திங்கள், 3 மார்ச், 2014

2ஜி வழக்கு: கனிமொழி, ராசாவிடம் ஏப்ரல் 4-ல் சாட்சியம் பதிவு

2ஜி வழக்கில், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் சில கார்ப்பரேட் தொழிலதிபர்கள் அகியோரிடம் ஏப்ரல் 4-ல் சாட்சியம் பதிவு செய்யப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னதாக இன்று (திங்கள் கிழமை) சாட்சியம் பதிவு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை தயாரிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், பாதி அளவிலேயே இந்தப் பணி முடிந்துள்ளதாலும் சாட்சியம் பதிவு செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சயினி தெரிவித்துள்ளார்.
மேலும், ஏப்ரல் 4-ஆம் தேதிக்குள் கேள்விகள் தயாரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் கொடுக்கப்படும் என்றும் கேள்விகள் அளிக்கப்பட்ட ஒருவார காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எழுத்துபூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்றும் ஓ.பி.சயினி தெரிவித்தார்.
கேள்விகளை வடிவமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரை மணி நேரத்தில் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தெளிவாக அமைக்கப்பட்டு வருவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சிகளிடம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 27-ஆம் தேதி அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை: