செவ்வாய், 11 நவம்பர், 2014

ரொமிலா தாப்பர்: மதவெறி நோக்கில் பாடப் புத்தகங்கள் ! அறிஞர்களின் மவுனம் ஆபத்தானது!

மதவெறி நோக்கில் பாடப் புத்தகங்கள் திருத்தப்படுவது குறித்தும், மதச்சார்பின்மை அடிப்படையிலான புத்தகங்கள் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்படுவது குறித்தும் அறிஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் வற்புறுத்தினார். டெல்லியில் நிகில் சக்கரவர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில், ‘கேள்வி எழுப்புவதா? கேள்வி எழுப்பாமல் இருப்பதா? - இதுதான் இப்போதைய கேள்வி’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். முன்பை விட இப்போது ஏராளமான அறிஞர்கள் உள்ளனர். ஆனால், அதிகாரத்தோடு மோத அவர்கள் மறுக்கின்றனர். சிந்தனை சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போது கூட அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் சர்ச்சையற்ற முறையில் இயங்க விரும்புகின்றனர் அல்லது தங்களது அறிவாற்றலை அமுக்கிக் கொள்ள சம்மதிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
பண்டைய இந்தியாவில் பிராமணர் அல்லாத சிந்தனையாளர்கள், நாத்திகர்கள் அல்லது கடவுள் மறுப்பாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர்.
தற்போது இந்துத்துவா போதனைகளை ஏற்க மறுப்பவர்கள் அத்தனை பேரும் மார்க்சிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றனர் என்று ரொமிலா தாப்பர் குறிப்பிட்டார். பகுத்தறிவுச் சிந்தனை என்பதுதான் நம்முடைய அறிவுலகின் பாரம்பரியம். அதை முன்னெடுத்துச் செல்ல அறிஞர்கள் துணிச்சலுடன் முன்வர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இனவெறி, மதவெறி அடிப்படையில் மனித உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக அறிஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
இன்றைய நாளில் அறிஞர்கள் என்று அறியப்படுபவர்கள் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப அஞ்சுகின்றனர். அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களது சிந்தனைகளை திணிக்கும்போது அதற்கு எதிராக எதுவும் பேசாமல் மவுன சாட்சியாகிவிடுகின்றனர் என்றார் அவர். மதச்சார்பற்ற கோட்பாடுகளை முன்வைக்கும் புத்தகங்கள் தடை செய்யப்படுகின்றன.
பாடத் திட்டங்கள் மதவெறி அடிப்படையில் திருத்தி எழுதப்படுகின்றன. மத மற்றும் அரசியல் தலையீடுகளின் காரணமாக இவ்வாறு நடக்கிறது. அரசியல் அதிகாரத்தை கண்டு அறிஞர்கள் அஞ்சுவதால்தான் சிறு எதிர்வினையை கூட செய்வதற்கு இவர்கள் தயங்குகின்றனர் என்று குறிப்பிட்ட ரொமிலா தாப்பர், மத அடிப்படையிலான அரசியல் திட்டமிட்டு வளர்க்கப்படுவதால் மக்களிடையே பகைமை உருவாக்கப்படுகிறது. இதனால் சுதந்திரமான சிந்தனை மறுக்கப்படுகிறது. அறிஞர்கள் இத்தகைய போக்கை எதிர்த்து மேலும் மேலும் கேள்வி எழுப்ப வேண்டும். அறிவுத்தளத்தில் போர் புரிய வேண்டும். ஆனால், இது மிகவும் குறைவாகவே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: