செவ்வாய், 5 நவம்பர், 2013

கல்வியை வணிகமயமாக்கும் மத்திய அரசின் “ராஷ்டீரிய ஆதர்ஷ் வித்தியாலயா

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழகத்திலே பள்ளிக் கல்வியை வணிகமயமாக்கும் மத்திய அரசின் “ராஷ்டீரிய ஆதர்ஷ் வித்தியாலயா” திட்டத்தின்படி, மத்திய அரசும் தனியாரும் கூட்டு சேர்ந்து மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கிட முயற்சிப்பது மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் மற்றொரு முயற்சியாகும்.

தமிழ் நாட்டில் மாதிரிப் பள்ளிகளை, தனியாருடனான கூட்டு இல்லாமல், மாநில அரசே நேரடியாகக் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.


இந்த நிலையில் கல்வியில் பின்தங்கிய பகுதிகள் அல்லாத இடங்களில் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க விண்ணப்பம் செய்யுமாறு தனியாரைக் கோரும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டு, அதன்மீது முடிவெடுக்கப் போவதாகத் தெரிகிறது.

இதில் மாநில அரசு முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒப்புதலோ, ஆலோசனையோ இல்லாமல் மத்திய அரசே நேரடியாக “பி.பி.பி.” (பொதுத்துறை, தனியார் பங்களிப்பு) என்ற பெயரில் கல்வியில் தனியார் மயத்தை அனுமதிப்பது மிகவும் தவறான முன்மாதிரியாகிவிடும்.

இந்தப் பிரச்சினையில் தனியாருக்குப் பள்ளி நடத்த இடம் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணியை மாத்திரம் மாநில அரசுகள் கவனிக்கலாமாம். மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுகின்ற இப்படிப்பட்ட போக்கினை மாநில அரசு அனுமதிக்கவே கூடாது. இதற்குத் தமிழக அரசு உடனடியாக தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்” என்று 31-10-2013 அன்று எழுதியிருந்தேன்.

என்னுடைய இந்தக் கருத்திற்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த வேறு சில கட்சிகளின் தலைவர்கள், நான் தெரிவித்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் தமிழ்நாட்டில் மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்கள்.

மாநில அரசுகளின் அதிகாரத்தில் குறுக்கிடும் வகையிலும், கல்வியை தனியார் மயமாக்கும் வகையிலும் அமைந்துள்ள இத்திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இப்போது அறிவிக்கப் பட்டுள்ள 356 மாதிரிப் பள்ளிகளைத் தமிழக அரசே நடத்த வேண்டும்” என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுபற்றி முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில அரசு இதுவரை வாயே திறக்காமல் இருப்பது பெரும் புதிராக இருக்கிறது.

இனியாவது “மத்திய அரசு கொண்டு வர முனைகிற இந்த மாதிரிப் பள்ளிகளுக்குத் தமிழ்நாட்டிலே அனுமதி கொடுக்க மாட்டோம்; தேவையென்றால் அப்படிப்பட்ட பள்ளிகளை மாநில அரசின் சார்பில் நிறை வேற்றிட, மத்திய அரசு நிதி உதவி செய்யட்டும், தனியாரை வளர்த்து விடும் காரியத்தில் மத்திய அரசு ஈடுபட வேண்டாம்” என்று முறைப்படி தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்குத் தெரிவித்திட உடனே முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: