புதன், 23 மார்ச், 2016

8 மாதங்களில் 20 லாரி, 25 டிரைவர்கள் மாயம் / கொலை ? வடமாநில கும்பல் கைவரிசையா?


திண்டுக்கல்: தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 20 லாரிகள், 25 டிரைவர்கள் மாயமாகியுள்ளனர். இது குறித்துசெம்பு கம்பி கடத்தல் வழக்கில் சிக்கிய ஹரியானா வாலிபரிடம் விசாரிக்க நாமக்கல் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
துாத்துக்குடி 'ஸ்டெரிலைட்' நிறுவனத்தில் இருந்து மத்திய பிரதேசம் இந்துாருக்கு ரூ.ஒரு கோடி மதிப்புள்ள ரூ.24.50 டன் செம்பு கம்பிகளை ஏற்றி ஒரு லாரி சென்றது. நாமக்கல்லலை சேர்ந்த ரவிச்சந்திரன், 39, லாரியை ஓட்டினார்.கொடைரோடு அடுத்துள்ள காமலாபுரம் அருகில் மற்றொரு லாரியில் வந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் வழிமறித்தனர். டிரைவர் ரவிச்சந்திரனை தாக்கி கை, கால்களை கயிற்றால் கட்டி தாங்கள் வந்த லாரியில் போட்டனர்.செம்பு கம்பி ஏற்றிவந்த லாரியை வேறொரு டிரைவர் மூலம் ஓட்டிச் சென்றனர்.
வேடசந்துார் அருகே விருதலைப்பட்டியில் ரவிச்சந்திரனை ரோட்டோரம் தள்ளிவிட்டனர்.அவரது தகவலின் பேரில் அம்மைய நாயக்கனுார் போலீசார் கடத்தப்பட்ட லாரியை தேடினர். லாரியில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.எஸ்., கருவி துண்டிக்கப்பட்டதுடன், கரூர் அரவக்குறிச்சி அருகே கடத்தப்பட்ட லாரி பழுதாகி நின்றது. அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது, லாரியில் இருந்தவர்கள் தப்பியோடினர்.ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ்வீர்,34, என்பவர் மட்டும் சிக்கினார். இவரிடம் நடத்திய விசாரணையில் லாரி கடத்தப்பட்ட விபரம் தெரிய வந்தது. அம்மையநாயக்கனுார் போலீசார் சுராஜ்வீரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தப்பியோடிய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

25 டிரைவர்கள் மாயம்:தமிழகத்தில் திண்டுக்கல், கரூர், நாமக்கல் பகுதிகளில் கடந்த 8 மாதங்களில் 20 லாரிகள் மாயமாகியுள்ளன. இதில் பயணித்த 25 லாரி ஓட்டுனர்கள் காணாமல் போயுள்ளனர். பெரும்பாலான லாரிகள் சென்னை அல்லது கிருஷ்ணகிரியை தாண்டியவுடன்தான் காணாமல் போய் இருக்கின்றன.சில கொள்ளை கும்பல்கள் லாரி டிரைவர்களை தாக்கி பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடிப்பது அடிக்கடி நடப்பதாக லாரி சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறினார். இதனால் பிடிபட்ட ஹரியானாவை சேர்ந்தவரை காவலில் எடுத்து விசாரித்தால் லாரிகளை கடத்தும் கும்பல் குறித்து விபரம் தெரிய வரும் என, அம்மையநாயக்கனுார் போலீசார் முடிவு செய்துள்ளனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: