புதன், 12 நவம்பர், 2014

Mekedatu Karnataka காவிரியின் குறுக்கே புதிய அணைக்கட்டு? கர்நாடக ஆடுதாண்டும் பாறை அணைக்கட்டு!

பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக-கர்நாடக எல்லையான மேக்கேதாட்டு (ஆடு தாண்டும் பாறை) என்ற இடத்தில் குடிநீர் திட்டத்திற்காக அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. "மேக்கேதாட்டு பகுதியில் மொத்தம் 3 நீர்த் தேக்கங்களை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு யோசிக்கப்பட்டது. ஆனால், அத்திட்டத்தை செயல்படுத்த இயலவில்லை. காவிரி ஆற்றின் உபரிநீரை கர்நாடகம் பயன்படுத்திக்கொள்வதில் காவிரி நடுவர்மன்றத்தில் எவ்வித தடங்கலும் இல்லை. எனவே, மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களை கட்டி அங்கு நீர்மின் உற்பத்திநிலையம் அமைக்க வாய்ப்புள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த அரசு யோசித்துவருகிறது.
மின் உற்பத்திக்கு பயன்படுத்திய பிறகு, உபரிநீரை வழக்கம்போல தமிழகத்திற்கு அனுப்பிவிடப்படலாம். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மேக்கேதாட்டுவில் நீர் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தடையேதும் விதிக்கப்படவில்லை. எனவே, காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் நீர் மின் நிலையம் அமைக்க சட்டத் தடை ஏதுமில்லை" என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்திருந்தார். இதையடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதி, அதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து அப்பிரச்சினை கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது மீண்டும் மேக்கேதாட்டு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெங்களூருவில் தலைமைச் செயலகமான விதான சவுதாவில் இன்று நிருபர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் இதுகுறித்து கூறியதாவது: மேக்கேதாட்டு பகுதியில் குடிநீருக்காக 48 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட 2 அணைகளை கட்ட திட்டமிட்டுள்ளோம். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பால், இந்த திட்டத்திற்கு ஏதேனும் தடை உள்ளதா என்பது குறித்து மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனிடம் கேட்டிருந்தோம். அவரது தலைமையிலான மூத்த வக்கீல்கள் ஆய்வு செய்து, கர்நாடகா அணை கட்ட எந்த தடையும் இல்லை என்று கூறிவிட்டனர். எனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், நீர்வள அமைச்சகத்திடம் அணைகளை கட்ட அனுமதி கேட்க உள்ளோம். இதில் தமிழக அரசு தலையிடாது என்று நம்புகிறோம். குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய பிறகு மின்சார உற்பத்திக்கும் வாய்ப்பு உள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும். இவ்வாறு எம்.பி. பாட்டீல் தெரிவித்தார். முதலில் குடிநீர் திட்டம் என்று அனுமதி கேட்டு அணை கட்டிவிட்டு, அதன்பிறகு நீர் மின் நிலையமாகவும் அதை பயன்படுத்த கர்நாடகா திட்டமிட்டுள்ளதாக அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: