புதன், 5 மார்ச், 2014

பாஜக அணியில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் ! பேரம் படிந்தது!

சென்னை: பாஜக அணியில் இடம்பிடித்துவிட்டது விஜயகாந்தின் தேமுதிக. அந்தக் கட்சிக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் எந்தக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்பது கடைசி வரை இழுபறியாகவே இருந்தது. காங்கிரஸ், திமுக, பாஜக என பல கட்சிகளும் விஜயகாந்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தன. அழைத்த அத்தனை கட்சிகளுடனும் பேசி வந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் திடீரென அவர் சிங்கப்பூர் பறந்துவிட்டார். திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடைசிவரை காத்திருந்தன. இவற்றில் திமுக விஜயகாந்துக்கான கதவை மூடிவிட்டது. காங்கிரஸ் காத்திருந்தது. இதற்கிடையில், சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணிப் பேச்சில் ஈடுபட்டார். இந்த அணியில் ஏற்கெனவே மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் பாஜகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கும் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்சி 10 தொகுதிகளைக் கேட்டு, 8 கொடுத்தால் ஏற்போம் என்று சொல்லி வந்தது. 6 தொகுதிகள் என்ற முடிவை வைகோ ஏற்பாரா என்பது விரைவில் தெரிய வரும். தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 16 தொகுதிகள் வரை விஜயகாந்த் கேட்டிருந்தார். இவற்றில் 14 ஒதுக்கப்பட்டுள்ளது. ஐஜேகே உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடு விரைவில் அறிவிக்கப்படும் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் வலுவான கட்சிகளைக் கொண்ட கூட்டணியாக பாஜக - தேமுதிக - பாமக - மதிமுக அணி உருவாகியுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: