சனி, 26 மார்ச், 2016

தே.மு.தி.க...டெபாசிட் பணத்தை திருப்பி கொடுக்க தொடங்கியது...சீட் கேட்டவர்கள் ஓட்டம்!

சட்டசபை தேர்தலில் தி.மு.க – தே.மு.தி.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று முதலில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இதனால் தி.மு.க. – தே.மு.தி.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைந்தால் ஆட்சி மாற்றம் உறுதி என்று நம்பிய இரு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு மனு கொடுத்தனர்.
தே.மு.தி.க. 234 தொகுதிக்கும் நேர்காணல் நடத்தியது. மாவட்ட செயலாளர்கள், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், ஆர்வத்துடன் சீட் கேட்டனர். இதற்காக கட்சி தலைமையிடம் சீட் கேட்ட நிர்வாகிகள் 234 தொகுதிக்கும் பணம் செலுத்தி இருந்தார்கள்.

ஆனால் விஜயகாந்த் தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்றும் தனித்து போட்டி என்று அறிவித்தார். இதனால் தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்தால் எம்.எல்.ஏ. சீட் பெற்று வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் விஜயகாந்த் அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் விஜயகாந்த் தனித்து போட்டியிடும் முடிவை மாற்றினார். மக்கள் நலக் கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு அமைத்து போட்டியிடுவதாக அறிவித்தார். இது தே.மு.தி.க. நிர்வாகிகள் இடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
124 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. ஆனால் இந்த தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கு விருப்பமில்லை என்றே தெரிகிறது.
ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை, இரு கம்யூனிஸ்டு கட்சிகளுடன் இணைந்து விஜயகாந்த் தேர்தலை சந்திக்கும் முடிவிற்கு தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததால் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.
கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவித்த போது கூட தே.மு.தி.க. தொண்டர்கள் பட்டாசு வெடிக்கவோ, ஆரவாரம் செய்யவோ இல்லை.
மாறாக தாங்கள் செலுத்திய டெபாசிட் பணத்தை திரும்ப தர வேண்டும் என்று தே.மு.தி.க. தலைமையை வலியுறுத்தினார்கள். தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் கட்டிய பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கேட்டு வந்தனர்.
தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. அதனால் பணத்தை திருப்பி கொடுக்கும் படி கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்தனர்.
சென்னை, விழுப்புரம், கோவை, சேலம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாநில நிர்வாகிகள் பணத்தை கேட்டு வருவதால் கட்சி தலைமை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தது.
இந்த நிலையில் கோவையில் ஒரு நிர்வாகி பணம் கேட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் தலைமை அதிர்ச்சி அடைந்தது.
இதையடுத்து அவருக்கு உடனடியாக டெபாசிட் பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. அதே போல மற்ற நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் பணம் நேற்று முதல் திருப்பி கொடுக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், தி.மு.கவுடன் கூட்டணி என்று கூறித்தான் எங்களிடம் பணம் வாங்கினார்கள். இப்போது கூட்டணி மாறி விட்டது. இந்த கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தையை தே.மு.தி.க.வில் உள்ள பலர் விரும்பவில்லை. கேப்டன் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம். அதே நேரத்தில் தேர்தலில் வெற்றி பெறத்தான் பலகோடிகளை செலவு செய்கிறோம். தோற்பதற்கு அல்ல. அதனால் பல மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கட்டிய பணத்தை திரும்ப கேட்டு வருகிறார்கள். கேப்டனும் பணத்தை திருப்பி கொடுக்க சம்மதித்து விட்டார் என்றார்.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: