திங்கள், 10 நவம்பர், 2014

வைகுண்டராஜனை பிடிக்க சி பி ஐ வலைவீச்சு! வீடு ஆபீஸ்களில் வக்கீல்கள் குவிப்பு !

நெல்லை: தாது மணல் அதிபர் வைகுண்டராஜனை சிபிஐ தேடுவதன் எதிரொலியாக அவரது வீடு, அலுவலகங்களில்  வக்கீல்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள்  விசாரணை, ஆய்வை எதிர்கொள்ள அவர்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் துறைமுக பொறுப்புக்குழு தலைவராக  30.4.2007 முதல் 29.4.2012 வரை இருந்த சுப்பையா வருமானத்திற்கு அதிகமாக ரூ.8 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 501 மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி  குவித்ததாக சிபிஐ கடந்த 2012ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இவ்வாறு சொத்து குவிப்பதற்கு தாது மணல் அதிபர் வைகுண்டராஜனும் அவரது சகோதரர்  ஜெகதீசனும் உதவியதாக அவர்களை கைது செய்யும் முயற்சியில் சிபிஐ இறங்கியது.


இதையறிந்து இருவரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். மனுவை நீதிபதி ஜி.சொக்கலிங்கம் தள¢ளுபடி செய்தார்.  முன் ஜாமீன் தள்ளுபடியானதால¢ வைகுண்டராஜன், ஜெகதீசனை பிடிக்க சிபிஐ மீண்டும் முயற்சி மேற்கொண்டது. ஆனால் இருவரும் திடீரென தலைமறைவாயினர்.  இதையடுத்து சிபிஐ 5 தனிப்படைகளை அமைத்து அவரது வீடு, அலுவலகப் பகுதிகளிலும் மும்பை உள்ளிட்ட வெளியிடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. ஏற்கனவே தாது மணல் விவகாரத்தில் அளவுக்கு அதிகமாக மணலை கொள்ளையடித்ததாக வைகுண்டராஜன் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், தான் கைது  செய்யப்பட்டால் மற்ற விவகாரங்களையும் சிபிஐ தோண்டலாம் எனக்கருதிய வைகுண்டராஜன் பல்வேறு முறைகளில் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கடந்த இரு  நாட்களாக கடல் பகுதியில் படகில் உலா வந்ததாக தகவல் வெளியானது.

இதற்கிடையே கடந்த 3 நாட்களாக அவரது வீடு, அலுவலகங்களில் முன்னெச்சரிக்கையாக வக்கீல்கள் குவிக்கப்பட்டனர். கீரைக்காரன்தட்டிலுள்ள அவரது வீடு,  அலுவலகம், தூத்துக்குடி, நெல்லை அலுவலகங்களிலும் வக்கீல்கள் நடமாட்டம் காணப்பட் டது. சொந்த ஊரில் உள்ள பிரதான அலுவலகத்தில் அவருக்கு  நெருக்கமானவர்கள் காணப்படவில்லை. அவரது தலைமறைவு விவரங்களோ, பிற கணக்கு, வழக்கு தொழில் பரிவர்த்தனை விவரங்களோ தெரிந்து விடக்கூடாது  என்பதற்காக மிகவும் கவனமாக செயல்பட்டனர். அவரது வீட்டில் நேற்று வரை 20க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இருந்தனர்.

இந்நிலையில் உயர்நீதிமன்ற கிளையில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால், உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு செய்வதற்கு இன்று அவரது தரப்பில்  வக்கீல்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.ஆர்ப்பாட்டம்இந்நிலையில், வைகுண்டராஜனை, சிபிஐ போலீசார் உடனடியாக கைது செய்யக்கோரி மனித உரிமை  பாதுகாப்பு மையத்தின் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளை முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் வாஞ்சிநாதன் தலைமை  வகித்தார். அவர் பேசியதாவது: தமிழகத்தின் 32 மாவட்டங்களில் நடந்த கனிம வள கொள்ளையை விசாரிப்பதற்காகத் தான் சகாயம் குழு அமைக்கப்பட்டது. ஆனால்  தமிழக அரசு வைகுண்டராஜனை காப்பாற்றும் நோக்கத்தில் கிரானைட் முறைகேட்டை மட்டும் விசாரிக்க அனுமதித்துள்ளது.

இதன் மூலம் வைகுண்டராஜனை காப்பாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. லஞ்சம் கொடுத்து துறைமுக அதிகாரியை வைகுண்ட ராஜன் விலைக்கு  வாங்கியுள்ளார். தொடர்ந்து அவர் சிபிஐக்கு ஒத்துழைக்காமல் உள்ளார். எனவே அவரை உடனடியாக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். உடனடியாக  அவரை கைது செய்ய வேண்டும். அவரது சொத்துக்கள், நிறுவனங்கள் மற்றும் பினாமி பெயர்களில் உள்ள சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சகாயம் குழு தாதுமணல் கொள்ளை குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை: