இன்னைக்கு பழையது முடிஞ்சு போச்சு, நாளைக்கு பார்க்கலாமென்று போயஸ் கதவுகள் மூடிய பிறகு, கையேந்தியவன் திரும்பிச் செல்வதிலும் ஒரு தீர்க்கம் உண்டு என்று நெஞ்சு நிமிர்த்துகிறார் தாபா.
போலிக் கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி என்று அறிவித்து விட்டு 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நியமித்து அந்தக் கூட்டணிக்கு மரியாதை செய்த கையோடு பிரச்சாரத்திற்கும் கிளம்பி விட்டார் ஜெயலலிதா. கூட்டங்களில் மறந்தும் பாஜகவை அவர் விமரிசிப்பதில்லை. சொல்லப்போனால் மோடி பேசுவதைப் போலவே பேசுகிறார். என்ன, அதில் குஜராத் வளர்ச்சி மட்டும் இடம் பெறுவதில்லை.
மேலும் மத்தியில் அதிமுக இடம்பெறும் ஆட்சியை உருவாக்க ஆதரியுங்கள் என்று அவர் பேசுவதை வைத்து மத்தியில் அதிமுக ஆட்சி சாத்தியமில்லை எனும் யதார்த்தத்தை அவர் அங்கீகரிக்கிறார் எனலாம். கூடவே இடம்பெறும் ஆட்சி பாஜகவினதாக இருக்கலாம் என்பது ஊரறிந்த ஒன்று. இந்நிலையில் கூட்டணி தொகுதி உடன்பாட்டிற்காக பேசும் போலிக் கம்யூனிஸ்டுகள் மனமொடிந்த நிலையில் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் இந்த நிலையிலும் தாபா அவர்கள் சோர்வோ, விரக்தியோ அடையவில்லை. அதனால்தான் அவர் தாபா.
அப்பேற்பட்ட தாபாவை மரியாதை செய்யும் பொருட்டு இன்றைய ஒருவரிச் செய்திகளில் அவர் மட்டுமே நாயகன். அவர் பேசியது மட்டுமே செய்தி.
_______________________
செய்தி: எக்காரணம் கொண்டும் மரியாதையை இழக்க மாட்டோம்.
நீதி: உண்மை. இல்லாத ஒன்றை இழக்க முடியாதல்லவா?
_________________
செய்தி: கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஏ.பி. பரதன் ஆகியோரை அழைத்துப் பேசினார். பத்திரிகையாளர்களையும் அழைத்து அந்த அம்மையாரே சொன்னார், “கூட்டணி ஏற்பட்டிருக்கிறது” என்று.
நீதி: அம்மாவை பார்க்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டது யார்? அம்மாதான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று அறிவித்தது யார்?
_________________
செய்தி: அதன்பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்களையும் அழைத்தார். பத்திரிகையாளர்களையும் அழைத்தார். அவரே சொன்னார் கூட்டணி அமைந்திருக்கிறதென்று. நாங்கள் சொல்லவில்லை.
நீதி: உங்களுடன் கூட்டணியோ இல்லை ஒரு சீட்டு கிடையாது கெட்அவுட்டு சொல்வதோ அம்மாதான் அதிலென்ன சந்தேகம்?
_________________
செய்தி: இப்போது முறிந்ததாக, அவரே சொல்லும் வரை நாங்கள் அந்த அணியில் இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.
நீதி: இப்படியும் சொல்லலாம் – “நாங்கள் கொல்லப்படுவது வரை எங்களுக்கு உயிர் இருக்கும்”.
_________________
செய்தி: அணி இருக்கிறது, ஆனால் தொகுதி? ஜவ்வுமிட்டாய் போல இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
நீதி: அம்மாவிடம் உங்கள் இடுப்பு எவ்வளவு வளைகிறதோ அந்த அளவுக்கு ஜவ்வுமிட்டாய் இழுக்கத்தானே செய்யும்? முதுகெலும்பில்லாதவன் நல்லி எலும்புக்கு ஆசைப்படலாமா?
_________________
செய்தி: நாளை (வியாழக்கிழமை) மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடக்கிறது. வெறுமனே உணர்ச்சியோடு மட்டுமே இருந்து விடமுடியாது. சில சமயங்களில் கோபமும் வரும்.
நீதி: சாவதற்கு முன்னர் விக்கல் வரத்தானே செய்யும்!
_________________
செய்தி: இறுதி முடிவு எங்கிருந்து வர வேண்டுமோ, அதுவரை அமைதியாக இருப்போம். எடுத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லுவோம்.
நீதி: உங்களுக்கு அரை சீட்டுத்தான் தரமுடியுமென்று அம்மாவின் ஆணை இல்லாமலா ஓபி பேசுவார், தாபா அவர்களே?
_________________
செய்தி: தீர்க்கமான முடிவை எடுப்போம். அதன்பிறகு, அந்த முடிவின்படி முன்னேறிச் செல்வோம். அப்போது திரும்பிப் பார்க்க மாட்டோம்.
நீதி: இன்னைக்கு பழையது முடிஞ்சு போச்சு, நாளைக்கு பார்க்கலாமென்று போயஸ் கதவுகள் மூடிய பிறகு, கையேந்தியவன் திரும்பிச் செல்வதிலும் ஒரு தீர்க்கம் உண்டு என்று நெஞ்சு நிமிர்த்துகிறார் தாபா.
_________________
செய்தி: அதிமுக என்ற கழகம் பிறந்தபோது உடனிருந்தவர்களில் எஞ்சியிருப்பவன் நான். அது எழுப்பிய முழக்கங்களுக்காக, பட்டுக்கோட்டை பாடிய பாடலுக்காக இதுவரை உடனிருக்கிறோம். அதிமுக தாக்கப்பட்டபோதெல்லாம் காக்கும் பணியைச் செய்திருக்கிறோம்.
நீதி: எம்ஜிஆருக்கு அரசியல் கற்றுக் கொடுத்து, அம்மாவுக்கு அடியாள் வேலை பார்த்தும், கேவலம் ஒரு லெக் பீஸ் கூட கிடையாதா?
_________________
செய்தி: இலங்கைத் தமிழர்களுக்காக அதிமுக எடுத்த அரசியல் நிலைப்பாடுகளில் உடன்பட்டு நிற்கிறோம்.
நீதி: சாகப்போற ரவுடி சங்கரா சங்கரா என்று புண்ணியம் தேட நினைப்பதில்லையா?
_________________
செய்தி: என்னிடமோ, எங்கள் கட்சியினரிடமோ அதிமுக தலைமையிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஏதோ சொல்லியிருக்கிறார்கள்.
நீதி: மார்க்சிஸ்ட் கட்சிக்கு மரண பயம் வந்தாலும் எங்களுக்கு வராது, நாங்கள் அடிமைத்தனத்தால் மரணத்தை வென்றவர்கள்.
_________________
செய்தி: நாளை (வியாழக்கிழமை) சென்னையில் பேசுவோம். அதன்பிறகு பேச வேண்டிய இடத்தில் பேசுவோம். கூட்டணியில் இல்லை என்பதை அவர் (ஜெயலலிதா) வாயால் சொல்ல வேண்டும்.
நீதி: கூட்டணி இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் சொல்லி கேட்குமளவு நாங்கள் மானஸ்தர்கள் அல்லர்.
_________________
செய்தி: இத்தனைக் காலம் பொறுமையாக இருக்கிறோம் என்றால், பாரதக் கதையைப் படித்துப் பாருங்கள்.
நீதி: கடமையைச் செய், மானத்தை எதிர்பார்க்காதே, தொழிலைச் செய், கௌரவத்தை எதிர்பார்க்காதே, கம்யூனிசம் பேசு, முதலாளித்துவத்தை போற்று……….. vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக