சனி, 26 மார்ச், 2016

கோகுல இந்திரா... தனி அறையில் நடந்த 'பகீர்' பஞ்சாயத்து! சகாயத்தைப் பழிவாங்கிய ஓ.பி.எஸ்...அடிவாங்கிய கோ-ஆப்டெக்ஸ் மேலாளர்...

விகடன்.com : ஆப்டெக்ஸ் என்றால் வேட்டி, சேலை நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, சகாயம் ஐ.ஏ.எஸ்ஸை நினைக்காமல் கடந்துவிட முடியாது. கடனில் தத்தளித்த கைத்தறித் துறையை சர்வதேச அளவில் புகழ்பெற வைத்தவர். வேட்டி தினம், தாவணி தினம், தேசிய விருதுகள் என கோ-ஆப்டெக்ஸ் துறையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டவர். ஆனால் அவரையே புரட்டிப் போடும் அளவுக்கு ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆடிய ஆட்டம் வெளி உலகிற்கு தெரியாத ரகசியம். <br /> <br /> கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து,  அறிவியல் துணை நகரத்தின் இயக்குநர் எனும் 'டம்மி' பதவிக்கு சகாயம் மாற்றப்படுவதற்குக் காரணமே, அமைச்சர் கோகுல இந்திராவுடன் ஏற்பட்ட மோதல்தான் காரணம் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், 'கிரானைட் விவகாரத்தில் சகாயத்தின் அதிரடிகளால் அதிர்ந்து போன ஓ.பி.எஸ்தான்,  சகாயத்தின் மாற்றலுக்கு தொடக்கப்புள்ளி வைத்தவர்' என்கிறார் கோ-ஆப்டெக்ஸ் அதிகாரி ஒருவர். இதுபற்றி அவர் நம்மிடம் விவரித்த தகவல்கள் அதிர்ச்சியின் உச்சம்.;அடிவாங்கிய கோ-ஆப்டெக்ஸ் மேலாளர்...


2014-ம் ஆண்டு, ஜூலை மாதம். விழுப்புரம், கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கடைகளை  ஏலம் விடுவதற்கான வேலைகள் நடந்தன. ஐம்பது ஆண்டுகளாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும் அங்கு கடைவைத்து வியாபாரம் செய்து வந்தது. புதிய கடை ஏலத்தில் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் சோமசுந்தரம் பங்கேற்றார். 'அரசு நிறுவனம் பங்கேற்றால், வருமானம் பறிபோய்விடும்' என கோபமான கள்ளக்குறிச்சி அ.தி.மு.க சேர்மன் பாலகிருஷ்ணன். ' எங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே கடைகளை ஏலத்தில் விடுவோம். நீங்கள் பங்கேற்கக் கூடாது' எனத் தடுத்தார். இதையும் மீறி ஏலம் நடந்த இடத்திற்கு வந்தார் சோமசுந்தரம். இதனால், கடும் கோபமடைந்த சேர்மன், கையில் கிடைத்த ஆயுதத்தால் சோம சுந்தரத்தைக் கடுமையாக  தாக்க ஆரம்பித்தார்.
'தெரியாம ஏலத்தில் கலந்துகிட்டேன். விட்டுடுங்க அய்யா' என அலறிய அந்த அதிகாரியை தெருவில் ஓடவிட்டு அடித்தார் சேர்மன். ' எங்களுக்கு எதிராக ஏலத்தில் எவன் கலந்துகிட்டாலும் இவனுக்கு நடந்த கதிதான் உங்களுக்கும்' என கூடியிருந்த கூட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்தார் சேர்மன். மொத்தக் கூட்டமும் அடங்கிப் போனது. உடல் முழுவதும் காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சோமசுந்தரம். நடந்த சம்பவத்தை சக அதிகாரிகள்,  துறையின் தலைவர் என்ற முறையில் சகாயத்திற்கு தெரிவித்தனர். இதனால், ஆவேசமான சகாயம், டி.ஜி.பி, மாவட்ட கலெக்டர், எஸ்.பி என அனைவருக்கும் போன் போட்டு, "என் ஊழியர் ஒருவர் மீது கடுமையான தாக்குதல் நடத்திய சேர்மன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுங்கள்" என அழுத்தம் கொடுத்தார். சகாயத்தின்  விடாப்பிடியாமல், கடுப்பான அமைச்சர் கோகுல இந்திரா, பிரச்னையை நிதியமைச்சர் ஓ.பி.எஸ் கவனத்திற்குக் கொண்டு போனார்.

ஓ.பி.எஸ் நடத்திய பஞ்சாயத்து...!

'சோமசுந்தரம் அடிவாங்கிய விவகாரத்தைவிட, சகாயத்தை ஆஃப் செய்ய வேண்டும்' என ஓ.பி.எஸ் களத்தில் இறங்கினார். தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறையில் பஞ்சாயத்து நடந்தது. இதில், அமைச்சர்கள் ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதன், மோகன், கோகுல இந்திரா, கோ-ஆப்டெக்ஸ் செயலர் ஹர்மந்தர் சிங் ஆகியோரோடு சகாயமும் அங்கே அமர்ந்திருந்தார். சேர்மனிடம் அடிவாங்கிய சோமசுந்தரமும் அங்கே நின்றிருந்தார். பஞ்சாயத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய கோகுல இந்திரா, " நடப்பது எங்க ஆட்சி. எங்க அம்மாவோட போலீஸ்தான் இருக்கிறது. நாங்க நினைச்சால் உங்க மேலயே வழக்கு போட முடியும். புகாரை வாபஸ் வாங்குங்கள்" என சோமசுந்தரத்தை நோக்கி விரல்களை நீட்டினார்.
"தூக்கில் வேண்டுமானாலும் தொங்குவேன். புகாரை வாபஸ் வாங்க மாட்டேன்" என பின்வாங்க மறுத்தார் சோமசுந்தரம். இதையடுத்து, அவரை தனியறைக்கு அழைத்துச் சென்றார் கோகுல இந்திரா. சக அமைச்சர்களும் உள்ளே சென்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தி,  அவரை வழிக்குக் கொண்டு வந்தனர். புகாரை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார் சோமசுந்தரம். இதனால் கொந்தளித்துப் போனார் சகாயம். அங்கே எதுவும் பேச முடியாமல் மவுனமாக வெளியில் வந்தார். அதே நேரத்தில் சோமசுந்தரமோ, "என் காயத்திற்கு மருந்து போட 25 ஆயிரம் பணம் கொடுத்தார் கோகுல இந்திரா. இதை கோ-ஆப்டெக்ஸ் நல நிதிக்கு வைத்துக் கொள்ளுங்கள்" எனச் சொல்லிவிட்டதாக தெரிவிக்க, அரசு இயந்திரத்தின் போக்கை நினைத்து கவலையில் ஆழ்ந்தார் சகாயம்.

பத்து பக்க கடிதம்..பதறிய கோகுல இந்திரா...


மறுநாளே, அப்போதைய தலைமைச் செயலருக்கு பத்து பக்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார் சகாயம்.  "பாதிக்கப்பட்ட அரசு ஊழியரை அமைச்சர் மிரட்டிப் பணிய வைக்கிறார். தன் கடமையைச் செய்த குற்றத்திற்காக அதிகாரி ஒருவர் அடிவாங்கியிருக்கிறார். சட்டத்திற்குப் புறம்பாக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இதற்கு மூத்த அமைச்சர் ஓ.பி.எஸ் தலைமை தாங்குகிறார். தாக்குதலுக்கு ஆளான அரசு ஊழியரிடம் அமைச்சர் மிரட்டல் தொனியில் பேசுகிறார். துறையின் செயலரும் அமைச்சரின் நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்கிறார். இதை உடனடியாக மேலிடத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அமைச்சர் மீது நடவடிக்கை எடுங்கள்" என கடிதம் எழுதினார். இந்தக் கடிதம் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு, சகாயத்தை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக ட்ரான்ஸ்பர் செய்தது.


அதே சமயம் சகாயத்தின் கடிதத்தைப் பார்த்து கொந்தளித்த கோகுல இந்திரா, கோ ஆப்டெக்ஸ் துறைச் செயலர் ஹர்மந்தர் சிங்கை வைத்துக் கொண்டு, 2014-15ம் ஆண்டுக்கான சகாயத்தின் செயல்பாடுகளுக்கு வெறும் நான்கு மதிப்பெண்ணைப் போட்டிக்கிறார். இந்த மதிப்பெண்ணால் என்ன பாதகம் ஏற்படும் என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், " ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பணிக்காலத்தில் ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும் அவர் எடுத்த மதிப்பெண்கள்தான் அவர்களது தலையெழுத்தை தீர்மானிக்கும். பதவி உயர்வுக்கும் இந்த மதிப்பெண்கள்தான் பிரதானம். தலைமைப் பண்பு, பணித்திறன், தகவல் தொடர்பு, கீழ்நிலை அதிகாரிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்ட காரணங்களை வைத்து மார்க் போடுவார்கள். ஓர் அதிகாரி 9 மார்க் எடுத்தால், அவுட் ஸ்டாண்டிங் என்பார்கள். எட்டு மதிப்பெண் என்றால் வெரி குட், 5 முதல் 6 மார்க் என்றால் குட் என்றும், நான்கு மார்க் என்றால் சராசரி என்றும் பொருள்படும். அதாவது, 5 மதிப்பெண்ணுக்குகீழ் இருந்தால் அந்த அதிகாரி யூஸ்லெஸ் எனப் பொருள்படும். 3 மற்றும் 4 மார்க் எடுப்பவர்கள் படு மோசம் எனக் குறிப்பிடுவர். ஐந்துக்கும் குறைவாக மார்க் எடுத்தால் அவரால் நிர்வாகத்தில் திறம்பட செயலாற்ற முடியாதவராகிறார் என பதவி உயர்வின்போது கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். தற்போது அரசு கூடுதல் செயலர் அந்தஸ்தில் இருக்கும் சகாயம், அடுத்த ஆண்டு செயலராக பதவி உயர்வு பெறுவதற்கு இந்த மதிப்பெண் பெரும் தடையாக இருக்கும்" என்கிறார்.


Latest Trending Videos



பின்னணியில் பி.ஆர்.பி?
இந்த சதி வேலைகளுக்கு பின்புறம் ஓ.பி.எஸ் இருக்கிறார் என்கிறார்கள். கடந்த நவம்பர் மாதம் முதல் மதுரை பி.ஆர்.பி கிரானைட்டுக்கு எதிராக சகாயம் நடத்திய சட்டப் போராட்டத்தை மக்கள் அறிவார்கள். சரியான உணவில்லாமல் சுடுகாட்டில் படுத்துறங்கி, ஒரு லட்சம் கோடி கிரானைட் ஊழலை வெளியில் கொண்டு வந்தார். பி.ஆர்.பியின் விசுவாசியான ஓ.பி.எஸ், கிரானைட் விசாரணையை நீர்த்துப் போகச் செய்ய பல வேலைகளைச் செய்தார். கலெக்டர், போலீஸ் என எந்த ஒத்துழைப்பையும் சகாயத்திற்குக் கொடுக்காமல் பார்த்துக் கொண்டதில் ஓ.பி.எஸ்ஸுக்கு முக்கியப் பங்கு உண்டு. வேறு எந்த வழியிலும் பழிவாங்க முடியாததால், மதிப்பெண் மூலம் சகாயத்தின் பதவி உயர்வைத் தடுக்கப் பார்க்கிறார் ஓ.பி.எஸ் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்.

இதுபற்றியெல்லாம் கவலைப்படாத சகாயம், தலைமைச் செயலாளர் ஞானதேசிகனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். "அமைச்சர் கோகுல இந்திராவின் ஊழலுக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் இப்படிச் செய்திருக்கிறார். இதனை எதிர்த்து நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ய இருக்கிறேன். மதிப்பெண் போடுவதற்காக நடந்த ஆவணங்கள் அனைத்தையும் எனக்கு அளிக்க வேண்டும்" எனக் கோரியிருக்கிறார்.

சகாயத்தின் எதிர்வினையை அமைச்சர் அண்ட் கோ எதிர்பார்க்கவில்லை. சுடுகாட்டில் படுத்துறங்கி நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் சகாயம் இருக்கும்போது, அரசின் சிஸ்டத்தை எதிர்த்து சட்டரீதியாகத்தானே போராட முடியும்?

-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை: