வெள்ளி, 7 மார்ச், 2014

திமுகவை விட்டு வெளியேறும் திருமா? ஸ்டாலின், கருணாநிதி உருவபொம்மை எரித்து போராட்டம்!!


சென்னை: லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் உருவபொம்மைகளை எரித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசிக்க அவசர கூட்டத்தை நாளை திருமாவளவன் சென்னையில் கூட்டியுள்ளார். லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார். ஆனால் விழுப்புரம் தொகுதியில் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி தோல்வி அடைந்தது. இதனிடையே, தி.மு.க. கூட்டணியில் இருந்த பல கட்சிகள் வெளியேறிய நிலையில், விடுதலை சிறுத்தை மட்டுமே நிலைத்திருந்தது. ஸ்டாலினின் அளவுக்கு மீறிய ஆட்டம் ? எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை ...ஆனால், தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் புதிதாக இடம் பெற்றுள்ள புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்ததில் திருமாவளவன் நேற்று கையெழுத்திட்டார். விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதை கண்டித்து அண்ணா அறிவாவலயம் முன்பே நேற்றிரவு விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை திருமாவளவன் சமாதானப்படுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து பல தேர்தல்களை சந்தித்து உள்ளோம். இந்த உறவின் அடிப்படையில் உரிமையோடு, 5 தொகுதிகளை கேட்டோம். தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதையடுத்து, வருத்தம் இருந்தாலும் இந்தியாவை காப்பாற்றவும், சமூக நீதி மற்றும் மதசார்பின்மையை காக்கவும் இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்கிறோம்" என்றார். ஆனால் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலூர், விழுப்புரத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உருவபொம்மைகளை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். பரபரப்பான இந்த சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டம் சென்னை அசோக்நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. அப்போது, தி.மு.க கூட்டணியில் தொடருவதா? வெளியேறுவதா? என்பது குறித்து முடிவு செய்ய இருக்கிறார்கள்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: