nisaptham.com: இந்த யோகா தினக் கொண்டாட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் most influential
சாமியார்கள் நிச்சயம் இருப்பார்கள் என்று நம்பலாம். அக்ஷய திருதியைப் போல
இதில் மிகப்பெரிய வணிக நோக்கம் ஒளிந்திருக்கிறது.
யோகா சொல்லித் தருகிறோம் என்று
இறங்கியிருந்தார்கள். ஈஷா யோக மையத்தினர்தான். உண்மையில் ஜக்கியின்
ஆட்கள்தான் யோகா சொல்லித் தருகிறார்கள் என்று தெரியாது. ஷூவைக்
கழற்றிவிட்டு அந்த இடத்துக்குச் சென்ற போதுதான் தெரிந்தது. ஒரு பெண் -
அவளுக்கு முப்பது வயது இருக்கலாம் - முழு சந்நியாசினி ஆகிவிட்டாளாம். ‘நான்
சிஸ்கோவில் வேலை செய்தேன்...லட்சக்கணக்கில் சம்பளம்...இப்போ வேலையை
விட்டுட்டு சத்குருவின் பாதங்களில் சரணடைந்துவிட்டேன்...ரொம்ப நிம்மதி’
என்றார். இது ஒரு மூளைச் சலவை. இந்த உலகத்தில் வேலை, குடும்பம் உள்ளிட்ட
லெளகீக வாழ்க்கை என்பதே சுமை என்பதாகவும் இந்தச் சுமையை இறக்கி வைக்க ஒரு
குருவினால் மட்டுமே முடியும் என்கிற வகையில் ஐடிக்காரர்களிடம்
காட்டுவதற்கான மாடல்கள் இந்த மாதிரியான சந்நியாசினிகள். ‘ச்சே ஐஐடியில்
படிச்சவன் இப்படி மாறியிருக்கான் பாரு..நிச்சயம் ஏதோ இருக்கு’ என்று
அடுத்தவர்களையும் யோசிக்கச் செய்கிறார்கள். பக்காவான strategy.
ஓட்டுவது எருமை. அதில் இப்படியொரு வெட்டிப் பெருமை.
முப்பது வயதிலும் நாற்பது வயதிலும் வாழ்க்கையில் அனுபவிக்கவும் தெரிந்து
கொள்ளவும் எவ்வளவோ இருக்கின்றன. இந்த வயதில் எவனோ சொன்னான் என்று விட்டில்
பூச்சியாக விழுந்துவிட்டு அடுத்தவனைப் பார்த்து ‘உங்கள் வாழ்க்கையைவிடவும்
என்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கிறது’ என்று சொல்வதில் என்ன அர்த்தம்
இருக்கிறது? ஒருவிதமான மனப்பிரம்மை அது. சாதாரண மனித வாழ்க்கையின்
எல்லாவிதமான பரிமாணங்களையும் பார்த்து அனுபவித்தவன்தான் பூரண மனிதனாக
முடியுமே தவிர பாதியிலேயே எல்லாவற்றையும் விட்டு ஒரு அரைவேக்காட்டு
சாமியாரிடம் சராணகதியடைந்தவர் வந்து பேசினால் எரிச்சல் வரத்தான் செய்யும்.
இதே ஜக்கியின் மகள் முழுநேர யோகா பயிற்சியாளர் ஆகிவிட்டாரா என்ன?
அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ இருக்கிறாராம். உபதேசமெல்லாம்
ஊருக்குத்தான்.
எனக்கு இந்த மாதிரி சமயங்களில் வாய் சும்மா இருக்காது. ‘உங்களை விட நான்
சந்தோஷமாக இருக்கிறேன். இல்லையென்று நிரூபிக்க முடியுமா?’ என்று கேட்டேன்.
ஹோட்டலில் வேலை செய்பவரோ, சாலையோரம் காய்கறி விற்பவரோ ‘உன்னைவிட சந்தோஷமாக
இருக்கிறேன்’ என்று சொன்னால் ஒத்துக் கொள்வேன். ஆனால் இந்தப் பெண்மணி
சொல்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எதைப்பற்றியும் யோசிக்காமல் ‘சத்குருவின் கூட்டம் பெங்களூரில் நடக்கிறது. அதற்கு நீங்கள் வர வேண்டும்’ என்றார்.
இவ்வளவுதான். இதுதான் இந்த யோகா பயிற்சியின் நோக்கம். எதையாவது சொல்லி
சத்குருவின் கூட்டத்திற்கு ஆளை இழுத்து வர வேண்டும். இப்படித்தான்
பெங்களூரில் நிறைய கார்போரேட் நிறுவனங்களில் நுழைந்திருக்கிறார்கள். யோகா
சொல்லித் தருகிறோம் என்று நுழைந்து பிறகு ஜூன் 20 ஆம் தேதி ஜக்கி நடத்தும்
யோகா பயிற்சிக்கு வந்துவிடுங்கள் என்று கொக்கி போடுகிறார்கள். பெங்களூரில்
திரும்பிய பக்கமெல்லாம் பேனர்கள். முதலமைச்சரே சத்குருவுடன் சேர்ந்து யோகா
செய்கிறாராம். செய்தித்தாள்களில் பிட் நோட்டீஸ் வைத்துக் கொடுக்கிறார்கள்.
பேருந்து நிறுத்தங்களில் விநியோகிக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆட்களைத்
திரட்டிவிடுவார்கள். அதுவும் கூட்டத்தை எங்கே நடத்துகிறார்கள்? மான்யாட்டா
டெக் பார்க். கார்போரேட் நிறுவனங்கள் நிரம்பிக் கிடக்கும் வளாகம் அது. இந்த
களவாணி சாமியார்கள் பேசும் போது ‘கார்போரேட் என்றாலே மன அழுத்தம்’ என்று
நிறுவிவிடுகிறார்கள். ‘ஆமாம்டா நமக்கு பயங்கர டென்ஷன்’ என்று நாமும் நம்பத்
தொடங்குகிறோம். ‘அப்போ வாங்க நாங்க ரிலாக்ஸ் பண்ணிவிடுறோம்’ என்று
அமுக்குகிறார்கள்.
யோகா வாழ்க்கைக்கான கருவிதான். ஆனால் இந்தக் கருவியைப் பயன்படுத்திதான்
அத்தனை சாமியார்களும் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். பாபா
ராம்தேவ் வெறும் யோகா சாமியாராக இருந்தால் பிரச்சினையில்லை. அவருடைய
பதஞ்சலி கடைகளில் விசாரித்துப் பார்த்தால் தெரியும். கிட்டத்தட்ட ஐநூறு
விதமான பொருட்களை வைத்திருக்கிறார்கள். மருத்துவப் பொருட்களை மட்டும்தான்
விற்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. துணி துவைக்கும்
டிடர்ஜெண்ட் வரைக்கும் அத்தனையும் கிடைக்கிறது. அரை லிட்டர் எண்பது
ரூபாய்தான். வெரி வெரி சீப். யோகா என்ற பெயரில் ஆட்களை உள்ளே இழுத்து ஒரு
மிகப்பெரிய வணிகத்தை நடத்துகிறார்கள். புத்தகம், ருத்ராட்சைகள் என்று
எல்லாவற்றையும் வைத்து வியாபாரம் நடத்துகிறார்கள். இந்த
வியாபாரிகளுக்குத்தான் யோகா தினம் பயன்படப் போகிறது.
மாதா அமிர்தானந்தமாயியை தான வள்ளல் என்கிறார்கள். அவரது அமிர்தா பொறியியல்
கல்லூரியில் எவ்வளவு ஃபீஸ் வாங்குகிறார்கள் என்று விசாரித்துப்
பார்க்கலாமே. ஜக்கி இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை
நட்டிருப்பதாகச் சொல்கிறார். ஆலந்துறையில் அவரது ஈஷா மையம் வனப்பகுதிக்குள்
நடத்தும் அழிச்சாட்டியங்களை அந்த ஊர்க்காரர்களிடம் கேட்டால் சொல்வார்கள்-
மிகப்பெரிய கட்டடங்களை எழுப்புவதும், வனவிலங்குகளின் பாதைகளை மறைப்பதும்,
வனப்பகுதிக்குள் கூட்டம் சேர்ப்பதும் என்று அடித்து நொறுக்குகிறார்கள். ஒரு
பக்கம் கொடுப்பது மாதிரி கொடுத்துவிட்டு இன்னொரு சுருட்டியெடுக்கிறார்கள்
இந்த சாமியார்கள்.
யோகாவை பழிக்கவில்லை. அதைக் குறை சொல்லவுமில்லை. ஆனால் எல்லாவற்றையும்
வணிகமயமாக்கிக் கொண்டிருக்கும் யுகத்தில் யோகாவின் பெயரால் களவாணிகளும்
கேடிகளும் கார்போரேட் சாமியார்களும் கோடிக்கணக்கில் புரண்டு
கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் கணக்கெடுத்தால் யோகா தெரிந்த
குருக்கள் பல்லாயிரக்கணக்கில் இருப்பார்கள். ஆனால் கார்போரேட் பெரு
மருத்துவமனைகளைக் கொண்டு வந்து பிறகு குடும்ப மருத்துவர் என்கிற ஒரு
அம்சத்தையே ஒழித்துக் கட்டினார்கள் அல்லவா? அப்படித்தான் யோகாவிலும்- யோகா
பழக வேண்டுமானால் ஈஷாவிலும், ராம்தேவிடமும், வாழும்கலையிலும்தான் பழக
வேண்டும் என்று அவர்கள் மீது பெரும் வெளிச்ச வெள்ளத்தைப்
பாய்ச்சுகிறார்கள். அவர்களை மட்டும்தான் பிரதானப்படுத்துகிறார்கள். குடும்ப
டாக்டர்கள் ஒழிந்தது போல இந்த சிறு சிறு யோகா குருக்களும் ஒழியப்
போகிறார்கள். எல்லாவற்றிலும் கார்போரேட் மயமாக்கல்தான்.
இந்த யோகா தினக் கொண்டாட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் most influential
சாமியார்கள் நிச்சயம் இருப்பார்கள் என்று நம்பலாம். அக்ஷய திருதியைப் போல
இதில் மிகப்பெரிய வணிக நோக்கம் ஒளிந்திருக்கிறது. இவ்வளவு விளம்பரங்களும்
பிரம்மாண்டப்படுத்துதலும் யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ- தங்களின் வணிக
சாம்ராஜ்யத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்திக் கொள்ள சாமியார்களுக்கு
உதவும். இப்படியான ஒரு சூழலில் அரசாங்கம் கார்போரேட் சாமியார்களை
முன்னிலைப்படுத்திக் காட்ட வேண்டியதில்லை. ஆனால் அப்படியெல்லாம்
விட்டுவிடுவார்களா? வேலிக்கு ஓணான் தேவை. ஓணானுக்கு வேலி தேவை. இந்த
லட்சணத்தில் நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக