சனி, 8 மார்ச், 2014

தமிழக கம்யுனிஸ்டுகள் நடிக்கும் "வருத்தப்படாத வயோதிபர் சங்கம்" திரைப்பட ஆரம்ப விழா !

சிபிஐ-சிபிஎம் வாங்கிய உதை
இப்பதான் அம்மா கூரூப் மூத்திர சந்துல போட்டு சாத்துனாங்க. அந்த வலி போறதுக்குள்ள அய்யா கூரூப்பு ஆய் போற சந்துல அடிக்கிற கதை வேணும்னு கேட்டா எப்படி, விடுங்க சார்.
ஓவியம் : முகிலன் ரு வழியாக போயஸ் தோட்டத்திலிருந்து மானமிகு போலிக் கம்யூனிஸ்டுகள் விரட்டியடிக்கப்பட்டார்கள். வழக்கமாக இத்தகைய அவமானத்திற்கு ‘கொள்கை’ விளக்கம் அளித்து தங்களது தத்துவப் புலமையை காட்டும் ‘தோழர்கள்’ இந்த முறை அதையும் செய்ய முடியாத துக்கத்திலும் கோட்பாட்டு வறட்சியிலும் உறைந்து கிடக்கின்றனர். தினமணி செய்தியாளருக்கு ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், மற்றும் வலதின் தாபா அளித்த பதில்களில் இருக்கும் துக்கம், படிக்கும் எவருக்கும் சிரிப்பை கிளப்பும் வகையில் ஆர்ப்பரிக்கிறது.
இந்த விசயத்தில் தாபாவா, ராமகிருஷ்ணனா என்ற வேறுபாடு இல்லை என்பதால் எதற்கு இவர்கள் இரு பிரிவாய் கட்சி நடத்தி நமது நேரத்தையும் கொல்லுகிறார்கள்? ஒன்றாய் இருந்தால் ஒரு விமரிசனம் எழுதிவிட்டு மற்ற வேலைகளை பார்க்கலாம். தற்போது வேறு வழியில்லை என்பதால் நேற்று தாபாவிற்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை இன்றைய ஒருவரிச் செய்திகளில் ஜி.ராமகிருஷ்ணனுக்க்கும் (கொசுறாய் தாபாவிற்கும்) கொடுக்கிறோம். செய்தி தினமணியிலிருந்து எடுக்கப்பட்டது – நன்றி.

கேள்வி: தனித்துப் போட்டியிடுவீர்களா?
ஜி. ராமகிருஷ்ணன்: இன்று எடுத்த முடிவை இரு கட்சி நிர்வாகிகளும் அறிவித்துள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அடுத்தடுத்து அறிவிப்போம்.
ஜி.ராமகிருஷணனது மனசாட்சி: எங்களை விரட்டுவதற்கு அம்மா எடுத்த முடிவையே இன்னும் ஜீரணிக்கலை பாஸ், இதுல தனியா சாகலாமேன்னு சீரியசா கேட்கிறீங்களே, வேணாம் அழுதுருவேன்.
___________________
கேள்வி: அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதற்கு என்ன காரணம்?
ஜி. ராமகிருஷ்ணன்: அதற்கான காரணத்தை ஆராய்வதற்கான நேரம் இதுவல்ல. அதிமுகவுடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை 6 முறை தொகுதிப் பங்கீடு குறித்து பேசினோம். அதிமுகவின் அணுகுமுறையால் உடன்பாடு ஏற்படவில்லை.
ஜி.ராமகிருஷணன் மனசாட்சி: மேட்டர் ரொம்ப சிம்பிள் பாஸ். ஒரு சீட்டுக்கு மேல் சல்லிக்காசு இல்லேன்னு தெரிஞ்சப்புறம் காரணமா, பூரணமா, தோரணமான்னு வெட்டி ஆராய்ச்சி செய்றதுக்கு பதில் கம்முனு செத்து போயிரலாம் தலைவா.
____________________
கேள்வி: பிரகாஷ் காரத், ஏ.பி. பரதன் போன்ற தலைவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணியை அறிவித்தார்கள். அதன் பிறகு திடீரென கூட்டணியிலிருந்து விலகியதற்கு என்ன காரணம்?
தா. பாண்டியன்: அதற்கான காரணத்தை அறிய நாங்களும் முயற்சிக்கிறோம். நீங்களும் (பத்திரிகையாளர்கள்) முயற்சியுங்கள்.
தா.பாண்டியன் மனசாட்சி: வேட்டியை உருவி கோவணத்தோடு விரட்டுனதை எல்லாருந்தான் பாத்தீங்க. இந்த சோகம் எங்களோடு போகட்டுமே, எதுக்கு காரத்தையும், பரதனையும் இழுத்து வுடுறீங்க? இப்பவும் அம்மாதான் பிரதமர்ங்கிறதுல மாத்துக் கருத்தே இல்ல.
_____________________
கேள்வி: அதிமுகவின் அணுகுமுறையால் கடைசிநேரத்தில் உங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதே?
தா. பாண்டியன்: இது கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி அல்ல. சமூகத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி. சமூகத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் போக்கப் பிறந்தவர்களே கம்யூனிஸ்ட்டுகள்.
தா.பாண்டியன் மனசாட்சி: உங்க பெயரைச் சொல்லி நாங்க புரோக்கர் கமிஷன் வெட்டும் போது, எங்களுக்கு போன மானம் உங்களுக்கும் போனதாகத்தானே பொருள். இதுதாண்டா தாபா இசம்.
_____________________
கேள்வி: அதிமுகவின் முடிவால் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதா?
தா. பாண்டியன்: இந்த உலகத்தில் யாரும் கம்யூனிஸ்ட் கட்சிகளை வருத்தம் அடையச் செய்யும் முடிவை எடுக்க முடியாது.
தா.பாண்டியன் மனசாட்சி: சூடு, சொரணை இல்லாதவன் கிட்ட உப்போட மகத்துவத்தை சொன்னா எடுபடுமா மாப்ள!
_____________________

கேள்வி: திமுகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?
ஜி. ராமகிருஷ்ணன்: இன்று எடுத்துள்ள முடிவை அறிவித்துள்ளோம். இத்துடன் பேட்டி முடிந்தது.
ஜி.ராமகிருஷணன் மனசாட்சி: இப்பதான் அம்மா கூரூப் மூத்திர சந்துல போட்டு சாத்துனாங்க. அந்த வலி போறதுக்குள்ள அய்யா கூரூப்பு ஆய் போற சந்துல அடிக்கிற கதை வேணும்னு கேட்டா எப்படி, விடுங்க சார்.
டி.கே. ரங்கராஜன்: அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் அறிவிக்கும் வரை பத்திரிகையாளர்கள் தங்களது கற்பனை வளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
டி.கே.ரங்கராஜன் மனசாட்சி: ஏதோ அம்மா புண்ணியத்துல ராஜ்ஜிய சபா எம்பியா இருக்கேன். அதான் கட்சி சோகத்துல இருந்தாலும் நான் கொஞ்சம் ஜாலியா பேசறேன், தப்பா எடுத்துக்காதீங்க பிரதர்.
_____________________
செய்தி: திமுகவிடம் இருந்து அழைப்பு வந்ததா என்று கேட்ட போது, “இதுவரை அப்படி எந்தத் தகவலும் வந்ததாகத் தெரியவில்லை. வெள்ளிக்கிழமை (மார்ச் 7) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான எங்களது கலந்தாலோசனைக்குப் பிறகுதான் எந்தவிதமான முடிவையும் எடுக்க உத்தேசித்திருக்கிறோம். மிதப்பதாக இருந்தாலும் மூழ்குவதாக இருந்தாலும் இடதுசாரிகள் ஒன்றாகவே இருப்பது என்பதில் தீர்மானமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே. ரங்கராஜன்.
டி.கே.ரங்கராஜன் மனசாட்சி: நாங்க ஒண்ணா ஏன் சாகணும்னு சொல்றேன்னா, அண்ணன் தாபா ஏதும் அம்மாகிட்ட சீக்ரெட்டா டீல் போட்டுட்டு எங்களை சுத்த வுடுவார். இரண்டாவதா அம்மா ஒரு சீட்டுன்னா அய்யா ரொம்ப பெரிய மனசு பண்ணி அரை சீட்டுதான்னு சொல்லிட்டாருன்னா என்ன பண்றது. அதான் கட்சி வேறுபாடு இல்லாம ஒண்ணா மருந்து குடிக்கலாம்ணு இருக்கோம்.
_____________________
செய்தி: ‘முதல்வரை யாரோ சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள். எங்களுக்கு மிகப் பெரிய வாக்கு வங்கி இல்லாமல் இருக்கலாம். ஆனால், இடதுசாரிகள் தான் ஒரு அணிக்கு கௌரவமும் வலிமையும் சேர்க்கிறார்கள் என்பதுதான் அனுபவபூர்வ உண்மை’ என்றார் டி.கே.ரங்கராஜன்.
டி.கே.ரங்கராஜன் மனசாட்சி: இப்பவும் அம்மா எனக்கு பிச்சை போட்ட ராஜ்ஜிய சபா சீட்டுக்கு நன்றி விசுவாசத்தோடதான் இருக்கேன். கத்தியாலும் குத்துனாக்கூட அம்மாவப் பத்தி தப்பா பேசமாட்டேன். கல்யாண வூட்டு விருந்துல டாப்பா லைட் மியூசிக் போடற பார்ட்டி நாங்கதான், அந்த அருமை அம்மாவுக்கு தெரியலையே! வினவு.com 

கருத்துகள் இல்லை: