திங்கள், 3 மார்ச், 2014

தி.மு.க. கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க. பின்னர் அந்த கூட்டணியில் இருந்து விலகியது.
இதை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி உருவாகும். இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வும் இடம் பெறும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆனால் தே.மு.தி.க. கூட்டணி தொடர்பாக பா.ஜனதாவுடனும், காங்கிரசுடனும் பேசிக் கொண்டிருக்கிறது. எந்த பக்கம் சாய்வார் விஜயகாந்த் என்பது மர்மமாகவே உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. தனது அணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. 40 தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர்களின் நேர்காணல் இன்றுடன் முடிவடைந்தது.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நாளை தொடங்குகிறது. இதற்காக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது உறுதியாகததால் கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளன.
கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை ஒரு பொது தொகுதி உள்பட 5 தொகுதிகளை கேட்க முடிவு செய்து இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுரை, மத்திய சென்னை, வேலூர் ஆகிய 3 தொகுகளில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாகவும் பேச்சுவார்த்தையின் போது எங்கள் விருப்பத்தை தெரிவிப்போம் என்று அந்த கட்சி நிர்வாகி கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் பேராசிரியர் காதர் மொய்தீன் கடந்த தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது அகில இந்திய அளவில் அந்த கட்சிக்கு ‘ஏணி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த முறை ஏணி சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது. குறைந்த பட்சம் 4 முஸ்லீம் வேட்பாளர்கள் தமிழகத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வு பெற்று செல்வார்கள் என்று காதர்மொய்தீன் நம்பிக்கை தெரிவித்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி தென்காசி தொகுதியில் போட்டியிட விரும்புகிறது. நாளை தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி வடிவம் பெறும். ஆனால் காங்கிரசும், தே.மு.தி.க.வும் கூட்டணியில் இடம் பெறுவதை பொறுத்தே தொகுதி பங்கீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.maalaimalar.com

கருத்துகள் இல்லை: