செவ்வாய், 4 மார்ச், 2014

ஜோதிடர்கள் கையில் கம்யூனிஸ்ட்களுக்கான 'சீட்'மங்களகரமாக துவங்கியது தேர்தல் பிரசாரம்:

அ.தி.மு.க.,வை பொறுத்த வரையில், எல்லாமே ஜோதிடம் மற்றும் சாஸ்திரப்படிதான் நடக்கும். அந்த வகையில், லோக்சபா தேர்தலுக்காக, நேற்றிலிருந்து, முதல்வர் ஜெயலலிதா, பிரசாரத்தை துவங்கி இருப்பது, ஜோதிடர்களின் அறிவுரைப்படியே.
காஞ்சிபுரத்தில், நேற்று மாலை, தேர்தல் பிரசாரத்தை துவங்கினார், ஜெயலலிதா. இதற்காக அவர், ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரத்துக்குச் சென்றார். காஞ்சிபுரத்தில், தேர்தல் பிரசாரம் துவங்கிய அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டிருக்கும், அனைத்து அ.தி.மு.க., வேட்பாளர்களும், ஆங்காங்கே இருக்கும், லோக்கல் தலைவர்களை அழைத்து, தேர்தல் பிரசாரத்தை துவக்கினர். முன்னதாக, கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து, அனைத்து வேட்பாளர்களுக்கும், தேர்தல் பிரசாரம் தொடர்பாக, சில ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதாவது, மார்ச் 3ம் தேதி, மாலை 3:32 மணிக்கு, சரியாக பிரசாரத்தை துவங்க வேண்டும். வேட்பாளர் பிரசாரத்தை துவங்கும்போது, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்ல வேண்டும்.
வேட்பாளரோடு, மங்களகரமான சுமங்கலிப் பெண் ஒருவர், வேட்பாளர் அருகில் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு கோவில் பக்கத்தில் இருந்து, பிரசாரத்தை துவங்க வேண்டும். இப்படி மேலிடம் தெரிவித்த ஆலோசனைப்படியே, தமிழகம் முழுவதும், அனைத்து, அ.தி.மு.க., வேட்பாளர்களும் பிரசாரம் துவங்கி உள்ளனர்.

இதுதொடர்பாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த சில மாதங்களாக, பல பிரபல ஜோதிடர்களிடம், தேர்தலுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என கேட்டு, அதன்படி தான் செய்து வருகிறார். தேர்தல் அறிக்கையில், என்னென்ன விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்பது உட்பட, எத்தனையாவது அயிட்டமாக, எந்த விஷயம் இடம்பெற வேண்டும் என்பது உட்பட, எல்லாமே ஜோதிடர்கள் அறிவுரைப்படி தான் நடக்கிறது. தமிழகம் முழுவதும், மாலை 3:32 மணிக்கு, பிரசாரத்தை வேட்பாளர்கள் துவங்கியிருக்க, முதல்வர் மட்டும், கொஞ்சம் கால தாமதமாக, காஞ்சிபுரத்தில் பிரசாரத்தை துவங்கியது கூட, ஜோதிடர்கள் அறிவுரைப்படி தான். கூட்டணிக் கட்சிகளாக கம்யூனிஸ்ட்கள் இருந்தும், அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்காமல், 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்ததும் கூட, ஜோதிடர்களின் அறிவுரை தான். ஜோதிடர்கள் நினைத்து, 'அம்மா, கம்யூனிஸ்ட்களுக்கு 'சீட்' கொடுக்காதீங்கம்மா' என, சொல்லிவிட்டால், அவர்களுக்கு நிச்சயம் 'சீட்' இருக்காது. ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில், அவர் நாற்பதிலும் ஜெயித்தால், நிச்சயம் பிரதமர் ஆகிவிட முடியும் என, நம்புகிறார். அதற்காக, ஜோதிடர்கள் என்ன சொன்னாலும் கேட்பார். கட்சியினரையும் கேட்க வைப்பார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இப்படியெல்லாம் பரவியிருக்கும் செய்தி, கம்யூனிஸ்ட்களையும் சென்றடைய, அவர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதுகுறித்து, கம்யூனிஸ்ட் வட்டாரங்களில் கேட்டபோது, 'அ.தி.மு.க.,வைப் பொறுத்த வரையில், இப்படிப்பட்ட பல கூத்துக்களை, சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்பது நாங்கள் எதிர்பார்த்ததே. அதற்காக, ஜோதிடர்கள் அறிவுரைப்படி, எங்களுக்கு, 'சீட்' ஒதுக்குப்படுவது தாமதமாகிறது என்பதை, எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும், கொஞ்ச நாட்கள், நாங்கள் அமைதியாக இருந்துதான் ஆக வேண்டும். எப்படியும், முதல்வர் எங்களுக்கு உரிய மரியாதையும், கேட்ட 'சீட்'களையும் கொடுத்து, எங்களை கவுரவமாக நடத்துவார்' என்றனர்.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: