சனி, 15 நவம்பர், 2014

ராமதாஸ்: அன்பை வெளிபடுத்த முத்தம் கொடுப்பதா? பின்னே அரிவாளையா தூக்கணும்?


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ‘அன்பு முத்தம்’ என்ற பெயரில் போராட்டம் நடத்திய மாணவ, மாணவியர் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளனர். அன்பை பரிமாறிக் கொள்வதற்கான சுதந்திரம் என்ற பெயரில் மாணவ, மாணவிகள் அரங்கேற்றியுள்ள செயல் அதிர்ச்சியளித்தது மட்டுமின்றி, கலாச்சாரத்தின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் கோழிக் கோட்டில் தேனீர் விடுதி ஒன்றில் சில இளைஞர்களும், இளம்பெண்களும் முத்தமிடுவதை அங்குள்ள சில அமைப்புகள் கண்டித்தன. கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டவர்களை அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அடித்து விரட்டியுள்ளனர்.ஜாதி தலைவர்களுக்கு  பயம் எங்கே நம்ம வன்னிய பிள்ளைங்க ஜாதி விட்டு ஜாதி மாறி முத்தம் குடுத்துருவாய்ங்களோ?


பொது இடங்களில் முத்தம் கொடுப்பதைத் தடுப்பது தங்களின் சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று கூறிக் கொண்டு கேரளத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அன்பு முத்தம் என்ற பெயரில் பொது இடங்களில் கூடி கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் போராட்டம் நடத்திவருகின்றனர். மற்ற மாநிலங்களுக்கும் பரவிய இப்போராட்டம் இப்போது தமிழகத்திலும் தலையை நுழைத்துள்ளது. சுதந்திரம் எது?, பாதுகாப்பு எது? என்பதை அறியாமலேயே ‘சுதந்திரத்தை பாதுகாக்கிறோம்’ என்ற பெயரில் இப்படி ஒரு போராட்டத்தை நடத்திய மாணவ, மாணவியரின் அறியாமையை நினைத்து பரிதாபம் தான் ஏற்படுகிறது.

சென்னை ஐ.ஐ.டியில் நடத்தப்பட்ட இப்படிப்பட்ட போராட்டத்தை ஐ.ஐ.டி. நிர்வாகமும், காவல்துறையும் எப்படி அனுமதித்தன? என்பது தெரியவில்லை. கலாச்சாரத்தை சீரழிக்கும் இது போன்ற போராட்டங்களும், அதற்கு துணைபோகும் வகையிலான அரசு அமைப்புகளின் செயல்பாடுகளும் கண்டிக்கத்தக்கவை.

கேரளத்தில் பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டதை வேண்டுமானால் தவறு என்று கூறலாம். அதே நேரத்தில் இத்தகைய கலாச்சார சீரழிவுகளை சரி என்று கூறி நியாயப்படுத்துவதோ, இதைக் கண்டிப்பதை தவறு என்று விமர்சிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது.

பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை குற்றமென சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக அன்பு முத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 294(ஏ) பிரிவின்படி மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் செய்யப்படும் எந்தவிதமான ஆபாச செயலும் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அளிக்கும் அளவுக்கான குற்றம் ஆகும்.

ஆபாச செயல் என்பதற்கான வரையறை இந்திய தண்டனைச் சட்டத்தில் தெளிவாக இல்லாததால் தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்ததே தவிர, பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை அனுமதிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை. ஒருவேளை சட்டப்படி இது சரியாக இருந்தால் கூட கலாச்சாரப்படி தவறான இச்செயல்களை அனுமதிக்கக் கூடாது.

பொது இடங்களில் குப்பை போடுவது குற்றம்; பொது இடங்களில் எச்சில் துப்புவது குற்றம் என்று சட்டமும், சான்றோர்களும் கூறுகின்றனர். அவ்வாறு இருக்கும் போது அவற்றைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ‘பொது இடங்களில் கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் செயலை’ எவ்வகையில் அனுமதிக்க முடியும் என்று தெரியவில்லை. சென்னை ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவ, மாணவியரில் பெரும்பான்மையானோர் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் தமிழ் கலாச்சாரம் குறித்து அறியாமல் இதைச் செய்திருக்கலாம். இதைப் பின்பற்றி தமிழகத்திலுள்ள மற்ற கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், அது நினைத்துப்பார்க்கவே முடியாத மோசமான கலாச்சார மற்றும் பண்பாட்டு சீரழிவுகளை ஏற்படுத்திவிடும். சுதந்திரம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் இத்தகைய செயல்களை சமூகவிரோதிகள் தங்களின் வக்கிரங்களுக்கு வடிகாலாக தவறாக பயன்படுத்திக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

அப்படி நடந்தால் பொது இடங்களில் பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடவே முடியாத நிலையை ஏற்பட்டு விடும் என்பதை சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக போராடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் சொல்வதால் என்னை கலாச்சாரக் காவலர் என்றோ, பிற்போக்குவாதி என்றோ சில போலி புரட்சியாளர்கள் விமர்சிக்கக் கூடும். சமூக நலனுக்காக எத்தனையோ விமர்சனங் களைத் தாங்கிக் கொண்ட நான் இதற்கெல்லாம் கவலைப்பட போவதில்லை. அடிப்படையில் தமிழ் சமுதாயம் பெண்மையை போற்றும் தன்மை கொண்டதாகும்.

‘பெண்மை போற்றுதும்’ என்று கவிதைகளில் முழங்கிய மகாகவி பாரதியார் பெண்களுக்கு ஆதரவாக எத்தனையோ முற்போக்கு கருத்துக்களைக் கூறியுள்ளார். பெண்களை உலகின் மகா சக்தி என்று வர்ணித்த பாரதியார், கல்வி, கலை, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் அவர்கள் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினாரே தவிர பொது இடங்களில் கட்டியணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என ஒருபோதும் அறிவுறுத்தவில்லை.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக 14 வயதிலேயே அறவழியில் போராடிய தில்லையாடி வள்ளியம்மை, ஆயுதமேந்தி போராடிய ராணி வேலுநாச்சியார், விண்வெளியில் ஆய்வு செய்த கல்பனா சாவ்லா போன்று சாகசங்களைச் செய்வதில் தான் பெண்கள் ஆர்வம் காட்ட வேண்டுமே தவிர, தவறான வழிகாட்டுதலுக்கு இரையாகி தவறான வழியில் சென்று விடக்கூடாது. எனவே, தமிழ் கலாச் சாரத்திற்கு எதிரான எந்த செயலிலும் இளைய தலைமுறையினர் ஈடுபடக்கூடாது; அத்தகைய செயல்களை தமிழக அரசும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’என்று கூறியுள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: