செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

போலி A.T.M. கார்டுகள் மூலம் பல கோடி ரூபாய் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது

ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தவில்லை, வங்கியிலும் நேரடியாக வந்து பணம் எடுக்கவில்லை. இருப்பினும் தங்களது வங்கிக் கணக்கில் பணம் குறைகிறது என்று வாடிக்கையாளர்கள் பலர் விழுப்புரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் புகார் அளித்துள்ளனர். வங்கி நிர்வாகம் இது தொடர்பாக விழுப்பும் எஸ்.பி. நரேந்திர நாயரிடம் புகார் அளித்தது. இதேபோல் வேறு சில வங்கிகளும், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தும் எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது. இந்த நவீன கொள்ளை புகார்கள் குறித்து விசாரணை நடத்த டி.எஸ்.பி. பீமராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசாரின் விசாரணையில் 11 பேர் கொண்ட கும்பல் ஒன்று சிக்கியது. இந்த கும்பலுக்கு அப்துல் சகீல், இலங்கையைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோர் மூளையாக செயல்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, ஆட்கள் குறைவாக வந்து செல்லும் ஏ.டி.எம். மையங்களை முதலில் கண்காணித்து, அந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டு சொருகும் இடத்தில் ஒரு மெல்லிய பேப்பரை சொருகி, பின் ரகசிய எண்ணை அழுத்தும் இடத்திற்கு அருகில் கண்ணுக்கு தெரியாத மெல்லிய கேமரா ஒன்றையும் சொருகி, பின்னர் இரண்டு நாள் கழித்து வந்து இவை இரண்டையும் எடுத்து, அப்துல் சலீம் மற்றும் பிரசன்னாவுக்கு அனுப்புவார்கள்.
அவர்கள் மெல்லிய பேப்பரையும், கேமராவையும் ஆய்வு செய்து கார்டு நம்பர், ரகசிய எண்ணை திருப்பி அனுப்புவார்கள். அதனை வைத்து ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து பிரித்து கொள்கிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த கும்பல் செயல்பட்டு வந்ததும், இதில் பல கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளையடித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், இப்படி கொள்ளையடித்த பணத்தில் மலேசிய இரவுகள் என்ற படத்தை அப்துல் சலீம் எடுத்துள்ளாராம். அதுமட்டுமல்லாமல், இந்த நவீன கொள்ளைக்கு சில வங்கி ஊழியர்களே துணை இருந்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 சொகுசு கார்கள், ஏராளமான போலி ஏ.டி.எம். கார்டுகள், கம்ப்யூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக அப்துல் சலீம் கார் டிரைவர் சிக்கந்தர் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அப்துல் சலீம் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் படம் எடுத்து தயாரித்ததாகவும், அந்த படத்தில் தான் (சிக்கந்தர் பாஷா) நடித்திருப்பதாகவும் விவரத்தையும் கூறியுள்ளார்.
இந்த நவீன கொள்ளை சம்பவம் அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கனுமா என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.
எஸ்.பி.சேகர்
nakkeeran

கருத்துகள் இல்லை: