பெரியாரின் தேவை இருந்துகொண்டே இருக்கும்.
அதேதான் சினிமாவுக்கும் சொல்றேன். எங்களுடைய நோக்கம் தெரியாம கட்டுடைக்கிறது. எங்களை ஃபேஸ்புக்கில் திட்டி எழுதினால் இரண்டாயிரம் லைக் விழலாம். ஆனா அந்த கருத்து நாளைக்கு நிலைக்காது. நான் அன்று நாளைய இயக்குநர் பற்றி சொன்ன கருத்து இப்போது உண்மையாகுது. நாங்க எதிர்காலத்துக்காக பேசுகிறோம். நீங்க நிகழ்காலத்துல இருந்துகிட்டு, எதிர்காலத்துல எதுவும் நடக்காதுன்னு பேசுகிறீர்கள். நாங்கள் சொன்னது பலவும் உண்மையாகியிருக்கிறது”..
சினிமா இயக்க செயல்பாட்டின் அடுத்த நிலைதான் புத்தக பதிப்பும் விற்பனையுமா..
“இல்ல.. சினிமா இயக்க செயல்பாட்டின் பகுதியாகத்தான் இதைச் செய்றோம். இயக்கம்னா பேசறது, எழுதறது மட்டுமல்ல…அதுக்கான வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். இங்கே சினிமா தொடர்பான கல்வி மிகக் குறைவு. அதுக்கென்று வகுப்புகளை ஆரம்பித்தோம். ‘படிமை’ என்று பெயர். எங்களுக்கென்று ஒரு ஊடகம் இல்லை. அதற்காகத்தான் இணையதளம், இதழ் ஆரம்பித்தோம்; நூல்கள் கொண்டுவந்தோம். எந்த ஊடகமும் எங்களுக்கு உதவாதபட்சத்தில் எங்களுக்கென்று ஒரு ஊடகத்தை உருவாக்கிக்கொண்டோம்.  தமிழில் சினிமா தொடர்பான புத்தகங்களே இல்லை. மோசமான புத்தகங்கள், நடிகையின் கதை, சில்மிஷங்கள் போன்றவை சினிமா தொடர்பானவையா இருந்தன. தொழிற்நுட்ப ரீதியா, எத்ஸ்தடிக்ஸ் பார்வையில் தமிழில் சினிமா புத்தகங்கள் உண்டா என்று கேட்டால் இல்லை. அதற்காகவே ‘பேசாமொழி’ பதிப்பகத்தை ஆரம்பித்தோம். நாங்கள் பேசுவதையெல்லாம் புத்தகமாக்கினோம். ஒரு புதிய அலையை உருவாக்கினோம். அத விற்பதற்கு, சினிமா தொடர்பான மற்ற பதிப்பகங்களின் புத்தகங்களை விற்கவும் அங்காடி அமைத்தோம். வெறுமனே புத்தக விற்பனைக் கூடமாக இல்லாமல் இங்கே அமர்ந்து வாசிக்கவும் படங்கள் பார்க்கவும் உரையாடலை நிகழ்த்தவும் கூட்டம் நடத்தவும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம்”.
இயக்கத்தை வழிநடத்த பொருளாதார ரீதியான தேவைக்கு என்ன செய்கிறீர்கள்?
“பெரும்பாலும் நன்கொடை வாங்கித்தான் செயல்படுகிறோம். நன்கொடை கொடுப்பதற்கு இங்கே பலர் தயங்குகிறார்கள். சினிமா இயக்கத்துக்கெல்லாம் எதற்கு நன்கொடை என்ற தவறான புரிதலே காரணம். சினிமா சினிமாவாக இல்லை என்ற காரணத்தால்தான் பெரியார், காமராஜர் போன்றோர் எதிர்த்தார்கள். மக்களின் மனநிலையும் அதுதான். ஆனால் இப்படியான சினிமாவை மாற்றுவதற்கான இயக்கம்தான் இது என்பதை அவர்கள் பார்ப்பதில்லை. பெரிய அமைப்புகளிடமோ தனிநபர்களிடமோ குறிப்பிட்ட தொகைக்குமேல் ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் நாங்கள் வாங்குவதில்லை. ஏதேனும் நிகழ்ச்சி நடத்தினால் அதற்கான ஸ்பான்சர்ஷிப்பை ஏற்றுக்கொள்ளச் செய்வோம். மற்றபடி பணமாக வாங்கினால் அவர்களுடைய சிந்தாந்ததை ஏற்றுக்கொள்ளும் சூழல் ஏற்படும். அதனால் அதை தவிர்க்கிறோம். பணப் பிரச்சினை இருப்பது நம்மை உயிர்ப்போடு வைக்கும். அது தீர்ந்துவிட்டால் நம்முடைய நோக்கம் சிதைந்துவிடும். நாம் வழிமாறிவிடுவோம்”.
உங்களோட சினிமா எப்படி இருக்கும்?
“என்னோட சினிமா அல்ல, இயக்கத்தோட சினிமா. சினிமாவின் வடிவத்துக்கு முக்கியத்துவம் தருவோம். இந்தியா மாதிரியான நாட்டில் மக்கள் பிரச்சினைகள் பேசப்பட வேண்டும், தமிழ்நாட்டில் மின்சாரம் மிகப்பெரிய பிரச்சினை. ஆனா அதப்பத்தி தமிழ் சினிமாவில் ஒரு பதிவு இருக்கா? ஒரு காட்சிகூட வந்தது கிடையாது. மக்கள் பிரச்சினையை பதிவு பண்ணாதான் சினிமாவான்னா… ஆமாம் பதிவு செய்துதான் ஆகணும். சாதி கொலைகள், ஆவணக் கொலைகள், பெண்ணை பெண்ணாக பார்க்காத போக்கு போன்றவற்றைப் பதிவு செய்து விவாதத்துக்கு உட்படுத்தும் படங்கள், சுற்றுச்சூழல்-அதன் அரசியல் போன்றவற்றை பதிவு செய்கிற சினிமாவாக எங்களுடைய சினிமா இருக்கும்.
சினிமா வழியாக மாற்றம் என்பதைத்தான் நாங்கள் சொல்கிறோம். சினிமா மூலமா எதுவுமே பண்ணமுடியாதுன்னு சொல்றீங்கன்னா, சினிமா மூலமாதானே எல்லாமே நடந்திருக்கு. சினிமாவில் இருந்து ஐந்து முதலமைச்சர்கள் வந்திருக்கிறார்கள். இப்பவும்கூட சினிமா மூலமாதான் அடுத்த முதல்வரை தேடிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் போராட்டத்தின் மூலம் முதல்வர் வரமுடியும் என்றால் சுப. உதயகுமாரன்தான் முதல்வராகியிருப்பார். ஆனால் அடுத்த முதல்வராக விஜய், அல்லது விஜயகாந்தை எதிர்பார்க்கிறோம். இப்படித்தான் இருக்கிறது. சினிமா ஆழமாக வேறூன்றி இருக்கும் இந்த சமூகத்தில் நாங்கள் சொல்கிற மாற்றமும் சினிமா மூலம் சாத்தியமாகும். அதுவொரு சக்கரம் போல சுழலும்; மாறும்.”
வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
“ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கபாலி குறித்த டீஸர் வந்த நேரத்தில் காக்கா முட்டை, விசாரணை படங்களை ரசிப்பவர்கள்தான் கபாலியையும் ரசிக்கிறார்கள் என்று முகநூலில் எழுதியிருந்தேன். அதற்கு ஒருவர் ‘24 மணிநேரமும் விரைப்பாகவே இருக்க முடியுமா?’ என்று கேட்டிருந்தார். அதுகுறித்து அங்கு நான் விவாதிக்கவில்லை. அதாவது  காக்க முட்டை, விசாரணை போன்ற படங்கள் பார்ப்பதை தியாக நிலையாக பலர் கருதுகிறார்கள். சமூகத்திலிருந்து விலகி ஒரு குடும்பத்துக்கு வாழ்க்கை கொடுக்கிறோம் எனவும் அவர்கள் நினைக்கிறார்கள். கமர்ஷியலான படங்கள் பார்ப்பதை ரிலாக்ஸ் செய்துகொள்வதாக நினைக்கிறார்கள். தினசரி பிழைப்புக்கு மாறாக ரிலாக்ஸுக்காக ஒருநாள் கொள்ளையடிக்க முடியுமா? ரஜினியும் சரி கமலும் சரி சமூகத்தை மோசமா சிதைக்கிற இந்த பிம்பங்களை கொண்டாடுவது சரியா? எங்க இயக்கத்தில் இருக்கிறவர்களுகூட ரஜினி பிரசன்ஸே தனின்னு பேசற அளவுக்கு அது ரத்ததுல ஊறிப்போய் இருக்கு. அது பலருக்கு கிளர்ச்சி ஊட்டுது. இதையெல்லாம் கடுமையாக எழுதியே ஆக வேண்டியிருக்கு. ஒருத்தன் எப்பவும் நேர்மையா இருக்கிறான். ரிலாக்ஸுக்காக 4 லட்ச ரூபா லஞ்சம் வாங்கறான்னா அது ஏத்துக்க முடியுமா? 24 மணி நேரமும் விரைப்பா இருக்க முடியுமாங்கிறதில்லை. உங்க வாழ்க்கையே அப்படித்தான். இதுதான் நிஜம். போலியான ஒரு வாழ்க்கையில் இருந்துக்கிட்டு, நான் வந்து விரைப்பாகவே இருக்க முடியுமான்னு கேட்கிறது படுமோசம். இவர்களின் நிலைமை உண்மையில் பரிதாபத்துக்குரியது”.
தமிழ் ஸ்டுடியோவின் இணையதளம் இங்கே..
முகநூலில் அருண் https://www.facebook.com/ArunThamizhstudio  thetimestamil.com

கருத்துகள் இல்லை: