வெள்ளி, 25 மார்ச், 2016

ஸ்டாலின் தனியாகவே தேர்தலை சந்திக்க ஆசைப்பட்டாரா? (சீமான்,அன்புமணி போலவா?)

 மு.க.அழகிரி நேற்று காலை, 11:00 மணி அளவில், தந்தையை, கோபாலபுரத்தில் சந்தித்தார். 'உடல் நலம் விசாரிக்க வந்தேன்' என, அழகிரி குறிப்பிட்ட அந்த சந்திப்பின் போது, உருக்கமான காட்சிகள் அரங்கேறின. அழகிரி பெயருக்கு ஏற்ப கொஞ்சம் சுயமரியாதைகாரர் .அதன் காரணமாகவே தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுகிறது. எனினும்  அதுதான் அழகிரியிடம் கலைஞர் அடிக்கடி வியந்து போகும் காட்சியுமாகும். அந்த காட்சிகளை பற்றி பேசும் தி.மு.க.,வினர், 'அனேகமாக அழகிரி வந்துடுவார்' என்றே நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அழகிரிக்கு மீண்டும் கட்சி பதவியும், அதிகாரமும் தருவதாகவும், ஆனால் அது தேர்தலுக்கு பின் தான் நடக்கும் என்றும், கருணாநிதி, அழகிரியிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அதனால், தேர்தல் முடியும் வரை அமைதியாக இருக்கும் படியும், தன்னால் ஆனவரை கட்சியின் வெற்றிக்கு பின்னணியில் இருந்து பாடுபட வேண்டும் என்றும் கருணாநிதி உத்தரவிட்டு உள்ளார்.  


பெட்டிக்குள் பூட்டி வைக்கப்பட்டு இருந்த இந்த படம், திடீரென ரிலீஸானதற்கு காரணம், காதர் மொய்தீன் சம்பவமும், கே.ந.கூ., என, தற்போது வழக்கிற்கு வந்துள்ள கேப்டன் நல கூட்டணி உருவானதும், கருணாநிதிக்கு ஏற்படுத்திய எரிச்சல் தான் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., சேர்வது கிட்டத்தட்ட உறுதியாக இருந்த நிலையில், கே.ந.கூ., உருவானதற்கு காரணமே ஸ்டாலின் தான் என கருணாநிதி நம்புவதாக, கூறப்படுகிறது. கட்சி வட்டாரத்தினரின் தகவல் படி, 'ஸ்டாலின் தரப்பினர் கூட்டணி பேச்சை சரியாக கையாளவில்லை. பல விஷயங்களில், ஸ்டாலின் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிறார்!'

அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து அபாயின்ட்மென்ட் கிடைக்காததால் வெளியேறிய சரத்குமார், தி.மு.க., பக்கம் தான் போவார்; அதனால் தி.மு.க.,விற்கு பலம் தான் என, பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரும் ஆச்சரியப்படும் படி அவர் மீண்டும் அ.தி.மு.க., கூட்டணியிலேயே ஐக்கியம் ஆகிவிட்டார். 'அந்த சோகத்தை ஏன் சார் கேட்குறீங்க...' என்ற ரீதியில் ஒரு கதையை, ச.ம.க.,வினர் சொல்கின்றனர், 'ஸ்டாலினை பார்க்கணும்னு சரத்குமார், அபாயின்ட்மென்ட் கேட்டார். என்ன பதில் கிடைச்சுது தெரியுமா? 'தயவு செய்து வந்துடாதீங்க. உங்களை பார்த்தாலே ஸ்டாலினுக்கு பிடிக்கலை!'

இரண்டாவது முறையும் அப்பாயின்ட்மென்ட் மேட்டரில் அடிவாங்கிய சரத்குமார், இப்போது அபாயின்ட்மென்ட் என்றாலே அலர்ஜியாகி அரிப்பெடுத்து திரிந்து கொண்டு இருக்கிறார்.
இதன் உச்சகட்டமாக காதர் மொய்தீன் சம்பவம் துாண்டியது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி அமைப்பது குறித்து, ஸ்டாலினும், கருணாநிதியும் எதிரெதிர் கருத்துகளை கொண்டுள்ளனர். ஸ்டாலினின் எண்ணப்படி, தி.மு.க., முடிந்தால் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும்; இல்லையெனில், 200 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், தோற்றாலும் பரவாயில்லை; தேவையில்லாத பரிவாரங்கள் விலகும் என்பது அவரது கணக்கு.

கருணாநிதியோ மெகா கூட்டணி அமைப்பதில் பெயர் பெற்றவர். தொகுதியாக இல்லாவிட்டாலும், இதயத்திலாவது இடம் கொடுத்து மற்ற கட்சிகளை தன்வசம் தக்க வைத்துக் கொள்வார். இந்த தேர்தலில், தி.மு.க., ஜெயிக்க வலுவான கூட்டணி வேண்டும் என நம்புகிறார். அதனால் தான், அந்த முயற்சிகளை இன்னும் கைவிடவில்லையாம்!

மாறன் சகோதரர்களுடன் மீண்டும் இணையும் போது, 'இதயம் இனித்தது, கண்கள் பனித்தன' என்றார் கருணாநிதி. 'இதயம் இனித்தது, கண்கள் பனித்தன - 2'வின் முழு தாக்கம் என்ன? இந்த இருவரின் வியூகங்களில் யாருடைய வியூகம் வெல்லப்போகிறது?- நமது சிறப்பு நிருபர் --  தினமலர்.com

கருத்துகள் இல்லை: