திங்கள், 21 மார்ச், 2016

சசி தரூர் : கண்ணய்யா குமார் தனது அரசியல் நம்பிக்கைகளுக்காக போராடுபவர்..பகத் சிங் போன்றவர்

சசி தரூர். | படம்: ரோஹித் ஜெயின் பராஸ்.ஜே.என்.யூ. மாணவர் தலைவர் கண்ணய்யா குமாரை, பகத் சிங்குடன் ஒப்பிட்டு பேசினார் சசி தரூர். இதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ஞாயிறு இரவு ஜே.என்.யூ. மாணவர்களிடையே உரையாற்றிய சசி தரூர், தற்காலத்திய பகத் சிங்தான் கண்ணய்யா குமார் என்று பேசினார்.  “பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் தேசத் துரோக வழக்கினால் அதிகம் பாதிக்கப்பட்டது, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பால கங்காதர திலகர், அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் பகத் சிங்” என்றார் அப்போது ஒரு மாணவி கண்ணய்யா குமாரின் பெயரை எடுத்துக் கொடுக்க, சசி தரூர், “இவரது காலத்தில் கண்ணய்யா குமார்தான் பகத்சிங்” என்றார்.


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, “இது சுதந்திர போராட்ட வீரரான பகத் சிங்குக்கு செய்யும் இழிவாகும். இதோடு மட்டுமல்ல நாட்டின் மீது பற்றுள்ள அனைவரின் மீதான காயப்படுத்துதலாகும்” என்று கூறியுள்ளது.

பாஜக-வின் ஷாநவாஸ் ஹுசைன் கூறும்போது, ‘பாரத மாதா கி ஜே என்று கூறி நாட்டின் சுதந்திரத்துகாக சிறை சென்றவர் பகத் சிங். இவரை கண்ணய்யா குமாருடன் ஒப்பிடுவது பகத் சிங்கை காயப்படுத்துவதாகும், மேலும் நாட்டுப்பற்றுள்ள அனைவரையும் புண்படுத்துவதாகும். கண்ணய்யா குமார் பகத் சிங் என்றால் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் யார் என்பதை சசி தரூர் கூற வேண்டும்” என்றார்.

தரூர் விளக்கம்:

‘ஒரேயொரு விஷயத்தைப் பிடித்துக் கொண்டு விட்டீர்கள். பார்வையாளர்களின் கருத்து ஒன்றிற்கான எனது பதிலே இந்த ஒப்பீடு. காலனியாதிக்கத்தையும், அயல்நாட்டு அடக்குமுறையும் எதிர்த்துப் போராடியவர் பகத் சிங். கண்ணய்யா குமார் ஒரு மாறுபட்ட ஜனநாயகத்தின் கீழ் தனது அரசியல் நம்பிக்கைகளுக்காக போராடுபவர்.

எனவே சூழ்நிலைகள் வேறு, ஆனால் ஒப்பீடு என்பது 20-வயதுகளில் இளம், மார்க்சிய, லட்சியவாதி தங்கள் தாய்நாட்டுக்காக கடமையுடன் செயல்பட்டார்கள் என்ற அளவில் கூறப்பட்டது, அவ்வளவே’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: