திங்கள், 8 ஆகஸ்ட், 2016

அன்பார்ந்த களவாணிகள் -1- இலவச வைத்திய பரிசோதனை செய்யும் காப்பரெட் களவாணிகள்

nisaptham.comவெள்ளிக்கிழமையானால் அலுவலகத்துக்கு ஒரு கூட்டம் வருகிறது. ஊழியர்கள் நலனுக்காக சில காரியங்களைச் செய்வார்கள் அல்லவா? அப்படியான செயல்பாடு அது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை சோதனை செய்வதற்காக ஒரு குழுவினர் வந்திருந்தார்கள். தனியார் மருத்துவமனையின் ஆட்கள் அவர்கள்.  Random Blood Sugar பார்த்தார்கள். எங்கள் ஊரில் பரிசோதித்தால் ஐம்பது ரூபாய். பெங்களூரில் நூற்றியிருபது ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால் இந்த முகாமில் இலவசமாகச் செய்தார்கள். ‘இவ்வளவு பேருக்கு இலவசமாக பார்க்கிறார்கள். நல்ல மருத்துவமனை’ என்று நினைத்து வரிசையில் நின்றிருந்தேன். வரிசையில் நிற்கும் போதே ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்து நிரப்பச் சொல்லியிருந்தார்கள். வழக்கமான விவரங்கள்தான். தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி, வீட்டில் யாருக்கேனும் சர்க்கரை இருக்கிறதா என்கிற கேள்விகள். அம்மாவுக்கு இருக்கிறது என்று நிரப்பிக் கொடுத்திருந்தேன். அலுவலக பணியாளர்களுக்கு பரிசோதனை முடிந்த பிறகு மற்றவர்களுக்கும் செய்தார்கள்- மற்றவர்கள் என்றால் அலுவலகத்தை துடைத்துப் பெருக்கும் கடைநிலை ஊழியர்கள். ஒரு ஆயாவுக்கு சர்க்கரையின் அளவு முந்நூற்று சொச்சம் இருந்தது. அதைக் கேட்டு மயங்கி வீழ்ந்துவிட்டார். சர்க்கரை என்றால் உயிர்க்கொல்லி என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது.
அடுத்த நாள் காலையில் அந்த ஆயாவிடம் பேசினேன். நேற்றிலிருந்து சாப்பாடே சாப்பிடவில்லை என்றார். அவ்வளவு பயம். நூல்கோல் வைத்தியத்தைச் சொல்லிவிட்டு ‘எதுக்கும் நீங்க டாக்டரைப் பாருங்க’ என்றேன். நேற்று மாலையில் விசாரித்த வரைக்கும் அவர் மருத்துவரை பார்த்திருக்கவில்லை. பரிசோதனை செய்ய வந்த மருத்துவமனையிலிருந்தே இரண்டு மூன்று முறை அழைத்திருக்கிறார்கள். ‘அந்த ஆஸ்பத்திரிக்காரங்களே வரச் சொல்லியிருக்காங்க..டெஸ்ட் எல்லாம் செய்யணும்...தொள்ளாயிரம் ரூபாய் எடுத்துட்டு வரச் சொல்லுறாங்க...காசு ரெடி பண்ணிட்டு போகணும்’ என்றார். இப்பொழுதெல்லாம் மதிய உணவுக்குச் சென்றால் ஒரு பஃபே சாப்பாடு நானூறு ரூபாய்க்கு குறைவில்லாமல் ஆகிறது. பார்-பீ-க்யூவுக்குச் சென்றால் எழுநூறு ரூபாய்க்கு மேலாக ஆகிறதாம். அதே அலுவலகத்தில் வேலை செய்யும் ஆயாவுக்கு முந்நூறுக்கு மேல் சர்க்கரையிருந்தாலும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு காசு ஏற்பாடு செய்ய ஒன்றிரண்டு வாரங்கள் ஆகிறது. 
அந்த ஆயா இருக்கட்டும். மருத்துவமனைக்காரர்களை கவனித்தீர்களா? இலவச பரிசோதனை செய்வதாகவும் ஆயிற்று; நோயாளியையும் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து என்னையும் ஃபோனில் அழைத்தார்கள். ‘அம்மாவுக்கு சர்க்கரை இருக்குல்ல...கூட்டிட்டு வர்றீங்களா?’ என்றார் ஒரு பெண்மணி. அம்மா ஊரில் இருக்கிறார் என்று சொல்லியிருக்கலாம். அதற்கு மேல் தொந்தரவு இருந்திருக்காது. தெரியாத்தனமாக சரி என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்குத் தாளித்து தள்ளிவிட்டார்கள். ‘எப்போ வர்றீங்க?’ என்று கேட்கமாட்டார்கள். ‘உங்களுக்காக எப்போ அப்பாய்ண்ட்மெண்ட் புக் பண்ணட்டும்?’ என்பார்கள். ஏதாவது ஒரு நாளில் நாம் சென்றே தீர வேண்டும் என்பது மாதிரியான அழுத்தம் இது. அலுவலக நண்பர்கள் பலருக்கும் இதே தொந்தரவு. இவர்கள் இப்படி ஆள் பிடிப்பதற்கு இலவச மருத்துவ முகாம் என்று பெயர். முந்தாநாள் கூட அதே பெண் அழைத்திருந்தார். ‘எனக்கு ஓரளவுக்கு விவரம் இருக்குங்க...தயவு செஞ்சு நான் முடிவெடுக்க அனுமதிங்க...எந்த மருத்துவரிடம் அம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என்று கத்திவிட்டேன். வழக்கமாக அப்படி யாரிடமும் ஃபோனில் கத்துவதில்லை. ஆனால் வெண்ணையை வெட்டுவது போல வழு வழுவென பேசி ஆள் பிடித்தால் கோபம் வந்துவிடுகிறது. நம்மை இளிச்சவாயன் என்று நினைத்தால் மட்டுமே அப்படி வழுவழுப்பாக பேச முடியும். அதற்கு மேல் தொந்தரவு இல்லை.

கருத்துகள் இல்லை: