செவ்வாய், 5 நவம்பர், 2013

போதையில் கார் ஒட்டி மூவரை கொன்ற மாணவனுக்கு கொலைக்கு இணையான பிரிவில் வழக்கு தாக்கல்


சென்னை : புதுவை வில்லியனூரை சேர்ந்தவர் அன்பு. வில்லியனூரில் கன்ஸ்ட்ரக்ஸன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் ஆதி லட்சுமி. அவருக்கும், சஞ்சய் என்பவருக்கும் திருமணமாகி அடையாறில் வசித்து வந்தனர். இவர்களது வீட்டில் அன்புவின் கடைசி மகன் அன்பு சூர்யா(21) தங்கி, லயோலா கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறில் நண்பர்களுடன் சென்று மது அருந்துவது வழக்கம்.அன்பு சூரியாவின் நண்பர்களும் ஃபோக்ஸ்வேகன் காரில் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவு 11 மணி வரை மது அருந்தியுள்ளனர். பின் அதிகாலை 3 மணி வரை அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். பின், பெசன்ட்நகர் செல்வதற்காக மெரினா கடற்கரை வழியாக சென்றனர். கலங்கரை விளக்கம் அருகே மின்னல் வேகத்தில் கார் தாறுமாறாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் மோதி போலீஸ் ஏட்டு சேகர், மீன் வியாபாரி திலகவதி மற்றும் அர்ஜுனன் என்ற வாலிபர் மீது மோதியது. இதில் 3 பேரும் உயிரிழந்தனர்.


காரில் அன்பு சூரியா, அவரது நண்பர் கிரீஷ், அன்பு சூரியாவின் அக்கா ஆதிலட்சுமி இருந்தனர். கிரீஷ் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் பார் பொறுப்பாளராக உள்ளார். இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் திரண்டனர். இவர்கள் விபத்து ஏற்படுத்திய மற்றொரு காரில் வாலிபர் ஒருவர் இருந்தார். அவர்தான் விபத்து ஏற்படுத்தியதாக தவறாக நினைத்த பொதுமக்கள் அவரை அடித்து, உதைத்தனர். பின் அன்பு சூரியாதான் விபத்து ஏற்படுத்தினார் என்பதை தெரிந்துகொண்ட மக்கள் அவரையும் அடித்து உதைத்தனர். கிரீஷ் காயத்துடன் கும்பலிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காயம் அடைந்த அன்பு சூர்யா, ஆதிலட்சுமி ஆகியோர் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கார் ஓட்டிய அன்பு சூர்யா மீது கொலை வழக்குக்கு இணையான கடுமையான சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 279(அதிக வேகமாகவும், தாறுமாறாகவும் காரை ஓட்டுதல்), 337 (காயம் ஏற்படுத்துதல்), 304 (2) (கொலை குற்றத்துக்கு இணையான குற்றம் செய்தல்),

மோட்டார் வாகனச் சட்டம் 185 (குடிபோதையில் கார் ஓட்டுதல்), 188 (குடிபோதையில் கார் ஓட்டுவது தெரிந்தும் காரில் அமர்ந்திருத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மருத்துவமனையில் இருந்த அன்பு சூரியா, ஆதிலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிகிச்சை முடிந்த பிறகு, புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

விபத்து தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் தம்புசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். எழும்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேபோல் கார் விபத்து ஒன்று நடந்தது. அதில், ஒரு சிறுவன் உயிரிழந்தான். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அப்போது காரை ஓட்டிச் சென்ற தொழில் அதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு பதிலாக வேறு ஒருவரை போலீசார் கைது செய்து கணக்கு காட்டினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தீபாவளியன்று மெரினாவில் நடந்த விபத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். dinakaran.com

கருத்துகள் இல்லை: