செவ்வாய், 4 மார்ச், 2014

கம்யுனிஸ்டுகளுக்கு அதிமுக கைவிரிப்பு ? பொறுமையில் எருமையை வென்ற தோழர்கள் வைகோ படித்த பாடத்தை படிக்கிறார்கள்



முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கிய அதே நேரத்தில் தமிழகம், புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தைத் தொடங்கினர். அதோடு, அக்கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு பதவிகளை வகிப்போர் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதன் மூலம், “கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சீட் கிடையாது” என சமிக்கையை ஜெயலலிதா தெரிவித்துவிட்டதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது. கம்யுனிஸ்ட் கட்சிக்களுக்கு இன்னும் செய்யறதுக்கு நெறைய தொழில் இருக்கு!ஜால்ரா வாசிப்பதற்கு உரிய முன் அனுபவம்தான் இருக்கே ஏதாவது பஜனை கோஷ்டியில் சேருங்க அல்லது பேசாம அதிமுகவில் சேர்ந்து விடலாமே ? அட ஏறக்குறைய இவ்வளவுநாளும் தாபா அதைதானே செய்தார் 

இந்திய அளவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக மூன்றாவது அணியை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அமைத்துள்ளது. இந்த மூன்றாவது அணியில்தான் அ.தி.மு.க.வும் இடம்பெற்றுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது கூறி வந்தார்.
கடந்த பிப்ரவரியில் ஜெயலலிதாவை தனித்தனியாக சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஏ.பி.பரதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்தில் கூட்டணியை உறுதி செய்தனர். இதனால், தோழர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இதையடுத்து பிப்ரவரி 5-ம் தேதி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட தலா 3 தொகுதிகளை அப்படியே ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 3 தொகுதிதான் என்றாலும் அதில் மதுரை தொகுதியை தங்களுக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
கடந்த தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், இம்முறை மதுரை தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறார்.
மதுரை தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்பதை அறிந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், “நாங்கள் இந்தத் தொகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் போட்டியிட்டு வந்துள்ளோம். வெற்றியோ, தோல்வியை எங்களது தொகுதியை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்றனர்.
இந்த இரு கட்சியினரின் பிரச்னையால் எரிச்சலடைந்த அ.தி.மு.க. தலைமை, “மூன்று தொகுதிகள் கொடுத்து எல்லாம் பழைய கதை. இப்போது காலம் மாறிவிட்டது. இரு கட்சிகளுக்கும் தலா ஒரே ஒரு தொகுதிதான் கொடுக்க முடியும்” என வெட்டு ஒன்னு, துண்டு ஒன்னுதான் என புதிய பார்முலாவைக் கூறிவிட்டது.
இதனால் திகைத்துப்போயின இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும்!


அதற்குப் பின் இந்த இரு கட்சிகளின் தலைவர்களாலும், அ.தி.மு.க. தலைமையை நேரடியாக தொடர்புகொள்ளவே முடியவில்லை. இடையே தொடர்பாளர்களாக இருந்த சில அமைச்சர்கள் மூலமாக அவ்வப்போது கார்டனுக்கு தகவல் அனுப்பியதுடன் சரி.
இதனால், ஜெயலலிதா கடந்த 24-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தார். கூட்டணி ஏற்பட்டால் அந்தத் தொகுதிகளிலிருந்து தங்கள் கட்சி வேட்பாளர்கள் வாபஸ் வாங்கிக்கொள்வார்கள் எனக் கூறினார்.
வேட்பாளர் அறிவிப்புக்குப் பின்னரும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அ.தி.மு.க. தலைமையிடமிருந்து கூட்டணி பேச்சுக்களுக்காக எந்த அழைப்பும் வரவில்லை.
இதற்கிடையே, ஜெயலலிதா நேற்று காஞ்சிபுரத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதுமட்டுமின்றி அ.தி.மு.க. வேட்பாளர்களும் இதே நாளில் தங்கள் தொகுதிகளில் பிரசாரத்தைத் தொடங்கும்படி கேட்டுக்கொண்டார். இதன்படி அ.தி.மு.க. வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் பிரசாரத்தைத் தொடங்கினர்.
இந்தப் பிரசாரத்திற்கு கூட்டணி கட்சியினர் யாரையும் அ.தி.மு.க.வினர் அழைக்கவில்லை.
வழக்கமாக தேர்தல் பிரசாரத்திற்கு கூட்டணிக் கட்சியை அழைப்பதுண்டு. மேலும் வேட்பாளர்களின் கார்களில் கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் கட்டாயம் இடம்பெறும். ஆனால், அ.தி.மு.க. வேட்பாளர்களின் கார்களில் அவர்களது கட்சிக் கொடியைத் தவிர வேறு எந்தக் கட்சிகளின் கொடியும் இடம்பெறவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. மதுரைக்கு துணை மேயர் கோபாலகிருஷ்ணன், விருதுநகருக்கு சிவகாசி ஊராட்சி ஒன்றியத் தலைவர் ராதாகிருஷ்ணன், சிவகங்கைக்கு தேவக்கோட்டை ஒன்றியத் தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தஞ்சாவூர் பெரம்பலூர், பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் உள்ளாட்சிகளில் முக்கியப் பதவிகளிலும், மேலும், சில வேட்பாளர்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவர்களாகவும், அரசு வழக்கறிஞர்களாகவும் இருந்தனர்.
கட்சித் தலைமையின் உத்தரவுப்படி இவர்கள் அனைவரும் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் இன்னும் முடிவாகாதபோதும், அ.தி.மு.க. வேட்பாளர்களின் அரசு பொறுப்புகளை ராஜினாமா செய்யுமாறு கூறியதன் மூலம், “கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது” என்பதைத்தான் ஜெயலலிதா உணர்த்துகிறார் என அ.தி.மு.க.வினர் சொல்கின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே ஒரு தொகுதிதான் என்று அ.தி.மு.க. கூறி வந்த நிலையில், நடிகர் சரத்குமாரின் ச.ம.க., அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தங்களுக்கும் ஒவ்வொரு தொகுதி ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளன. ஆனால், யாருடைய வேண்டுகோளையும் ஜெயலலிதா ஏற்பதாகத் தெரியவில்லை.
இதனால், நாற்பதும் நமதே என்ற கோஷத்துடன் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட போகிறது என்ற தோற்றம்தான் தற்போது காணப்படுகிறது. காம்ரேட்கள், அம்மாவை எப்படி தாஜா செய்ய போகிறார்கள் என்பதுதான், தெரியவில்லை.viruvirupu.com

கருத்துகள் இல்லை: