மெக்சிகோவில் பாரபட்சமான முறையில்
பணி அமர்த்தல் பிரச்சினையைக் கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற 40 க்கும்
மேற்பட்ட மாணவர்களைக் கொலை செய்து தீயில் எரித்து ஆற்றில் வீசிய கும்பலை
காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மெக்சிகோவில் கியூரெரோ மாகாணத்தில், அயாட்ஜினப்பா என்ற இடத்தில் ஆசிரியர்
பயிற்சி கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. அதன் மாணவர்கள் சிலர், பாரபட்சமான
பணி அமர்த்தல் பிரச்சினையை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்து,
அதற்கு நன்கொடை திரட்டுவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி இகுவாலா
நகருக்குச் சென்றனர்.
அப்போது அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் மோதல்
ஏற்பட்டது. அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர்
பலியானார்கள். 43 மாணவர்கள் காணாமல் போனார்கள்.
மாணவர்கள் மாயமான பிரச்சினை, அங்கு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன்
தொடர் போராட்டங்களுக்கு வழி வகுத்தது. இந்த விவகாரத்தில், இகுவாலா நகர
மேயருக்கும், அவரது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மேயரின் மனைவி, உள்ளூரில் போதைப்பொருள் கடத்தல்களுக்கு துணை போனதாகவும்,
அதற்கு இந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், பழி வாங்கும்
விதத்தில்தான் காவல் துறையினரை ஏவி இந்த நடவடிக்கையை அவர்கள்
மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து மாணவர்கள் காணாமல் போன பிரச்சினையில் மேயர் ஜோஸ் லூயிஸ்
அபர்கா, அவரது மனைவி மரியா டி லோஸ் ஏஞ்சல்ஸ் பினிடா, போதைப்பொருள் கடத்தல்
கும்பலினர் உள்பட 70 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மாணவர்கள் மாயமான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள்
கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள்,
“மாயமான மாணவர்களை காவல் துறையினர் எங்களிடம் ஒப்படைத்தனர். அவர்களில்
சிலர் ஏற்கனவே மூச்சு திணறடித்து கொல்லப்பட்டிருந்தனர்.
மற்றவர்களை நாங்கள் சுட்டுக்கொன்றோம். கொல்லப்பட்ட மாணவர்களை அடையாளம் தெரியாமல் போவதற்காக தீயிட்டுக் கொளுத்தினோம்“ என கூறினார்.
இது குறித்து மெக்சிகோ அட்டார்னி ஜெனரல் ஜீசஸ் முரில்லோ கூறுகையில்,
“மாணவர்களைக் கொலை செய்து, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பெட்ரோல்,
டயர், விறகு, பிளாஸ்டிக் கொண்டு எரித்துள்ளனர்.
பின்னர் அந்த உடல்களை சாக்கு பைகளில் போட்டு ஆற்றில் வீசி உள்ளனர். எத்தனை
பேர் கொல்லப்பட்டனர் என்ற எண்ணிக்கையை கைது செய்யப்பட்டுள்ள கும்பலினர்
உறுதியாக கூறவில்லை. இருப்பினும் 40 க்கும் மேற்பட்டவர்கள் என
கூறுகின்றனர்“ என்று தெரிவித்துள்ளார்.
சமீப காலத்தில் மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிர்ப்பு
தெரிவித்ததற்காக ஒரே நேரத்தில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பது
இதுவே முதல் முறை ஆகும்.
அங்கு இந்தப் பிரச்சினையில் கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து 80
ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், 22 ஆயிரம் பேர் காணாமல்
போனதாகக் கூறப்படுகிறது. tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக