புதன், 12 நவம்பர், 2014

அனைத்து கனிமவள முறைகேட்டையும் சகாயம் குழு விசாரிக்க வேண்டும்: ஹைகோர்ட்டில் புதிய வழக்கு

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள அனைத்து கனிமவள முறைகேட்டையும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு நடந்த கனிமவள முறைகேடு குறித்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி சகாயம் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவினர் விசாரணையை மதுரையில் விரைவில் துவக்க உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கனிமவள ஆய்வுக்கு உத்தரவிட்ட பின்பே, ஆய்வுப்பணியை துவக்க வேண்டும்' என, சகாயம் ஆதரவு குழு வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொது நல மனுவில், மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு பற்றி மட்டுமே விசாரிக்க சகாயம் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், சட்ட விரோத அனைத்து வகையான கனிமவள முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. தமிழகத்தில் நடந்த அனைத்து கனிமவள முறைகேடு பற்றி விசாரிக்க கோரி டிராபிக் ராமசாமி ஏற்கனவே மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: